என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், திருவள்ளூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஒன்றிய விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ இரா.மணிமாறன், ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, உள்பட புரட்சிபாரதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

    8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இது அரசுக்கு பின்னடைவு கிடையாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும்.

    தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். எனவே அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி யாரும் பாதிக்காத அளவுக்கு முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

    கருத்து கணிப்பை தாண்டி மக்களின் கணிப்பு அ.தி.மு.க. தான். டெல்லியில் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, வி‌ஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடி ஆகி விடும்.

    எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்து தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படிக்கிறார். சட்டசபையிலும் எழுதி வைத்து தான்பேசுவார்.

    கலைஞரிடம் இருந்த திறமை மு.க.ஸ்டாலினிடம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் ஆகி விட்டார்.

    மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி. தினகரனுக்கு துளியும் இல்லை. அவர் பணம், பணம் என்று தான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை.

    ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டத்தை நடத்தி கூட்டம் கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று முதல்-அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா?

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் டி-சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம், ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா?

    ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். இது நடக்கவே நடக்காது.

    40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டசபை இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

    தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், திருமங்கலம், தேனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். #RahulGandhi
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் முதற்கட்ட பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினார்கள்.

    இருவரும் கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார்கள். மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ராகுலும் தமிழகம் வருகிறார்கள்.

    ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் காலையில் கிரு‌ஷ்ணகிரி வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர்கள் செல்லக்குமார் மற்றும் ஓசூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் செல்கிறார். அங்கு தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருமங்கலம் செல்கிறார். அங்கு மதுரை கம்யூனிஸ்டு வேட்பாளர், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர், சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    பின்னர் அங்கிருந்து தேனி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழக தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேரளா செல்கிறார்.

    தேனியில் ராகுல் பிரசார கூட்டம் நடத்துவதற்காக பெரியகுளம் பைபாஸ் சாலையில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை சரி செய்து மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் தயாராகி வருகிறது. #RahulGandhi
    தென் சென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரித்தார். #PChidambaram #LokSabhaElections2019

    சென்னை:

    தென் சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சைதாப்பேட்டை குயவர் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

    ’’இந்த தொகுதியில் பேசுவது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த தொகுதியில் தமிழ் நிற்கிறது. இந்த தொகுதியில் நிற்பது தனி பெண்மணி அல்ல. தமிழ் அறிவு நிற்கிறது, தமிழ் ஆராய்ச்சியாளர் நிற்கிறார். இங்கே இந்த கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவது மாத்திரமல்ல, தமிழே வெற்றி பெறுகிறது. அவரை வெற்றிப் பெற செய்வது தமிழர்களின் கடமை.

    இக்கூட்டணி புதிய கூட்டணி அல்ல, 1971ம் ஆண்டு கலைஞரும், இந்திரா காந்தியும் இந்த கூட்டணியை முதன்முதலாக அமைத்தார்கள். இந்த கூட்டணி பாராளுமன்றத் தேர்தலுக்காக 5முறை அமைந்தது. ஐந்து முறை கூட்டணி அமைந்த போதும் கலைஞர் நம்மோடு இருந்தார். ஐந்து முறையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. இதுவரை இந்த கூட்டணி தோற்றதில்லை, வருகின்ற 2019 தேர்தலிலும் உங்களுடைய ஆதரவோடு வெற்றி பெறும்.

    இக்கூட்டணியை வெற்றிச் செய்வது கலைஞருக்கு செய்யும் மரியாதையாகும். இதை மனதில் வைத்து தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு. மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம் எம்.எல்.ஏ, தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சைதை மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்குமார், குணசேகர், சைதை அன்பரசன், ஸ்ரீதரன், காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் , தி.நகர் ஸ்ரீராம், சைதை முத்தமிழ், கோபிநாத்,திருவான்மியூர் சாந்தி,மலர்கொடி, சுசிலா கோபாலகிருஷ்ணன், மதிமுக சுப்ரமனியம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்ண்டர்கள் கலந்துகொண்டனர். #PChidambaram #LokSabhaElections2019

    இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம்குமரவேல் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வி.சோமசுந்தரம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது பேசிய வேட்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் நேரிடையாக கிராமமக்களுக்கு கிடைக்க முக்கிய பங்காற்றுவேன் என்றார். அவருடன் துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மஞ்சளாரவிக்குமார், ஆனூர் பக்தவச்சலம், விஜயரங்கன், அரிதாஸ், பா.ம.க. காரணை ராதா, முன்னாள் சேர்மன் வாசு,விவசாயபிரிவு மாம் பாக்கம்லட்சுமணன், கூட்டுறவு சங்கதலைவர் ரத்தினம், சாலூர் ஜானகிராமன், தேமுதிக, த.மா.கா, புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.  #LokSabhaElections2019 #ADMK

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்று ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா நேதாஜி நகர் மற்றும் காசிமேடு சி.ஜி. காலனி, ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர். வாங்கய்யா... வாங்க... மாற்றத்துக்காகத்தான் காத்திருக்கிறோம் என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

    30 ஆண்டுகளாக குடிநீருக்காக குடத்துடன் ரோட்டில் காத்துக்கிடக்கிறோம் என்று பெண்கள் முறையிட்டனர். அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்யுங்கள். இலவச குடிநீர் வீடு தேடி வரும் என்று மவுரியா உறுதி அளித்தார்.

    கொருக்குப்பேட்டை குப்பை மேட்டால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க மக்கள் நீதி மய்யம் புதிய திட்டம் வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குப்பை மேட்டால் மாசு பட்டுள்ள நிலத்தடி நீரை மாற்ற குப்பையில் இருந்து மின்சாரம், உரம் தயாரிக்கப்படும் குப்பைமேடு இருக்கும் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மையங்களை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மக்களின் மன மாற்றம் நிச்சயம் வெற்றியை தேடித்தரும் என்றும் மவுரியா தெரிவித்தார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam

    அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ADMK

    ராயபுரம்:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மற்றும் பெரம்பூர் சட்டமன்றதொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோரை ஆதரித்து கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஆகியோர் 36-வது வட்டம் முல்லை நகரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    கொடுங்கையூர் பள்ளிக் கூட சாலை அருகில் உள்ள காந்தி சிலை, எம்.ஆர்.நகர் மீன் மார்க்கெட், பாரதி நகர், சாஸ்திரி நகர், பி.வி.காலனி, எஸ்.ஆர்.பூக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது சரத்குமார் பேசியதாவது:-

    எதிர்கட்சிகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள், துணை போக வேண்டாம். மெகா கூட்டணி தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    அம்மா விட்டுச் சென்ற பணியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    லத்தூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    முதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது  பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.  சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.  

    ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது.  ஆனால்,  நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019

    சென்னை:

    பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அனைத்து சமூகத்தினர் பொதுநல அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கொடுங்கையூர் குப்பைமேடு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் நவீன தொழில் நுட்பத்தில் குப்பை மேட்டை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.

    பல மைல் துரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் குப்பைமேடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேம்படுத்த அனைத்து முயற்சிகலும் மேற்கொள்ளப்படும் என்றார். வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டிய வெற்றிவேலுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019

    நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். #LokSabhaElections2019 #Rajinikanth #BJPManifesto2019 #RiverLinkingProject
    புதுடெல்லி:

    சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். அந்த வகையில், தற்போது, நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.



    மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் இந்த திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடைபெற உள்ள தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, “எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதை ஏற்கனவே கூறிவிட்டேன். எனக்கும் கமலுக்குமான நட்பை கெடுத்துவிடாதீர்கள்” என்றார்.  #LokSabhaElections2019 #Rajinikanth #BJPManifesto2019 #RiverLinkingProject
    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #ElectionCommission #ITRaids
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின்  பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் ஆகியோர் தேர்தல் பிரசாரம், வேட்பு மனு தாக்கல் போன்ற பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.  இதேப்போல் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளிலும்,  நிறுவனங்களிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் குறித்து , தேர்தல் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, அமலாக்கத்துறையினை தவறாக பயன்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.




    இதையடுத்து வருவாய் செயலாளர் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஆகியோர், இந்த சோதனை குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வருவாய் செயலாளர் ஏபி பாண்டே மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோர் இந்த சோதனைகளின் முழு விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 281 கோடி பணம் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறையினர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission #ITRaids
    முகப்பேர்-கும்மிடிப்பூண்டியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஏ.டி.எம். பணம் ரூ. 3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    அம்பத்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கம் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேற்கு முகப்பேர் பகுதியில் தேர்தல் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வேனில் ரூ. 2 கோடியே 34 லட்சம் ரொக்கம் இருந்தது. அவை ஏ.டி.எம். எந்திரத்துக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணம் என்று அதில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்களிடம் பணத்துக்கான ஆவணம் இல்லை. இதையடுத்து ரூ. 2 கோடியே 34 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

     


    கும்மிடிப்பூண்டியை அடுத்த பொம்மாஜிகுளத்தில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கிச் சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் மூலம் ரூ. 80 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 80 லட்சத்தை பறிமுதல் செய்து கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு ரொக்கப்பணம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் நேற்று இரவு கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன், மற்றும் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்கமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த மினி வேனை மடக்கி சோதனை நடத்தினர் அதில் ரூ. 65 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்த போது தனியார் பால் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பதும் கடைகளில் வசூல் செய்யப்பட்ட மொத்த பணம் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ரூ. 65 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019

    ×