என் மலர்
தூத்துக்குடி
- வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
- மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.
வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.
மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
- பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.
இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை.
- விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிநகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள். பட்டியலிட அண்ணாமலை தயாரா?. பா.ஜ.க. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது.
நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி. நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது. அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.

தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை.
அ.தி.மு.க. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அ.தி.மு.க. இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
- ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந்தேதி பெய்த கனமழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரிகுளம் உடைந்து, குளத்து தண்ணீர் பல்வேறு ஊர்களுக்குள் புகுந்தது.
இதில் உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை கிராமம் அதிகமாக பாதிக்கப்பட்டு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்ட தனித்தீவாக மாறியது.
போக்குவரத்து வசதி இல்லாமல் வெள்ளாளன் விளை கிராமத்தின் சர்ச் வழியாக வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இதனால் வட்டன்விளையில் இருந்து உடன்குடி மற்றும் பரமன்குறிச்சிக்கு நேர்வழியில் செல்லும் பாதை தடைபட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு மாணவர்கள், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். பல அடி உயரத்திற்குநீர் தேங்கி நிற்கும் வட்டன்விளை வடக்குத் தெரு தார்ச்சாலை வழியாக பரமன்குறிச்சி- மெஞ்ஞான புரம் பிரதான சாலைக்கு செல்ல தற்காலிகமாக மணலை கொட்டி சாலை வசதி செய்து தர வேண்டி இப்பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டரிடமும், அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இைதயொட்டி நேற்று ஊர் முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டது சுமார் 50 நாட்களாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் நாங்கள் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறோம் என்றும், 2 கி.மீ. வழியாக சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் திரண்ட ஊர்மக்கள் கையில் கருப்புக்கொடியுடன் வெள்ள நீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், கிராம அதிகாரி கணேசபெருமாள் மற்றும் அதிகாரிகள் ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஓரு வாரத்திற்கு தற்காலிக சாலை வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான விவசாய தோட்டங்களில் இன்னும் தண்ணீருக்குள்ளே இருக்கின்றன. தோட்டத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
- அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடு திருச்செந்தூர்.
- மாசித்திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 4.30 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நாளான 5-ம் திருநாள் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாளான 23-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 24-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் அஜித், மேலாளர் ராஜ்மோகன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் செந்தில்குமார், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், மாரிமுத்து, கார்த்திகேயன், கிட்டுமணி, சரவணபவன், நெல்லையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
- கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
- அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மரியான் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ்.
இவருக்கு சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 24), கார்த்திக், அருள், பிச்சையா, இஸ்ரவேல், அழகாபுரியை சேர்ந்த மதன், பாலா, நிவாஸ், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குணா உள்ளிட்ட 10 மீனவர்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் கடந்த 3-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சுமார் 500 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் தவித்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் கேரளா மாநிலம் மினிக்காய் தீவில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மினிக்காய் தீவு கடலோர காவல்படை, அதிகாரிகள் மினிக்காய் தீவிற்கு சென்று பழுதாகி நின்ற படகில் இருந்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு அந்த படகு மூலம் கயிறு கட்டி பழுதான படகை மீட்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களும், பழுதான படகும் அருகில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்துவரப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தை, ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆண்டு முழுவதும் தங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள், பிண்டம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
- அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
- மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பாலசிங் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மக்கள் ஜாதி, மதத்தை மறந்து அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவிக்கரம் நீட்டி ஒற்றுமையாக வாழ்கிறோம்.
ஆனால் பா.ஜனதா அரசு இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்திய மக்களை பிரிக்கிறார்கள். இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கிறார்கள்.
மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும். மதத்தை வைத்து அனை வரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அனைத்து தரப்பு மக்களை அரவணைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அஜித், மணியம் செந்தில்குமார் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.
- மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
- பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).
இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.
காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.
அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.






