என் மலர்
தேர்தல் செய்திகள்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 4-ந் தேதி கோவை தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். பின்னர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரசாரத்தின் போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. வக்கீல் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் தொண்டாமுத்தூர் போலீசார், மு.க. ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதே போல அ.தி.மு.க. வக்கீல் வெற்றிவேல் என்பவரது புகாரின் பேரில் மு.க. ஸ்டாலின் மீது குனியமுத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதி பறக்கும் படை அலுவலர் திருமலை சாமி பொள்ளாச்சி தாலுகா போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறியிருந்தார்.
புகாரின்பேரில் மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019 #MKStalin
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 18-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளை மாலை 5 மணிக்கு ஆம்பூர் பைபாஸ் சாலையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். நேற்று அவர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமம், கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். திருவளர்ச்சிப்பட்டி என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார்.
பிரசாரத்தின்போது திருநாவுக்கரசர் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி அதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டார்.
மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல குறு, சிறு தொழில்கள் நசுங்கி விட்டன. இந்த பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினரானால் இந்த தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.
இன்று திருநாவுக்கரசர் திருச்சி அந்தநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பை கம்பரசம்பேட்டையில் தொடங்கினார். தொடர்ந்து அவர் முத்தரசநல்லூர் ஊராட்சி, பழுர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, ஜீயபுரம் கடைவீதி, அந்தநல்லூர் ஊராட்சி, கொடியாலம், திருப் பராய்த்துறை, பெருக மணி, சிறுகமணி, பேட்டை வாய்த்தலை கடைவீதி, தேவஸ்தானம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மாலையில் பெரிகருப்பூர், மேக்குடி, குழுமணி, கோப்பு, பேரூர், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, முல்லிக்கருப்பூர், எட்டரை, போசம்பட்டி, வியாழன்மேடு, புலியூர், போதாவூர், கீரிக்கல்மேடு ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.
அவருடன் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, குடருட்டி சேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், குடமுருட்டி ஆறுமுகம், கம்பரசம்பேட்டை தர்மராஜ் மற்றும் பலர் சென்றனர். #thirunavukkarasar
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆண்டாள் வீதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி பாராளுமன்ற தொகுதியை அனைத்து விதத்திலும் மேம்படுத்த முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சிக்கு அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டு வருவோம். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்போம்.

திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தி, அனைவருக்கும் தொழில் முனைவோர் ஆவதற்கு பயிற்சி வழங்குவோம். வெற்றி பெற்றதும் திருச்சியை அனைத்து விதத்திலும் முன்னேற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #DMDK #PremalathaVijayakanth
போரூர்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் இசக்கிசுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தேனாம்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய இசக்கி சுப்பையா, நேற்று மாலை கந்தன்சாவடி 184வது வட்டம் கல்லுக்குட்டை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றேன். கடந்த 20 ஆண்டுகளாக ஏறத்தாழ 4ஆயிரம் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த எந்த அரசும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிவுநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை. மாறாக அவர்களைமுற்றிலும் புறக்கணித்து வருகின்றனர்.
நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். கல்லுக்குட்டை மக்களின் தேவைகளை நிறைவேற்றி தந்திட அனைவரும் மறவாமல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், அமைப்பு செயலாளர் திருவான்மியூர் முருகன், பகுதி செயலாளர்கள் அர்ஜுனன், ராஜேந்திரன், வட்ட செயலாளர் கண்ணன் வர்த்தகர் அணி ராமர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மகாலிங்கம் உள்ளிட்ட மாவட்ட பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புதூர், கருமன்கூடல், சரல், செம்பன்விளை, இரும்பிளி பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நான் ஏற்கனவே எனது சம்பளத்தை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக செலவு செய்து வருகிறேன். இந்த தேர்தலில் எனக்கு போட்டியாக யாரும் இல்லை. மக்கள் முடிவு செய்து விட்டார்கள். பாரதீய ஜனதா தான் வெற்றி பெற வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அவர் தான் நமது வேலைக்காரன். அவர் பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்காக செயல்படுத்தி உள்ளார். 40 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். எனவே தாமரைக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
60 ஆண்டு கனவு திட்டமான துறைமுக திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன். தடுத்து நிறுத்துவேன் என கூறி வருகிறார். கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் இங்கிருந்து நாங்குநேரிக்கு சென்று விட்டார். மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் தான் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
பொதுமக்கள் சிந்தித்து பார்த்து தங்களது வாக்குகளை சிதறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். #ponradhakrishnan #bjp
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.
கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதனால் தான் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடுகிறோம். நான் கடந்த 60 வருடங்களில் நிறைய அன்பை பெற்று விட்டேன்.
மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. நாம் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் திட்டங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய் விட்டது. அதை நாம் தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கி போட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடும்.
50 ஆண்டுகளில் திரைத்துறையில் கிடைத்திராத மன நிறைவு தற்போதைய சமீப கால அரசியல் பயணத்தில் கிடைத்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம், சிறிய கிராமங்களில் மக்களின் கண்ணை பார்ப்பதில் இருந்து உத்வேகம் கிடைக்கிறது. டார்ச்லைட் கண் கூசும் அளவுக்கு பிரகாசமாக இருக்கும்.
தமிழக மக்கள் மீது இருக்கும் இழுக்கை துடைப்போம். இந்த முறை பிரதமர் தேர்வு இழுபறியாக அமையும். அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். 3-வது அணிக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
இது மிக மிக வித்தியாசமான தேர்தல். புரட்சியின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் தங்கள் கோபத்தை ஓட்டாக காட்ட வேண்டும். தமிழகத்தின் சூழல் தான் எங்களை இணைத்திருக்கிறது.
மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். 3-வது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நிறைய எம்.பி.க்கள் செல்வோம். 3-வது அணி வந்தே தீரும். நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் மக்கள் நீதி மய்யம் குறித்து யோசிக்கிறார்கள். அந்த மனப்பாங்கு வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.ம. மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் தமிழகத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. 18 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியும், மோடியை டாடி என சொல்கின்ற இந்த தமிழகத்தின் அடிமைகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கம்பெனியும் கூட்டணி வைத்துள்ளார்கள். அதேபோல மற்றொரு கூட்டணி, அது மதசார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தி.மு.க. வகிக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.
தமிழகத்தை புறக்கணித்த மோடி சார்ந்த பா.ஜனதாவுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என்று அ.ம.மு.க. அறிவித்திருக்கிறது. இதைப்போல ஸ்டாலின் அறிவிக்கத்தயாரா? என்று இந்த குமரி மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது, எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் சொல்வாரா?. சொல்லமாட்டார். வாய்ப்பு கிடைத்தால், பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைத்தால் அங்கும் அவர் சென்று விடுவார். ஆட்சி, அதிகாரத்தை நம்பித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கூட்டணியை, குறிப்பாக தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம்.
இந்த முறையாவது தமிழக மக்களின் உரிமைகளுக்காக, தமிழர்கள் தலைநிமிர்வதற்காக, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக, தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்கள், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி, பாதுகாப்பான இயக்கம் அ.ம.மு.க. என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதி, மதத்தை கடந்து மக்களின் நலனில் அக்கறை எடுத்து உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார்? தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார்? அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சி எது? 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது? என்பதை எண்ணி நீங்கள் முடிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற அ.ம.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். உங்களை சிலர் குழப்புவார்கள். நீங்கள் குழப்பம் அடையாமல், தேசிய கட்சிகளைக் கண்டு ஏமாறாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் பரிசு பெட்டகம் சின்னம் பெற்றோம். நாங்கள் சமரசம் செய்து கொண்டால் எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கும். அம்மாவிற்கும், மக்களுக்கும் தான் தலைவணங்குவோம். வேறு எந்த சக்திக்கும் தலைவணங்க மாட்டோம்.
2 கோடி பேருக்கு வேலை, ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னதை செய்தார்களா? நீட் தேர்வு, விவசாயிகளை, தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அம்மா அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கஜா, ஒகி புயல் சமயத்தில் மக்களை சந்திக்காத மோடி இன்று ஓடி, ஓடி வருகிறார். அம்மா மருத்துவமனையில் இருந்தபோதும் மோடி வரவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் என்னிடம் உள்ளார்கள்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.
நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் நிரந்தர பிரதமராக மோடி வர வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போதே தி.மு.க. அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அம்மா ஆட்சி தான் உங்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. பெண்களுக்கு மிகவும் முக்கியமாக பாதுகாப்பு அளிக்கும் ஆட்சியாக உள்ளது.
இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஆ. ராசா நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் 2ஜி வழக்கில் சிறை சென்றவர். கடந்த 2009-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட போது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. வழக்கு சம்பந்தமாக அவர் கோர்ட்டுக்கு செல்லவே நேரம் சரியாக இருந்தது. அவர் ஊழல் பெருச்சாளி. அவர் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அவர் மீது இன்னும் வழக்கு உள்ளது. அவர் மீண்டும் சிறைக்கு செல்வார். அவருக்கு ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள். அவர் இங்கு நின்று என்ன செய்ய போகிறார். மக்களை காக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு.
தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய்யானது. கருணாநிதி இருக்கும் வரை மு.க. ஸ்டாலின் செயல் தலைவராகதான் இருந்தார். அவரால் தலைவராக முடியவில்லை. கருணாநிதி உயிர் பிரிந்த பிறகுதான் மு.க. ஸ்டாலின் தலைவராகி உள்ளார்.
2ஆண்டு காலமாக கருணாநிதியை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே சிறைவைத்து விட்டு அதன் பின் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
கொடநாடு கொலையாளிகளுக்கு உதவி செய்தவர் மு.க. ஸ்டாலின். சிறைக்கு சென்று வந்த கொலையாளிகளுக்கு உதவியவர் மு.க. ஸ்டாலின். அவர் எங்களை பார்த்து தவறாக சொல்லி வருகிறார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
கொடநாடு பிரச்சனையில் எனக்கு தொடர்பு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்.
குன்னூர் மக்களின் தேவைக்காக 3-ம் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு மக்கள் தேவை பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. குன்னூர் டேன்டீ தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.
குன்னூர் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மா உயிருடன் இருந்த போது நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனித்து தன்னுடைய சொந்த தொகுதி போல் கருதி பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்து அனைத்து திட்டங்களையும் செய்து முடிக்க உத்தரவிட்டார். தற்போது அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து நீலகிரி மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நானும் ஆணையிட்டு உள்ளேன்.
குன்னூர் பஸ்நிலையம் பகுதியில் லெவல் கிராஸ் மேம்பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. செக்ஷன் 17-ல் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதாக தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை நம்ப வேண்டாம். அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் இந்த பகுதியை சேர்ந்தவர். அவரிடம் குறைகளை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். இதற்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #edappadipalaniswami
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒருமினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதனை ஓட்டி சென்ற தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்த கோபி (வயது 33) உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பணத்தை தொண்டு வந்த கோபியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறினார். அவரிடம் அதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பறக்கும் படையினர் தெரிவித்தனர். #LokSabhaElections2019






