என் மலர்
தூத்துக்குடி
- 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
- வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.
இந்நிலையில் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லெட்சுமிபுரம், மாணிக்கபுரம் பகுதி சாலைகளில் கடந்து பத்தாங்கரை வழியாக செட்டிவிளை, வட்டன்விளை, வெள்ளான்விளை, பரமன்குறிச்சி கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
கடந்த 45 நாட்களாக குடியிருப்பு பகுதிகளையும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளாளன்விளை, வட்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
24 மணிநேரமும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு, பகலாக தொழிலாளர்கள் பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை சாலையில் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ள நீரை சீயோன்நகர் தேரிப்பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வந்த நிலையில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.
மேலும் பரமன்குறிச்சி-வெள்ளாளன்விளை, சீயோன்நகர், தண்டுபத்து, உடன்குடிக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றி சென்று வந்தனர்.

இதனையடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்ற முடியாமல் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு பல ஆயிரம் டன் ராட்சத கற்களை கொண்டு சாலையை சீரமைத்தனர்.
இதனால் போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. எனினும் வெள்ளான்விளை, வட்டன்விளை பகுதியில் இன்றளவும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளான்விளையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஆலயத்தின் பகுதியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.
விவசாயிகள் தென்னை, பனை, வாழை போன்ற தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், விவசாய பணியை தொடங்க முடியாமலும் உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இச்சூழ்நிலையில் முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டு திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் ஒருபகுதியாக வெள்ளாளன்விளை பகுதியில் அவர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருச்சந்திரன், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றதலைவர் ராஜரெத்தினம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
- இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
- முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.
இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
- போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.
தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.
- பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்.
- சங்கி என்பது இழிவான சொல் இல்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி வாரியாக முக்கிய பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். இதனால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். முதலமைச்சர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். அதை எதுவும் சொல்ல முடியாது. பா.ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை துண்டு, துண்டாக உடைத்து விடும். இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் . 2026-ல் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார். நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை.
உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை. கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் விருப்பு, வெறுப்புக்கு பொருத்தி பார்க்க வேண்டாம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக மாறுதல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் உள்ள தூய பவுலின் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டின் ஆலய பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில், பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசைவ அசனவிருந்து நடைபெற்றது.
இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி, மத பேதன்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்த ஆலயத்தில் நடைபெறும் அசன விருந்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்று ஒற்றுமையாக உணவருந்தி வருவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
- காகா கூட்டம் ஆந்தையை கொத்தி கொல்ல முயன்றது.
- உடனடியாக வனத்துறையினரை அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.
உடன்குடி:
உடன்குடி சிவலுரில் விஜயன் என்பவரது வீட்டுக்கு கூரையில் நேற்று ஒரு அரியவகை ஆந்தை சிக்கி கிடந்தது.
இதைப் பார்த்த காகா கூட்டம் அதனை கொத்தி கொல்ல முயன்றது. இதைப்பார்த்த விஜயன் காக்கையிடம் இருந்து காப்பாற்றி சாதுர்யமாக ஆந்தையை பிடித்தார்.
இவரது அண்ணன் ஆசிரியர் ஜெயராஜ் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வீடியோ மூலம் அது வைரலானது. உடனடியாக நாசரேத் அருகில் உள்ள கச்சினா விலை வனத்துறை அலுவலர் கனிமொழி இதை பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினரை அனுப்பி அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது களஞ்சிய ஆந்தை என்றும். பகலில் இதன் செயல்பாடு இல்லாததால் பகலில் காக்கை உட்பட மற்ற பறவைகள் இதனை ஓட ஓட விரட்டும் என்றும் இரவில் இந்த களஞ்சிய ஆந்தைக்கு நன்றாக கண் தெரியும் என்றும். மற்ற பறவைகளை இது இரவில் ஓட ஓட விரட்டும் என்றும் கூறினர்.
- 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
- விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.
வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.
இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
- 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.
ஆறுமுகநேரி:
தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.
இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.
இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.
தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.
இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-
எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது.
- சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தருவை குளம் பகுதியில் தூய மிக்கல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் வழிந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆச்சர்யம் அடைந்தனர்.
இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
- ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ரெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு வந்து உணவு அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்னக ரெயில்வே மேலாளரிடம் தங்களது பகுதி வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது எனவும், இந்த ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ரெயில் பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் குடியரசு தினமான நாளை 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வரை அதாவது 3 மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரெயிலானது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் மக்களின் நற்செயலை பாராட்டி நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரெயில்வே எடுத்த இந்த முடிவு ஸ்ரீவைகுண்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
- முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.






