என் மலர்
தேர்தல் செய்திகள்
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.
தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்க வரிமையம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்தவரிடம் விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முட்டை வியாபாரி முருகேசன் (41) என்பது தெரியவந்தது. அவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் ஏட்டுகள் பிரபாகரன், சசிகுமார், முருகானந்தம் ஆகியோர் மதுரபாக்கம் அடுத்த எம். குச்சிபாளையம் பகுதியில் விழுப்புரம் திருக்கனூர் சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருக்கனூர் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. விசாரணையில் அவர் திருக்கனூர், பிடாரி பட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரி மலைசாமி (39) என்பது தெரிந்தது.
அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாராயணன், மோகன் ஆகியோர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.#LokSabhaElections2019
பேரையூர்:
தி.மு.க. கூட்டணி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவர் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் ரூ.500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது தான்.

இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள்.
பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Elangovan
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 47 ஆயிரத்து 610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும். போலீஸ் ஓட்டுகள் (விண்ணப்பித்தவர்கள்) 24 ஆயிரத்து 971 உள்ளன. அவர்களில் 10 ஆயிரத்து 657 பேர் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்காக 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூரில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை குறித்து அவர்களின் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அனேகமாக அதை அவர்கள் அளித்திருக்க வேண்டும். அதுபோல ஆணையம் கோரியபடி போலீசில் அறிக்கையும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் எந்த அறிக்கையையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
அது மிகுந்த ரகசியத்துக்கு உட்பட்ட அறிக்கை என்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேசிவிட முடியாது. அந்த அறிக்கையில் உள்ள கருத்துகளின்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. முன்வைத்துள்ளது. அதுபற்றி தேர்தல் ஆணையத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும். அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேரிக்கும் பிரசார பொதுக்கூட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வருகிறது.

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பா.ம.க. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருடன் பாசத்துடனும், தோழமை உணர்வுடனும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக மு.க.ஸ்டாலினும், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன், மருமகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆலோசகர்களாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் தி.மு.க. கட்சி முடிவுக்கு வந்து விடுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #Ramadoss
கர்நாடகத்தில் வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் பெங்களூரு, கலபுரகி, ஹாவேரியில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தருகிறார். அன்றைய தினம் ஒரே நாளில் சித்ரதுர்கா, கோலார், மைசூரு ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேச உள்ளதாகவும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

முதலில் சித்ரதுர்காவுக்கு வருகை தரும் ராகுல்காந்தி, பின்னர் கோலாருக்கு செல்ல உள்ளார். அதன்பிறகு, தான் மைசூரு மாவட்டத்திற்கு அவர் செல்ல இருக்கிறார். மைசூரு மாவட்டம் கிருஷ்ணராஜநகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச இருக்கிறார். கிருஷ்ணராஜநகர் மைசூரு மாவட்டத்தில் இருந்தாலும், அந்த பகுதி மண்டியா பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது.
இதனால் மண்டியா தொகுதியின் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் நிகில் குமாரசாமியை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். #RahulGandhi #LokSabhaElections2019
மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11, 18, 23 மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கண்ட 7 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது.
இதையடுத்து கட்சியினர் இன்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
இந்த 7 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா-சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நானா படோலே ஆகியோர் நேருக்குநேர் மோதுகின்றனர்.
இந்த தொகுதியில் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராப்பூர் தொகுதியை பொருத்தவரை மத்திய உள்துறை இணைமந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றியை எதிர்பார்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். பா.ஜனதா தலைவரான இவரை எதிர்த்து சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுரேஷ் தனோர்கர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
வார்தாவில் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவி சாருலதா தொகஷ், பா.ஜனதா எம்.பி. ராம்தாஸ் தாதசை எதிர்கொள்கிறார்.
கட்சிரோலி- சிமூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அசோக் நேடேவுக்கு முக்கிய எதிராளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாம்தியோ உசேந்தி விளங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே யவத்மால் தொகுதியில் சிவசேனா எம்.பி. பாவனா காவ்லியை எதிர்த்து களம் காண்கிறார்.
ராம்டெக் தொகுதியில் சிவசேனா எம்.பி. குருபால் தான்னேவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோர் காஜ்பாயே போட்டியில் உள்ளார்.
பண்டாரா- கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரபுல் படேல் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக நானா பஞ்சபூதே களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சுனில் மேன்தே களத்தில் உள்ளார்.
7 தொகுதிகளிலும் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் இன்று நடைபெறும் கடைசிநாள் பிரசாரத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி யஷ்வந்தபுரத்தில் பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-
பெங்களூருவில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். இந்த திட்டத்தை ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளோம். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பலமாக உள்ளது.
இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பெங்களூருவில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ.17 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பா.ஜனதா வேட்பாளர் சதானந்தகவுடா, என்னை பார்த்து ஓட்டுப்போட வேண்டாம், மோடியை பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்கிறார். மோடிக்கு ஊடகங்கள் எவ்வளவு விளம்பரம் வழங்கினாலும், அவர் மீண்டும் பிரதமராக முடியாது.
வருமான வரித்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளை மோடி தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மிரட்டுகிறார். இளைஞர்கள், மோடி, மோடி என்று கோஷமிடுகிறார்கள்.

மோடி ஒரு மிக மோசமான அரசியல்வாதி. நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளார். யார் மக்களின் நலனிற்காக உழைக்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு ஓட்டுப்போடுங்கள்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை மக்கள் ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் இ்ந்த பகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்.
நான் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒடிந்து விழுந்துவிடுவேன் என்று ஈசுவரப்பா கூறி இருக்கிறார். எனக்கு மக்களின் ஆசி உள்ளது. அதனால் எனது உயிர் உறுதியாக உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு தெய்வபலம் உள்ளது.
இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #PMModi
பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. அந்த தொகுதியில் அவர்கள் இருவர் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக தோதல் பணியாற்ற முடியாது என்று காங்கிரசார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சித்தராமையா பேசினார். ஆயினும் அவர்கள் குமாரசாமி மகனின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் சித்த ராமையா வீடியோ மூலம் மண்டியா காங்கிரசாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில், “காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பாடுபட வேண்டும். அவருக்கு ஆசி வழங்க வேண்டும்.
நானும், தேவேகவுடாவும் வருகிற 12-ந் தேதி கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளோம்” என்று பேசியுள்ளார்.
மேலும் முதல்-மந்திரி குமாரசாமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு அதாவது சிவமொக்கா, தார்வார், சிக்கோடி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே, தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கா்நாடகம் வருகிறார். அவர் மதியம் 1 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
அதை முடித்துக் கொண்டு மோடி மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பிரசார கூட்டத்தை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயில்களில் மெட்டல்-டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மைசூருவில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய காட்சி.மேலும் மைசூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் 12 குழுவினர், குதிரைப்படையினர், ரோந்துக்குழுவினர் என சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் மோடி வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மைசூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து மைசூரு-ஊட்டி சாலை, அரண்மனை அருகில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து சாமராஜா டபுள்ரோடு, ராமசாமி சர்க்கிள், ஜே.எல்.பி. ரோடு, ஆர்.டி.ஓ. சர்க்கிள், மகாத்மா காந்தி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
சித்ரதுர்கா மற்றும் மைசூரு தேர்தல் பிரசாரத்தில் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி மீண்டும் 12, 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய கர்நாடகம் வருகிறார்.
அதன் பிறகு 18-ந் தேதி (முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தினம்) வட கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.
மோடி வருகையையொட்டி பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #PMModi #BJP #LokSabhaElections2019







