search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

    தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    சங்கரன்கோவில்:

    தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் தான். அதே நேரத்தில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தபோது சூலூர் தவிர மீதமுள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

    ஆனால் இடைத்தேர்தலை நடத்த விடாமல் அ.தி.மு.க. அரசு சூழ்ச்சி செய்தது. ஏனென்றால் தி.மு.க. அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் தமிழகத்தில் நமது ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதினர். இதனால் திட்டமிட்டு மத்திய அரசின் உதவியுடன் தேர்தல் கமி‌ஷனின் ஒத்துழைப்புடன் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. ஆனால் நாம் அதை விடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தேர்தல் நடத்த உத்தரவு பெற்று உள்ளோம். தற்போது சூலூரையும் சேர்த்து 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இது நமக்கு கிடைத்த வெற்றி.

    இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டுக்கு சென்று விடுவார். அடுத்த நொடி தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் வீட்டுக்கு சென்று விடும். ஏனென்றால், தமிழகத்தில் தற்போது நமது அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நடைபெற உள்ள 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நமது எண்ணிக்கை 119 ஆக உயரும்.

    தமிழகத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234. அதில் மெஜாரிட்டிக்கு தேவையானது 117 எம்.எல்.ஏ.க்கள் தான். நம்மிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் வந்ததும் நமது ஆட்சி அமையும். இந்த கணக்கு வந்து விடக்கூடாது என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். 40க்கு 40 முடிவாகும்போது 22க்கு 22ம் நாம்தான் வெற்றி பெறுகிறோம். ஆகவே நாம் தயாராக வேண்டும். ஆட்சியில் இருந்து போவதற்கு அவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    இந்தியாவின் பிரதமராக இளம் தலைவர் ராகுல்காந்தி வர இருக்கிறார். மோடி நான் ஏழைத்தாயின் மகன் என்று தற்போது கூறி வருகிறார். ஏழைத்தாயின் மகன் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்தி உள்ளார். சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்து விலைவாசியையும் உயர்த்தி விட்டார்.


    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் என விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆனால் எப்படியெல்லாம் ஆட்சி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது.

    தென்காசி தொகுதியில் ஜி.எஸ்.டி.யால் பீடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பீடி கம்பெனிகள் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு 800 பீடிக்கான மூலப்பொருட்களையே கொடுக்கிறது. இதனால் பீடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பீடி மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும். எனவே தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    Next Story
    ×