search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்- திருநாவுக்கரசர் பிரசாரம்
    X

    திருச்சி தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்- திருநாவுக்கரசர் பிரசாரம்

    நான் பாராளுமன்ற உறுப்பினரானால் திருச்சி தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசியுள்ளார். #thirunavukkarasar

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். நேற்று அவர் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமம், கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். திருவளர்ச்சிப்பட்டி என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார்.

    பிரசாரத்தின்போது திருநாவுக்கரசர் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி அதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டார்.

    மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல குறு, சிறு தொழில்கள் நசுங்கி விட்டன. இந்த பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினரானால் இந்த தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

    இன்று திருநாவுக்கரசர் திருச்சி அந்தநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பை கம்பரசம்பேட்டையில் தொடங்கினார். தொடர்ந்து அவர் முத்தரசநல்லூர் ஊராட்சி, பழுர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, ஜீயபுரம் கடைவீதி, அந்தநல்லூர் ஊராட்சி, கொடியாலம், திருப் பராய்த்துறை, பெருக மணி, சிறுகமணி, பேட்டை வாய்த்தலை கடைவீதி, தேவஸ்தானம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    மாலையில் பெரிகருப்பூர், மேக்குடி, குழுமணி, கோப்பு, பேரூர், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, முல்லிக்கருப்பூர், எட்டரை, போசம்பட்டி, வியாழன்மேடு, புலியூர், போதாவூர், கீரிக்கல்மேடு ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

    அவருடன் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, குடருட்டி சேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், குடமுருட்டி ஆறுமுகம், கம்பரசம்பேட்டை தர்மராஜ் மற்றும் பலர் சென்றனர். #thirunavukkarasar

    Next Story
    ×