என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப் புழக்கத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கவும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சுமதி தலைமையில் பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம், பாலதண்டாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad
வில்லிவாக்கம்:
மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முனைவர் சாம்பால் திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், சேப்பாக்கம், அண்ணாசாலை, புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் கையில் மாம்பழத்தை ஏந்தியபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் முனைவர் சாம்பாலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறுபாண்மை பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சாம்பால் கலந்து கொண்டார், அப்போது அவர், இஸ்லாமி யர்களின் உற்ற தோழனாக அவர்களின் பாதுகாவலனாக இருந்து பணி செய்ய என்னை மாம்பழம் சின்னத்தில் வாக் களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
அவருடன் தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.,உட்பட அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #PMK
போடி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போடி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகத்தை மறந்து மாற்றாக ரவுடி தனத்தை கட்டவிழ்த்து பண மழையை நம்பி அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தேர்தலை சந்திக்கின்றன. அரசு அதிகாரத்தையும் ஆணவத்தையும் கொண்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம் என அந்த கட்சிகள் கனவு காண்கின்றது.
கடந்த 2004-ம் ஆண்டு வீசிய அலை 2019-ம் ஆண்டிலும் வீசுகிறது. எனவே தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும். தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வி.ஐ.பி. தொகுதியாக தேனி மாறியுள்ளது.
மழை வளம் குறைந்து விவசாயம் பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆனால் பண மழை தேனி தொகுதியில் சூறாவளியாய் வீசுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #parliamentelection
பிரதமர் நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடி வருகிற 26-ந்தேதி மனு தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார். அவர் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
வாரணாசியில் உள்ள லங்காசிராசிலுவில் இருந்து தஷாவாடூத் வரை மோடி பேரணியாக சென்று பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், உ.பி.மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு மோடி மனு தாக்கல் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சோதனை முயற்சியாக ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) அமைக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த வழக்கில் முன்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்றும், 50 சதவீத வி.வி.பாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது.
வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள 4 ஆயிரத்து 125 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தை முன்னர் அமைக்க வேண்டிய இடத்தில் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலா 5 இயந்திரங்களை அமைக்க நேரிட்டுள்ளதால் 20 ஆயிரத்து 625 வி.வி.பாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SC #EVMs #VVPATcounting
தாம்பரம்:
திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் மேலக் கோட்டையூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராமப்புற பெண்களிடம் அ.தி.மு.க. அரசால் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மகத்தான திட்டங்களான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் பிறக்கும் குழந்தைகளுக்காக பரிசு பெட்டி போன்றவற்றை அ.தி.மு.க. அரசு கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.
அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களை பார்த்து வியந்த பிற மாநில அரசுகள் தற்போது அ.தி.மு.க. அரசின் இந்த திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றனர் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அவருடன் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டினர். #LokSabhaElections2019 #ADMK
மராட்டியத்தில் காட்சி ரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நேற்று 11 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
2 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் காட்சிரோலி மற்றும் சந்திராபூருக்கு வந்தார். ஹெலிகாப்டர் இறங்கும் மைதானத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
ஆனால் அவர் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய நிதி மந்திரியுமான சுதிர் முஸ்கான்டிவர் கூறும் போது, “தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக அங்கு செல்ல முடியாததால் அவர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை” என்றார்.
ஆனால் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #LoksabhaElections2019 #BJP #Amitshah
சென்னை:
பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தான் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வியாசர்பாடி கக்கன்ஜி நகர் பகுதியில் வீதி வீதியாக வழியாக நடந்து சென்று பரிசு பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பெரம்பூர் தொகுதி மக்கள் பாதுகாப்பாக வசிக்க முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோத செயல்களில் இருந்து பாதுகாக்கவும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் மேரகாக்கள் பொருத்தப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்று தரப்படும், பாதுகாப்பான குடிநீர், சாலை வசதி அமைத்து தருவதோடு, கழிவு நீரில் இருந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளர் பி.வெற்றிவேல் உறுதியளித்தார்.
வேட்பாளருடன் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து உள்ளிட்ட தொண்டர்கள், பெண்கள் அணிவகுத்து சென்றனர். #LokSabhaElections2019 #AMMK
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கழித்து விட்டார். விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என குற்றம்சாட்டினார்.

தேர்தல் நெருங்குவதால் இப்போது உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டும் அவர், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும். இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு மோடியின் வாயை ஒட்டிவைக்க வேண்டும்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் நமது நாட்டின் நலன் கருதி ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும்’ எனவும் மம்தா தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi
சென்னை:
வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
திரு.வி.க. பஸ் நிலையத்தில் திறந்த வேனில் பிரசாரம் செய்த பிறகு மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
நடைபெற இருக்கும் தேர்தல் இந்தியாவின்தலையெழுத்தை மாற்ற போகிற தேர்தல். எனவே உங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துங்கள். மோடி இந்தியாவில் இருப்பதே இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இந்தியாவை சுற்றி சுற்றி வருகிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களை பற்றி சிந்திப்பதில்லை. எனவே மத்தியில் நிலையான நல்லதொரு ஆட்சி அமைய தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து இந்த தொகுதியில் போட்டியிடும் படித்தவரும் மருத்துவருமான டாக்டர் கலாநிதி வீராசாமியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK
பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-
நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.
நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.
நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.
பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-
ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.
* 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.
* விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.
* விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
* சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.
* உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.
* ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.
* கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

* நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
* பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.
* பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
* மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.
* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.
* பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.
* குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
* அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.
* 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.
* நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
* நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.
* மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.
* நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.
* அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
* பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto






