என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை புறந்தள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.#TTVDinakaran
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் புவனேசுவரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்செந்தூரில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிசாமியின் கம்பெனி ஆட்சியும் முடிவுக்கு வர வேண்டும். மதங்களைப் பற்றி பேசி, மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துவதில் பா.ஜனதாவுக்கு இணையாக தி.மு.க.வும் வந்து விட்டது. இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற நிலை தற்போது தி.மு.க.வுக்கு உள்ளது.

    எனவே, பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி இல்லை, எங்களது குடும்பத்தில் அனைவரும் கோவிலுக்கு செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, திருப்பதி வெங்கடாசலபதியை தவறாக பேசினார். ஆனால் அவரது தாயார், திருச்செந்தூரில் முருக பெருமானை சென்று வணங்கி வருகிறார். யாரை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம்?. எந்தவொரு மதத்தினரும், பிற மதத்தினரின் மனம் புண்படும் படியாக பேசுவதை ஏற்க மாட்டார்கள்.

    மாறாக தமிழகத்தின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி சிந்திக்காமல் உள்ளனர். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்றபோதும், ஏனோ கடமைக்கு ஒரு நாள் வந்து பார்த்து விட்டு இரவிலே சென்று விட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டபோதும் இது போன்றே ஏனோ தானோ என்று பார்த்து சென்றனர்.

    சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை அறிவித்தபோது, தி.மு.க.வும் இந்த திட்டத்தை ஆதரித்தது. ஏனென்றால் இது பா.ஜனதாவின் திட்டம். அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவில் தி.மு.க. இருந்ததால், சட்டமன்றத்தில்கூட எட்டு வழிச்சாலைக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்தனர்.



    பின்னர் அப்போது நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக ராகுல்காந்தியை பிரதமராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். எனவே தி.மு.க.விடம் நிலையான தன்மை இல்லை. அவர்கள் ஒருபோதும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மாறாக தாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றே சிந்திக்கின்றனர். மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை மக்கள் புறந்தள்ள வேண்டும். மதவாதத்தின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கின்ற பா.ஜனதா அரசுக்கும், அதன் அடிமையாக தமிழகத்தில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கும் முடிவு கட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக தம்பிதுரை எச்சரித்துள்ளார். #LokSabhaElections2019 #Thambidurai
    புதுக்கோட்டை:

    கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

    அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் நவம்பட்டியில் அளித்த பேட்டி வருமாறு:-



    எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு தொடருவேன். எனக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஸ்டாலின் விலக தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Thambidurai
    நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    என்னை பார்த்து என்ன சொல்வது என்று தி.மு.க.க்கு புரியவில்லை. என்னை பா.ஜனதாவின் ‘பி’ அணி என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பக்கத்து மாநிலத்தில் பினராயி விஜயனும் ‘பி’ அணி தான். இந்த கூட்டம் மாற்றத்திற்காகவும், அன்பிற்காகவும் என இரண்டும் வேண்டும் என்று வந்த கூட்டம். நானும் அப்படித்தான். தொடர்ச்சியாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக கோவையும், பொள்ளாச்சியும் மாறி வருவது வருத்தத்தை அளிக்கிறது. அதற்கு காரணம் மெத்தனமான அரசு தான். இத்தகைய கொடூரம் நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் என்று முதல்-அமைச்சர் இதுவரை சொல்லவில்லை. வருத்தம் சொல்லவேண்டிய உணர்வு கூட இல்லாதவராகத் தான் அவர் உள்ளார்.

    சூறையாடி கற்பழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன தண்டனை? தண்டனையை முடிவு செய்யும் நாள் ஏப்ரல் 18. நாங்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்.

    நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் வீட்டில் எல்லாம் மூட்டை, மூட்டையாக பணம் சிக்கி இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் என்னை விட பெரிய நடிகர்கள். எனக்கும் நடிக்க தெரியும். அதனால் என்னிடம் பலிக்காது. இனி தமிழக மக்களிடமும் அது பலிக்காது. நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டிக்கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும். அதை மாற்ற வேண்டியது எங்கள் கடமை. அப்படி செய்யும்போது தமிழகம் முன்னேற்றத்தை நகரும் தேராக இருக்க வேண்டும். அது நகரும். அதை நகர்த்த வேண்டியது உங்கள் பொறுப்பு.

    புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் சந்ததியினர் வாழாமல் இருக்க வேண்டும். காலத்தே பயிர் செய்ய வேண்டும். இது தான் அந்த காலம். அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று தாமதப்படுத்தி விடாதீர்கள். அதற்கு வழிவிடாமல் நல்ல எதிர்காலத்துக்கு உங்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #KamalHaasan #MakkalNeedhiMaiam

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை ஜீரோ (பூஜ்யம்) என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



    இந்த கருத்திற்கு மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே பறக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருண்ணன், “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை துரத்தி அடிக்கும் நிலை வரும் என தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். #Seeman
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழகத்தில் தனித்து மக்களை நம்பி போட்டியிடும் கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுக்கு என்று தனி பாதை, கொள்கை உண்டு.

    நாட்டில் மக்கள் இரவில் பசியோடு உறங்க மாட்டார்கள் என்று மோடி, ராகுல்காந்தி செல்வார்களா? ஆனால் அந்த உறுதியை நாம் தமிழர் கட்சியால் தான் தர முடியும். நாங்கள் ஏந்தும் புலிக்கொடி பரம்பரைக்கொடி. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது.

    ஆனால் இப்போது தேர்தலுக்காக ரூ.72 ஆயிரம் தருவோம், ரூ.6 ஆயிரம் தருவோம், தொழில் தொடங்க வட்டியில்லா கடன் தருவோம் என்கிறார்கள். நீங்கள் கொடுப்பது யாருடைய பணம்?. மக்கள் பணம் தான். அவர்கள் பணத்தை எடுத்து, அதில் பாதியை அவர்களிடமே கொடுப்பது சாதனையா?

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியுமா? அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எங்களால் தான் முடியும். ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை ஒழிப்பது தான் எங்கள் நோக்கம். ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை துரத்தி அடிக்கும் நிலை வரும்.

    தஞ்சையில் பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியை சீமான் கட்சியினருடன் முன்வரிசையில் அமர்ந்து பார்வையிட்டார்.

    சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி தான். தமிழகத்தின் கேடு கெட்ட அரசியலுக்கு காரணமே தி.மு.க. தான். தி.மு.க., பிரசவித்த கொடுமை தான் அ.தி.மு.க.. பா.ஜ.க.வை தமிழகத்திற்கு கொண்டு வந்தது தி.மு.க. தான். முதலில் தோளில் சுமந்தவர்கள் தற்போது காலூன்ற விடமாட்டோம் என்கிறார்கள்.

    கச்சத்தீவு, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் பா.ஜ.க., காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?. இவர்களுக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman
    அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும் என்றும், விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். #LokSabhaElections2019 #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார்.

    இதன் பின்னரே பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தது. நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்கு பிறகு அ.தி.மு.க-தே.மு.தி.க. இடையே கூட்டணி முடிவானது. 4 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    கூட்டணி இறுதியானவுடன் பிரேமலதா அளித்த பேட்டியில், விஜயகாந்த் விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கூறி இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னரும் அவர் இதே கருத்தை கூறி இருந்தார். இருப்பினும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு செல்வதற்கான எந்த அறிகுறிகளும் தேர்தல் களத்தில் காணப்படவில்லை.

    இந்த நிலையில் விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் விஜயகாந்த் அளித்துள்ள முதல் பேட்டி இதுவாகும்.

    அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி இதுவென்று கூறியுள்ளார். விஜயகாந்த் பேட்டி வருமாறு:-

    கேள்வி:- வணக்கம் கேப்டன். எப்படி இருக்கிறீர்கள்.

    பதில்:- நல்லா இருக்கேன் சார்.

    ப:- உடல்நிலையெல்லாம் நன்றாக இருக்கிறது.

    கே:- அமெரிக்கா சென்று வந்தபிறகு உடல்நிலையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?

    கே:- தமிழக மக்கள் அனைவருமே நீங்கள் பிரசாரத்துக்கு எப்போது வருவீர்கள்? என்ன பேசப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்?

    ப:- கூடிய விரைவில் வருவேன். அங்க வந்து பேசுவேன்.

    கே:- தொடர்ச்சியாக பிரசாரம் செய்வீர்களா?

    ப:- டாக்டர் அட்வைஸ்படி தான் அதுபற்றி சொல்ல முடியும்.

    கே:- அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணி எப்படி இருக்கிறது? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- அ.தி.மு.க. கூட்டணி தான் ஜெயிக்கும். தி.மு.க. கூட்டணி தோற்கும்.

    கே:- தி.மு.க. கூட்டணி தோற்கும் என்று ஏன் சொல்கிறீர்கள்?

    ப:- தி.மு.க. தில்லுமுல்லு கட்சி.

    கே:- அ.தி.மு.க - தி.மு.க. கூட்டணிக்கு இடையேயான போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கிற போட்டி. தர்மம்தான் ஜெயிக்கும். தர்மம்தான் ஜெயிக்கும் (2 முறை சொல்கிறார்).



    கே:- பிரதமர் மோடியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- நல்லவர். வல்லவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

    கே:- தே.மு.தி.க. தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    ப:- நன்றாக உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Vijayakanth

    திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருநெல்வேலி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் பாளையங்கோட்டை பகுதியில் பெல் திடலில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து  பேசியதாவது:



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.

    மத்தியில் ஆளும் பாஜக , திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  இந்து மதம் என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கலைஞர் ஆட்சியிலே எத்தனையோ வசதிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் அறநிலையத்துறைக்கும்,இந்து மதத்தினருக்கும் செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு ஓய்வூதியம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது, கோவில்களில் அதிக அளவில் குடமுழுக்கு நடத்தியது, கோவில்களில் இலவச திருமணங்கள் ஆகியன கழக ஆட்சியில் தான்.

    திமுக மீது அவதூறு பரப்புவதே பாஜகவின் செயல். திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.  திமுக பாஜகவை எதிர்ப்பதால், இந்து மதத்தை எதிர்ப்பது என்பது ஆகாது. மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய சில மணிநேரத்திலேயே, ஆளும் கட்சியின் ஆட்சி கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 
    ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். #DuraiMurugan #DMK

    ஆம்பூர்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஆம்பூரில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    வருமானவரித் துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்களின் ஒருவர் வீட்டிலும் இதுவரை சோதனை நடத்தவில்லை. எனது வீட்டில் நடந்த சோதனையில் என்னுடைய மகன் கதிர்ஆனந்தை சாப்பிட விடாமலும், கழிப்பறைக்கு கூட செல்ல விடாமலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதை பார்த்த என்னுடைய மனைவி நமக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவருக்கு இந்த எம்.பி. பதவியெல்லாம் வேண்டாம். அவரை விட்டு விடுங்கள் என்று கண்ணீர் வீட்டார். அந்த கண்ணீருக்கு அனைவரும் பதில் சொல்லியே தீர வேண்டும்.


    தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் இருவரும் பிரசாரம் செய்யட்டும், மக்கள் வாக்களிக்கட்டும், வெற்றி பெறுபவர் பாராளுமன்றம் செல்லட்டும். இது நியாயம். ஆனால் குத்து சண்டையில் ஒரு போட்டியாளரின் கையையும், காலையும் கட்டிப்போட்டு விட்டு அதன் மூலம்தான் வெற்றி பெற்றதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    அதுபோல எங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த செய்து, தேர்தல் பணிகளை முடக்கி விட்டு அதன் மூலம் தேர்தலில் வீழ்த்தி விட்டோம் என்று கூறுவது நியாயமாக இருக்காது. ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

    அதனால் இந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தலையும் என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர். எனது மகன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக பணியாற்றி தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார். #DuraiMurugan #DMK

    பா.ஜனதா திட்டங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளதால் அக்கட்சியை நம்ப முடியாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேவால்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொண்ட விஸ்வேஸ்வர ராவ் ரெட்டியை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ள அனைத்தையும் நிச்சயமாக செய்து முடிக்கும். எதார்த்தமாக நடைமுறையில் செய்து முடிக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் சொல்லி உள்ளது.

    இதற்கு முன்பும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் நேர்மையுடன் நடந்து கொள்கிறது. ஆனால் பா.ஜனதா மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது.

    பா.ஜனதாவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. பா.ஜனதா மேக் இண்டியா திட்டத்தை மிகவும் பிரபலப்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது.

    அதுபோல நிதி சீரமைப்புகளை பா.ஜனதா அறிவித்தது. இந்த திட்டங்களில் நிறைய முன்னேற்றம் வரும் என்று சொன்னது. ஆனால் நிதி சீரமைப்புகளும் தோல்வி அடைந்துள்ளன.

    பா.ஜனதா சொன்னது எல்லாம் தோல்வியை தழுவி உள்ளது. எனவே பா.ஜனதாவை நம்ப முடியாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo

    கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று இரவு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #BJP #PMModi

    கோவை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடை பெறுகிறது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் 7 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்ட பின் தமிழகத்தில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடை பெறுகிறது.

    இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 6.45 மணிக்கு மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

     


    பின்னர் மோடி குண்டு துளைக்காத காரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா மைதானத்திற்கு வருகிறார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச உள்ள பொதுக்கூட்ட மேடை பாராளுமன்ற வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

     


    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுக்கூட்ட மேடையில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

    போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் மைதானத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் கோவை மாநகர போலீசார் மட்டுமின்றி வெளி மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    பொதுக்கூட்ட மைதானம் மற்றும் விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா வளாகத்தில் பொதுமக்கள், கட்சியினர் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அவினாசி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்தில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பின் பிரதமர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தொண்டர்களை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரட்டுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாள் கோவையில் மோடி பேச உள்ளது கட்சியினர் மற்றும் கூட்டணி நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வர தொடங்கி விட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அதே கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் இன்று 2-வது முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #PMModi

    நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கொடுத்ததற்கு பதிலாக நடிப்பின் திலகமாக விளங்கும் மோடிக்கு அந்த விருதை வழங்கி இருக்கலாம் என தேர்தல் பிரசார கூட்டத்தில் முத்தரசன் கூறியுள்ளார். #Mutharasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் தி.மு.க. பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட்டு சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை நீதிபதிகள் நிலை நிறுத்தி உள்ளனர். இந்த தீர்ப்பை கேட்டு மானம் உள்ள அரசாக இருந்தால் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

    நான்தான் வழக்குப் போட்டேன் என்று கூறும் பா.மக. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? இந்த தீர்ப்புக்கு பிறகு அரசாங்கத்தின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும்.

    விருதுநகரில் பேசிய தமிழக அமைச்சர் இப்பிரச்சினையில் மேல்முறையீடு, கீழ்முறையீடு கிடையாது என்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து வாயே திறக்கவில்லை.

    இந்த சாலை அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடி திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த திட்டத்திற்கும் 20 சதவீதம் கமி‌ஷன் வாங்கப்படுகிறது. நீதிமன்றம் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்தியாவில் நேரு முதல் மன்மோகன்சிங் வரை பல பிரதமர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மோடியை போல யாரும் பொய் சொல்வதில் கில்லாடி இல்லை.



    நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கொடுத்ததற்கு பதிலாக நடிப்பின் திலகமாக விளங்கும் மோடிக்கு அந்த விருதை வழங்கி இருக்கலாம். மத்தியில் மோடியையும், மாநிலத்தில் எடப்பாடியையும் அகற்றும் வரை மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #Mutharasan
    ஓமலூரில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #GKVasan #ADMK

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் இரும்பாலை விரிவாக்க திட்டம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. மாநில அரசை பொருத்தவரை முதல்வர் சேலம் மாவட்டத்தை பாலம் மாவட்டமாக மாற்றியுள்ளார்.

    பெங்களூர் பேருந்து நிலையம் போல் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு அடுக்கு பஸ் போர்ட் அறிவித்துள்ளார், விவசாய கால் நடை ஆராய்ச்சி நிலையம் 300 கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் கொண்டு வர ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

    தற்போது மத்திய மாநில அரசுகள் இணக்கமான ஒத்த கருத்துடைய அரசாக உள்ளது. மத்தியில் உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

    மாநில அரசை பொருத்த வரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சாமானியர்களுடன் பழகி வருவதால் அனைத்து தரப்பினர்களின் எண்ணங்களை உணர்ந்து அனைத்து துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்,

    சேலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்ட மன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #GKVasan #ADMK

    ×