என் மலர்
தேர்தல் செய்திகள்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் அம்மியில் மசாலா அரைப்பது, இளநீர் வெட்டுவது, தேநீர் விற்பது, மீன் விற்பது, காய்கறி விற்பது என வித்தியாசமான முறையில் ஆங்காங்கே சென்று மக்களிடையே நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பழனி சுற்றுவட்டார பகுதிக்கு சென்ற இவர் பாப்பம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்கள் மரக்கிளையில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தொட்டிலில் போட்டிருந்தனர்.
அங்கு சென்ற மன்சூர்அலிகான் குழந்தைகளுக்கு ஆரீராரோ என தாலாட்டு பாடினார். அப்போது வயலில் களை பறித்த பெண்கள் மன்சூர்அலிகானை பார்த்ததும் ஓடிவந்தனர். அவர்களிடம் மன்சூர்அலிகான் உங்கள் வாழ்வு வளம்பெற கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார். #LokSabhaElections2019 #MansoorAlikhan
கும்மிடிப்பூண்டி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.
அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.
மொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.

விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.
175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
மேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019
குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஜுனாகார்க் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் உணவுகளை பறித்து காங்கிரஸ் தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய 5 ஆண்டுகால ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? . மேலும் உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.
பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளை அழிக்கத்தான். ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளானது காங்கிரஸ் கட்சியினர் ஆவர். மேலும் ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மற்றும் கருங்குழி பேரூராட்சி, அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்களின் முக்கிய அடிப்படைத்தேவைகளை மீண்டும் வெற்றிபெற்றால் செய்து தருவதாக உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.
மதுராந்தகம் பகுதியில் எம்.ஜி.ஆர் வேடமணிந்த தொண்டருடன் வேட்பாளர் மரகதம்குமரவேல் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஒன்றிய செயலாளர் அப்பா துரை, நகரசெயலாளர் ரவி, கருங்குழி பழனி, மஞ்சுளா புருஷோத்தமன், அச்சரபாக்கம் மெய்யப்பன், சுப்பிரமணி, முருகதாஸ், பா.ம.க மாநில துணைசெயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க நிர்வாகிகள் செந்தமிழரசு, தயாளன், ருத்திரகோட்டி, பாலாஜி, த.மா.கா. ஆதிகேசவலு, பழனி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணியினர் சென்று ஆதரவு திரட்டினர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனி அல்லிநகரத்தில் உள்ள தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தேனி அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் கதிர்காமு அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் சசிகலா அணிக்கு தாவினார். இதனையடுத்து இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பெரியகுளம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக களத்தில் உள்ளார்.

அதன் பேரில் கதிர்காமு மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளிப்பதன் காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்தே தனக்கு உயிர் பாதுகாப்பு, மான பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கதிர்காமு தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த காட்சியில் இருப்பது டாக்டர் கதிர்காமுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து டாக்டர் கதிர்காமு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என் மீது அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் யாரையும் மிரட்டியதும் இல்லை. இது போன்ற ஒரு சம்பவமும் நடக்கவும் இல்லை. இருந்தபோதும் இந்த பொய் வழக்கை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார். #AMMK #Kathirkamu
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.
இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.
கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.

ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.
4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.
மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.
வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.
அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.
இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.
சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.
தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections
சங்கரன்கோவில்:
தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் தான். அதே நேரத்தில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தபோது சூலூர் தவிர மீதமுள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தேர்தல் கமிஷனிடம் முறையிட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
ஆனால் இடைத்தேர்தலை நடத்த விடாமல் அ.தி.மு.க. அரசு சூழ்ச்சி செய்தது. ஏனென்றால் தி.மு.க. அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் தமிழகத்தில் நமது ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதினர். இதனால் திட்டமிட்டு மத்திய அரசின் உதவியுடன் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்புடன் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. ஆனால் நாம் அதை விடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தேர்தல் நடத்த உத்தரவு பெற்று உள்ளோம். தற்போது சூலூரையும் சேர்த்து 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இது நமக்கு கிடைத்த வெற்றி.
இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டுக்கு சென்று விடுவார். அடுத்த நொடி தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் வீட்டுக்கு சென்று விடும். ஏனென்றால், தமிழகத்தில் தற்போது நமது அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நடைபெற உள்ள 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நமது எண்ணிக்கை 119 ஆக உயரும்.
தமிழகத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234. அதில் மெஜாரிட்டிக்கு தேவையானது 117 எம்.எல்.ஏ.க்கள் தான். நம்மிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் வந்ததும் நமது ஆட்சி அமையும். இந்த கணக்கு வந்து விடக்கூடாது என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். 40க்கு 40 முடிவாகும்போது 22க்கு 22ம் நாம்தான் வெற்றி பெறுகிறோம். ஆகவே நாம் தயாராக வேண்டும். ஆட்சியில் இருந்து போவதற்கு அவர்களும் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவின் பிரதமராக இளம் தலைவர் ராகுல்காந்தி வர இருக்கிறார். மோடி நான் ஏழைத்தாயின் மகன் என்று தற்போது கூறி வருகிறார். ஏழைத்தாயின் மகன் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்தி உள்ளார். சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்து விலைவாசியையும் உயர்த்தி விட்டார்.

தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் என விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆனால் எப்படியெல்லாம் ஆட்சி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது.
தென்காசி தொகுதியில் ஜி.எஸ்.டி.யால் பீடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பீடி கம்பெனிகள் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு 800 பீடிக்கான மூலப்பொருட்களையே கொடுக்கிறது. இதனால் பீடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பீடி மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும். எனவே தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #parliamentelection #edappadipalanisamy
விக்கிரவாண்டி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கு வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜன் தலைமையில் ஏட்டுகள் துரைவேந்தன், பாலமுருகன், சத்யபிரியா ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 890 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் விக்கிரவாண்டி செ.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (வயது 26) தனியார் பைனான்ஸ் கம்பெனி பிரதிநிதியாக இருப்பது தெரியவந்தது.
அவரிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லை.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 15 லட்சத்து 90 ஆயிரத்து 890 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம், தாசில்தார் சுந்தர்ராஜன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
பின்னர் விழுப்புரம் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019
கோவில்பட்டி:
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ஜனதா அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெரு வணிக நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை மத்திய பா.ஜனதா அரசு வழங்கி விட்டு, பின்னர் அதனை வாராக்கடனாக தள்ளுபடி செய்கிறது. இதேபோன்று அந்த நிறுவனங்களுக்கு சாதகமாகவே ரபேல் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பல ஆயிரம் கோடி மதிப்பில் வழங்குகிறது. மாறாக விவசாயிகள், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். எனவே பா.ஜனதா அரசு தோற்கடிக்கப்பட வேண்டும், மாற்று அரசு உருவாக வேண்டும்.
மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு தற்போது அதன் தேர்தல் அறிக்கையில் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. அதேபோன்று பா.ஜனதாவுடன் இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் பல ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த 2 அரசுகளும் அகற்றப்பட வேண்டும்.
பா.ஜனதா அரசில் பசுகாவலர்கள், கலாசார காவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மத வெறியை தூண்டி விட்டு, நாட்டின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றனர். மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, மதவெறி, வகுப்புவாதம் பிடித்த பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.
மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைப்புகளும் சீரழிக்கப்பட்டு உள்ளன. எனவே பா.ஜனதாவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய பிரச்சினைகளை பா.ஜனதா அரசு எழுப்பி வருகிறது. நமது நாட்டில் யாரும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிக்க வில்லை.
ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் 200 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் ஏராளமான படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாமல், மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. எனவே புதிய மதசார்பற்ற அரசு அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். திருவண்ணாமலை டவுன் அணைகட்டி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரிதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாகப்பன் வீடு, அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.59 லட்சத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்தனர். பணத்தை கைபற்றி நாகப்பனிடம் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.

ரூ.59 லட்சம் எப்படி வந்தது. தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் ரோட்டில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.
இங்கு நேற்று மாலை 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வணிக வளாகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனை முடிந்தது.
இதில் கணக்கில் வராத ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் யாருடையது, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid
தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர், கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு சேலம் திரும்பினார்.

இந்த சந்திப்பின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் எல்.கே.சுதீஸ் மற்றும் இவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். #LoksabhaElections2019 #Edappadipalaniswami #PreamalathaVijayakanth
வேலூர்:
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேசுக்கு ஆதரவாக வேலூர் மண்டித்தெருவில் நேற்று இரவு பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கமல்ஹாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன். 4 வயது முதல் என்னை தோளிலும், மார்பிலும் சுமந்தது தமிழகம். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் கூட்டம் முடிந்த பின்னர் அப்பகுதியை தொண்டர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதேபோன்று தமிழகத்தையும் சுத்தம் செய்வோம். நாங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி வைத்திருக்கின்றோம். இளைஞர்கள், படித்தவர்கள் உங்களுக்காக உழைக்க தயாராகி விட்டார்கள்.
பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. பழையன கழிந்தே ஆகும், புதியன புகுந்தே ஆகும். அதேபோல் தமிழகத்தில் பழைய அரசியலும் ஒழியும். புதிய அரசியல் உருவாகும். காடுகளில் தீப்பிடித்தால் அதனை இயற்கை பார்த்து கொள்ளும் என்று சொல்லும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை. ஆபத்து நம்மை நோக்கி வருவதற்கு முன்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகில் தண்ணீர் இல்லாமல் தவிக்க போகும் நகரங்களில் பெங்களூரு 2-வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற நிலை வேலூருக்கோ, தமிழகத்துக்கோ வரக்கூடாது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
எங்கள் வேட்பாளரை வெற்றிபெறச்செய்தால் விவசாயிகள், சிறுவியாபாரிகள், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை ஒழித்து காட்டுவோம்.
உங்களின் பணத்தை உங்களுக்கே இலவசம் என்ற பெயரில் தருவது இனிமேல் நடக்காது. 5 ஆண்டு வாழ்க்கையை பொதுமக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்காக விற்று விடாதீர்கள். மக்கள் நீதி மய்யம் அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கும். ஏழைகளை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது.
ஒரேநாளில் எதுவும் நடக்காது தான். ஆனால் அதற்கான விதையை நாங்கள் விதைத்து விட்டோம். நாற்காலியின் நுனியில் உட்காராமல் உங்களுக்கான தேவைகளை கேட்டு வாங்கி வருவார்கள் எங்கள் வேட்பாளர்கள். நான் தேர்தலில் போட்டியிடாததால் பயந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். நான் பயப்படுபவனாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய இலக்கு தமிழகம் தான். அரசியல் என் தொழில் அல்ல. நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. இனி என் எஞ்சிய காலம் தமிழக மக்களுக்காக தான்.
சாராயத்தை உன்னதமான தொழிலாக எண்ணி அரசு அதனை நடத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் கண்ட கனவுபோல் நாங்களும் கனவு காண துணிவோம். நமது சொத்தையே நமக்கு இலவசம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தருகிறார்கள். நோட்டாவிற்கு ஓட்டு போடாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். காவல்துறையை தங்கள் கடமையை செய்ய விட்டால் நிமிர்ந்து நிற்பார்கள். அரசியல்வாதிகள் காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மக்களின் ஏவல்துறையாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical






