search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  பேட்டரியால் இயங்கும் மொபட் போல சைக்கிளை மாற்றி அசத்திய மாணவன்
  X

  பேட்டரியால் இயங்கும் 'மொபட்' போல சைக்கிளை மாற்றி அசத்திய மாணவன்

  • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
  • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

  ஆறுமுகநேரி:

  தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

  இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

  இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

  தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

  இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

  எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  Next Story
  ×