search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டோம், இனி எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் - மோடி
    X

    மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டோம், இனி எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் - மோடி

    மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.



    தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-

    நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.

    நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra

    Next Story
    ×