என் மலர்
செய்திகள்

தஞ்சையில் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒருமினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அதனை ஓட்டி சென்ற தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்த கோபி (வயது 33) உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பணத்தை தொண்டு வந்த கோபியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறினார். அவரிடம் அதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பறக்கும் படையினர் தெரிவித்தனர். #LokSabhaElections2019