search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வதால் உச்சக்கட்ட ஓட்டுவேட்டை
    X

    மகாராஷ்டிரத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வதால் உச்சக்கட்ட ஓட்டுவேட்டை

    மகாராஷ்டிரத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வதால் உச்சக்கட்ட ஓட்டுவேட்டையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    மும்பை :

    மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11, 18, 23 மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    முதல் கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கண்ட 7 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து கட்சியினர் இன்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த 7 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா-சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    குறிப்பாக நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நானா படோலே ஆகியோர் நேருக்குநேர் மோதுகின்றனர்.

    இந்த தொகுதியில் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    சந்திராப்பூர் தொகுதியை பொருத்தவரை மத்திய உள்துறை இணைமந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றியை எதிர்பார்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். பா.ஜனதா தலைவரான இவரை எதிர்த்து சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுரேஷ் தனோர்கர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    வார்தாவில் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவி சாருலதா தொகஷ், பா.ஜனதா எம்.பி. ராம்தாஸ் தாதசை எதிர்கொள்கிறார்.

    கட்சிரோலி- சிமூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அசோக் நேடேவுக்கு முக்கிய எதிராளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாம்தியோ உசேந்தி விளங்குகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே யவத்மால் தொகுதியில் சிவசேனா எம்.பி. பாவனா காவ்லியை எதிர்த்து களம் காண்கிறார்.

    ராம்டெக் தொகுதியில் சிவசேனா எம்.பி. குருபால் தான்னேவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோர் காஜ்பாயே போட்டியில் உள்ளார்.

    பண்டாரா- கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரபுல் படேல் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக நானா பஞ்சபூதே களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சுனில் மேன்தே களத்தில் உள்ளார்.

    7 தொகுதிகளிலும் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் இன்று நடைபெறும் கடைசிநாள் பிரசாரத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    Next Story
    ×