என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #dinakaran #edappadipalanisamy #opanneerselvam

    முதுகுளத்தூர்:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    மத்திய பா.ஜனதா அரசின் சொல் பேச்சை கிளி பிள்ளையாக கேட்கும் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராடிய ஓ.பி.எஸ். சுய நலமாக செயல்படுகிறார்.

    அ.தி.மு.க. அரசு மக்களை வஞ்சித்து வருவதால், அக்கட்சி டெபாசிட் இழக்க வாக்காளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அ.ம.மு.க. வினருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதை அ.தி.மு.க.வால் ஜீரணிக்க முடிய வில்லை.

    மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியினர் இந்த தேர்தலோடு காணாமல் போய் விடுவார்கள்.


    ஆர்.கே.நகர் போன்று தற்போதைய தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டி, டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

    ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லாமல், அவரை மறந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் நம் பக்கம் வந்து விடுவார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர், நம்மை பார்த்து சுயேட்சை என்கின்றனர். ஆர்.கே.நகரில் இந்த சுயேச்சையிடம் தான் தி.மு.க. டெபாசிட் இழந்தது என்பது மறந்து போய் விட்டதா?

    எனக்கு தெரிந்து நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து, ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை. பல தடவை மத்திய மந்திரியாக இருந்த அவர், சிவகங்கை தொகுதிக்கு எந்த வளர்ச்சியும் கொடுக்க வில்லை.

    தி.மு.க. கூட்டணி மத சார்பற்ற கூட்டணி என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கி.வீரமணி, கிருஷ்ணரை பற்றி விமர்சிக்கிறார். தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

    மோடியிடம் தலை வணங்காத ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தான். இரட்டை இலை சின்னம் துரோகம் செய்தவர்கள் கையில் சிக்கி இருப்பதால், எம்.ஜி.ஆர். தொகுதியில் கூட இரட்டை இலையை தோற்கடிக்கும் நிலை வந்துள்ளது.

    நாம் அனைவருக்கும் காவலராகவும், தோழராகவும் இருப்போம். பொது நல அமைப்பாக செயல்படுவோம். யாரோடும் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் யுத்தத்தில் பிரதமர் மோடி எங்கள் கிருஷ்ணர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    சிவகாசி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டது எங்கள் கூட்டணி. நாங்கள் பள்ளி வாசலில் தொழுகை நடத்துவோம். தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வோம். அனைத்து கோவில்களில் சாமியும் கும்பிடுவோம்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர் தலைமையில் அவரது ஆலோசனைப்படி பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல நாங்களும் வெற்றி பெறுவோம். தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர். அர்ஜுணனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.


    8 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள் எதிர்த்தால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த திட்டத்தை கைவிடலாம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வார்.

    மோடி வாயால் வடை சுடுவார் என மு.க. ஸ்டாலின் எழுதி வைத்து பேசுகிறார். மோடி வடை சுட்டால் அனைவருக்கும் பயன்படும். தி.மு.க.வினர் சூடான எண்ணையை மக்கள் மீது ஊற்றி விடுவார்கள். சாப்பிட்ட வடை, புரோட்டாவுக்கு காசு கேட்டால் முகத்தில் குத்துகிறார்கள். பெண்களிடமே மாமூல் கேட்கும் கட்சி தி.மு.க.

    கிருஷ்ணரை கேவலப்படுத்தும் வீரமணியை வைத்துக் கொண்டு திருநீறு பூசுவது போல் நாடகம் போட்டு ஓட்டு வாங்க அலைகின்றனர். தி.மு.க.வினர் வீரமணி பேச்சை திசை திருப்பு வதற்காக நாடகம் நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    இட்டாவா தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரான ராம்சங்கர் கதேரியாவை எதிர்த்து அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #EtawahConstituency
    இட்டாவா:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் ராம்சங்கர் கதேரியா கடந்த முறை ஆக்ரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். வரும் தேர்தலில் அவர் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தாழ்த்தப்பட்டோர் தேசிய கமி‌‌ஷன் தலைவராகவும் உள்ளார்.



    இந்நிலையில் அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக கணவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இட்டாவா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முறையும் எனக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. என் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட சுயேச்சையாக களம் இறங்கி உள்ளேன் என்றார்.

    இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி. அசோக் டேக்ரே, தனக்கு மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EtawahConstituency

    மக்களவவைத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். #RahulGandhi
    17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

    இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தை மேற்கொள்கிறார். இதையடுத்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.



    ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

    இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 6-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019

    மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி என்று தேர்தல் பிரசாரத்தில் வைகோ பேசினார். #vaiko #rahulgandhi

    ஈரோடு:

    ஈரோடு தொகுதிக்குட்பட்ட வெள்ளோட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் விளை நிலங்களில் உயர் மின் அழுத்த மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசு பெருநிறுவனங்களின் ஆதரவு அரசாக உள்ளது. விவசாய கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனச்சொல்லும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் 2.42 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது. அவர்களுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்குகிறது. ஜிஎஸ்டி அமலாகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்ன பிரதமர் மோடி, 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. ரூ.50 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்திய மக்கள் இப்போது ரூ.300 செலுத்த வேண்டியுள்ளது. ரூ.450 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000 மாக உயர்ந்து விட்டது.

    எனவே மத்தியில் நடைபெறும் மக்கள்விரோத, தமிழ்நாட்டுக்கு விரோதமான அரசினை அகற்ற வேண்டும். தேர்தலுக்குப் பின், மாநில உரிமைகளை மீட்கும் வகையில், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் இது உறுதி. நீட் தேர்வினால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாகிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்து உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுலும் நீட் தேர்வை ரத்து செய்வோம், பறிக்கப்பட்ட கல்வி உரிமை மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வஞ்சக திட்டங்களை தடுக்க முடியாத அளவுக்கு ஊழல் புதைகுழியில் தமிழக அரசு சிக்கியுள்ளது. தமிழக அரசு பேரம் நடத்தியதால் பல தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டன.

    நாங்கள் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்களையும், அவர்கள் உணர்வுகளையும் மதிக்கிறோம். அதே நேரத்தில் சமய நல்லிணக்கத்திற்கு வெடிவைக்க முயற்சிக்கின்றன. புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு வேதனையைத் தருகிறது. மீண்டும் மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமையுமானால், சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும். கற்பனை செய்ய முடியாத பாசிச ஏதேச்சதிகார ஆட்சி அமைந்து விடும்.

    இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #rahulgandhi

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சென்னை:

    தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

    மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    ஒரு அரசாங்கத்தின் பிடி மேலிடத்தில் உள்ள பலரது கைகளில் சிக்காமல் மக்களை மட்டுமே எஜமானர்களாக கொண்ட வலிமையான பிரதமர் நாட்டுக்கு தேவை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #strongPM #highcommand #Modi
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது நாட்டின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியபோது உலக நாடுகள் நமக்கு துணையாக நின்றன. ஆனால், ’மெகா கூட்டணி’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் மட்டும் என்னை தாக்கிப் பேசின என மோடி வருத்தம் தெரிவித்தார்.



    இதைப்போன்ற பெரிய கூட்டணிகளை கொண்ட அரசு இந்த நாட்டுக்கு தேவையில்லை. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் அரசின் அதிகாரம் மேலிடத்தில் உள்ள பலரின் கைகளின் சிக்கிக் கொள்ளும். பலரின் கைகளில் சிக்கி ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் நடக்கும் அரசாங்கம் வேண்டுமா?

    அல்லது, மக்களை மட்டுமே எஜமானர்களாக கொண்டு பலமான பிரதமரின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டுமா? என இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #strongPM #highcommand #Modi
    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜிகே வாசன் பேசியுள்ளார். #gkvasan #bjpmanifesto

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணி ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகள் கூட்டணியாக இருந்தால், மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உறுதியாக கிடைக்கும்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது சுகாதார துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வந்தார்.

    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் 60 வயது பூர்த்தி அடையும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #gkvasan #bjpmanifesto

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    மணவெளி தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், எடையார்பாளையம், தவளகுப்பாம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், அபிஷேகப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இலவச அரிசி, முதியார் பென்‌ஷன், சென்டாக் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மக்கள் மீது அக்கறையும், பரிவும் கொண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி.

    இந்தியாவை மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி ஆட்சி செய்ய அனுமதித்தால் அனைவரும் அடிமையாகி விடுவோம். என்ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும்படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான். எனவே அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #LokSabhaElections2019 #RajnathSingh #BJPManifesto2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். பெரும்பான்மை இல்லையெனில் நானோ, நிதின் கட்காரியோ பிரதமர் ஆவோம் என கூறுவது கற்பனையே.

    ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சாதி, மதம் மற்றும் சமயத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது. இந்து, முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. 

    2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ‘பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி ராஜ்நாத் சிங்கிடம் கேட்டபோது, ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh  #BJPManifesto2019
    கலவரம், கொலைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்நானம் பெற்றிருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராய்கஞ்ச்  பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் ஆவார். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயல்பாடுகளை கண்டு தற்கொலை செய்திருப்பார்.   மோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால், பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இல்லை.

    ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயல்படுவோம்.   

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் திரும்பிய மன்சூர்அலிகான் மீண்டும் தனது வழக்கமான பாணியில் பிரசாரம் செய்தார். #MansoorAliKhan
    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதனமான முறையில் பிரசாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து வாக்குசேரித்து வருகிறார். இது பெரும்பாலான பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சி தொண்டர்கள் மன்சூர்அலிகானை ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் தனது பழைய பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

    பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர்அலிகான் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடை பார்த்து விலை நிலவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களை கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார்.

    மீனை அதன் செதில்களை சீவி சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றி பொதுமக்களிடம் கொடுத்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை வழங்கினார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன் என்று கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். #MansoorAliKhan
    ×