search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக்கர் சின்னம் கிடைக்காமல் தடுத்தது மத்திய பாஜக அரசு- தினகரன் குற்றச்சாட்டு
    X

    குக்கர் சின்னம் கிடைக்காமல் தடுத்தது மத்திய பாஜக அரசு- தினகரன் குற்றச்சாட்டு

    எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #bjp #pmmodi

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.ம. மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் மாநில துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் தமிழகத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. 18 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியும், மோடியை டாடி என சொல்கின்ற இந்த தமிழகத்தின் அடிமைகளான ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கம்பெனியும் கூட்டணி வைத்துள்ளார்கள். அதேபோல மற்றொரு கூட்டணி, அது மதசார்பற்ற கூட்டணி. அந்த கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தி.மு.க. வகிக்கிறது. ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

    தமிழகத்தை புறக்கணித்த மோடி சார்ந்த பா.ஜனதாவுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என்று அ.ம.மு.க. அறிவித்திருக்கிறது. இதைப்போல ஸ்டாலின் அறிவிக்கத்தயாரா? என்று இந்த குமரி மாவட்டத்தில் இருந்து கேட்கிறேன். பா.ஜனதாவுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ கிடையாது, எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டேன் என அவர் சொல்வாரா?. சொல்லமாட்டார். வாய்ப்பு கிடைத்தால், பா.ஜனதாவில் மந்திரி பதவி கிடைத்தால் அங்கும் அவர் சென்று விடுவார். ஆட்சி, அதிகாரத்தை நம்பித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. கூட்டணியை, குறிப்பாக தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம்.

    இந்த முறையாவது தமிழக மக்களின் உரிமைகளுக்காக, தமிழர்கள் தலைநிமிர்வதற்காக, பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக, தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்கள், எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி, பாதுகாப்பான இயக்கம் அ.ம.மு.க. என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாதி, மதத்தை கடந்து மக்களின் நலனில் அக்கறை எடுத்து உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் யார்? தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார்? அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சி எது? 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது? என்பதை எண்ணி நீங்கள் முடிவு செய்யுங்கள்.

    தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற அ.ம.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். உங்களை சிலர் குழப்புவார்கள். நீங்கள் குழப்பம் அடையாமல், தேசிய கட்சிகளைக் கண்டு ஏமாறாமல் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எங்களுக்கு குக்கர் சின்னம் கொடுக்கவிடாமல் மோடி அரசுதான் இடைஞ்சல் கொடுத்தது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் பரிசு பெட்டகம் சின்னம் பெற்றோம். நாங்கள் சமரசம் செய்து கொண்டால் எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கும். அம்மாவிற்கும், மக்களுக்கும் தான் தலைவணங்குவோம். வேறு எந்த சக்திக்கும் தலைவணங்க மாட்டோம்.

    2 கோடி பேருக்கு வேலை, ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னதை செய்தார்களா? நீட் தேர்வு, விவசாயிகளை, தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அம்மா அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கஜா, ஒகி புயல் சமயத்தில் மக்களை சந்திக்காத மோடி இன்று ஓடி, ஓடி வருகிறார். அம்மா மருத்துவமனையில் இருந்தபோதும் மோடி வரவில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் என்னிடம் உள்ளார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார். 

    Next Story
    ×