என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
- சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
- கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.
இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.
ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.






