என் மலர்
அரியலூர்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அரியலுர் மாவட்டம் மின் நகரில் உள்ளது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் மண்ட குளத்துப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 36) ஆகியோர் தங்கியிருந்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஓரே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் அரியலூரில் இருந்து மல்லூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அரியலூர் அடுத்து உள்ள மேலக்கருப்பு என்ற இடத்தின் அருகே சென்று திருச்சி- ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டிற்கு சென்றனர்.
அப்போது கீழப்பழூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி விசப்பட்டனர்.
இந்த விபத்தில் சரவணன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழப்பழூர் போலீசார் விரைந்து சென்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கீழப்பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே செட்டிகுழி பள்ளத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி விஜி. இவர் நேற்று மாலை உடையார்பாளையம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பழனிவேல் 11 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நான் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மணிகண்டன் என்ற மகனும் மஞ்சுளா (வயது 15) என்ற மகளும் உள்ளனர்.
மஞ்சுளா ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந் நிலையில் அதே தெருவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும் மஞ்சுளாவிற்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு 2 குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் மஞ்சுளாவிடம் சென்று என் சாவுக்கு நீயும் உன் குடும்பத்தினர் தான் காரணம் என எழுதி வைத்து இருப்பதாக கூறி மிரட்டினார். அன்று முதல் என் மகள் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது மஞ்சுளா குளிப்பதாக கூறி சென்றார். பின்னர் அவரது அலரல் சத்தம் கேட்டு உள்ள சென்றேன்.
அப்போது மஞ்சுளா தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்தது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஆனால் செல்லும் வழியில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கும்பாபிஷேகத்தை யொட்டி வரும் 26-ம் தேதி காலை அகல்மர்சன மற்றும் சுதர்சனஹோமம் உள்ளிட்ட முதல் கால பூஜைகளும், மாலை தீர்த்த சங்கரகனம், ஆச்சார்ய அழைப்புடன் இரண்டாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது. 27-ம் தேதி காலை கோபூஜை, திருப்பள்ளி எழுச்சியுடன் 3-ம் கால பூஜைகளும், மாலை விமான கண்திறப்பு, கோ தரிசனத் துடன் 4-ம் கால பூஜைகளும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து, 28-ம் தேதி காலை 4 மணி முதல் கோ பூஜை, யாகசாலை புண்ணியாக வாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், யுக்த ஹோமம், பூர்ணாஹீதி, ஆராதனம், யாத்திரதான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. 6.30 மணிக்கு குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்பட்டு கோயிலை சுற்றி வந்து 7 மணிக்கு மஹாகும் பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மூலவருக்கு மஹா சம்ப்ரோக்ஷனை நை டபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55). அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15-ந்தேதி வசூலித்த பணத்துடன் நிதி நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். கோயம்பேடு மார்க்கெட் அருகே செல்லும் போது , அங்கு வந்த ஒரு கும்பல் தண்டபாணியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுக்கவே கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த தண்டபாணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகள் ராஜகோபால், அருணாசலம் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணத்தை சேர்ந்த பாலாஜி (21) என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் இன்று காலை அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் சரணடைந்தார். அவரை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தி.மு.க. தலைவர் கலைஞரின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய பொருப்பாளர் தருமதுரை, சிவஜோதி, கண்ணன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இராசா துவக்கி வைத்தார்.
திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் 74 பேர் ரத்தானம் செய்தனர். அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்தவங்கி குழுவினர் ரத்தம் பெற்று சென்றனர்.
முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைபிரிவு அமைப்பாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாதாகோவில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை மந்திரிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 300 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, காளை முட்டியதில் திருச்சி மாவட்டம் விரகாலூரை சேர்ந்த ஜான்கென்னடி(42) என்பவர் படுகாயமடைந்து திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், காளைகள் முட்டியதில் இருங்களுர் சேவியர்(55), அகழங்கநல்லூர் முத்தமிழ்செல்வன்(26), அன்னிமங்கலம் மணிகண்டன்(26), திருமழபாடி செல்வகுமார்(42) உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் ஊர் மற்றும் காலணி மக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்
இதனை கண்டித்து கடந்த மாதமே பொன்பரப்பி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வட்டாட்சியர் அமுதா குடிநீர் பிரச்சினை யினை உடனடியாக சரிசெய்து தருவாதாக ஒப்புதல் அளித்து மறியலை கைவிட செய்தனர்.
ஆனால் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி குடிநீர் இதுநாள் வரை வழங்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொன்பரப்பி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அரு கிலும், மற்றொரு காலணி தெரு மக்கள் குடியிருப்புகளின் அருகாமையிலுள்ள சாலைகளில் காலிக்குடங்களுடன் 2 சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் செந்துறை காவல் துணை ஆய்வாளர் சாமிதுரை மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தை நடத்த வந்த அதிகாரிகளிடம் பொன்பரப்பி கிராம பொதுமக்கள் ஏற்கனவே நீங்கள் அளித்த உத்திரவாதத்தினை நம்பி நாங்கள் காத்திருந்தோம் ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால், எழுத்து பூர்வமாக உத்திரவாதம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தினை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உறுதிபட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததால் சாலை மறியலை பொன்பரப்பி பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்த சாலை மறியலால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மே 26 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதுநாள் முதல் மகா பாரதம் பாடப்பட்டு தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்து வந்தன. நேற்று தீ மிதித்த பின்பு பக்தர்கள் தேர் இழுக்க காத்து இருந்தனர்.
இந்நிலையில் மாலை பக்தர்கள் தீமிதித்து முடிந்த போது அருகே நின்ற தேரில் மாவிளக்கு தீ தேரின் தொம்பையில் பட்டு தீ மள மளவென்று பரவி தேர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இது குறித்து தகவலறிந்த வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தேரில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய உள்ளது.
செந்துறை:
செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம்உஞ்சினி, சிருகடம்பூர், ஆனந்தவாடி ,ராயம்புரம்,மேட்டுபாளையம்,காவேரிபாளையம், அயண் ஆத்தூர், பெரியா குறிச்சி, வஞ்சினபுரம், நத்தகுழி, பொன் பரப்பி, மருவத்தூர், மருதூர்,
கீழமாளிகை, பிலாகுறிச்சி, வீராக்கன், கீழமாளிகை, நாகல்குழி, சோழன் குடிகாடு, முல்லையூர், வங்காரம் அயன் தத்தனூர், சோழன்குறிச்சி, வஞ்சினபுரம், மணப்பத்தூர், நத்தக்குழி,பெரியாக்குறிச்சி நல்லநாயகபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது என செந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள மேலக்குடிகாடு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வினைதீர்த்த விநாயகர், பூவாடைக்காரி, அக்கினிவீரன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பசாமி, பைரவநாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியும் உள்ளது.
அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமானங்களின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து நேற்று முன் தினம் முதற்கால யாக பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.
இதையடுத்து காலை 8.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான வினைதீர்த்த விநாயகர், பூவாடைக்காரி, அக்கினி வீரன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பசாமி, பைரவநாகநாதர் சுவாமிகளின் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் மேலக்குடிகாடு, தென்கச்சி பெருமாள்நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர் மனோகர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உடையார் பாளையம் வட்டம், பிச்சனூர், குருவாலப்பர்கோவில், உட்கோட்டை மற்றும் ஆமணக்கந்தோண்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பொன்னேரியில் 4,86,150 கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்வதற்கு அறிவிப்பு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி வண்டல் மண் எடுத்துக்கொள்ள 20 நாட்களுக்கு மிகாமல் அனுமதி வழங்கப்படும். 1 ஏக்கர் விவசாய புன்செய் நிலங்களுக்கு 90 கனமீட்டரும், நன்செய் நிலங்களுக்கு 75 கனமீட்டரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். சொந்த வீட்டு உபயோக பணிகளுக்கு 30 கனமீட்டர் மண் எடுக்க அனுமதியும், மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு 60 கனமீட்டர் மண் எடுக்க அனுமதியும் வழங்கப்படும். பொதுமக்கள் மண் எடுத்துக் கொள்ள கொண்டுவரும் வாகனங்களுக்கு பொதுப்ப ணித்துறையின் மூலம் மண் ஏற்றிவிடப்படும். அதற்கான தொகை ரூ.35.20 பைசா 1 கன மீட்டருக்கு ஏற்றுக்கூலியாக செலுத்தவேண்டும்.
மேற்படி பொன்னேரியில் அதிக அளவில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற ஏதுவாக, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் தலைமையிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் சிறப்பு முகாமானது நாளை 15-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆமணக்கந்தோண்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதுசமயம் பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெற மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, 2016-17ல் 27 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைந்த பிரீமியம் செலுத்தி அதிக பயிர்க்காப்பீடு பெறும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பிருந்த நிபந்தனையை தளர்த்தி, தற்போது 33 சதம் பயிர் சேதமடைந்தாலே நஷ்ட ஈடுபெறலாம்.
நாட்டில் உள்ள 82 நிலக்கரி சுரங்கங்களை நேர்மையாக ஏலமிட்டதன் மூலம் ரூ.3லட்சத்து 94 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு பெற்றுள்ளது. மேலும் நேரடியாக மானியம் வழங்கியதால் ரூ.49.560 கோடி மிச்சமாகியுள்ளது. 7 கோடியே 50 லட்சம் பேருக்கு முத்ரா கடன் திட்டம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. அதே போல தமிழக அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசும் ஒத்துழைக்கிறது.

ஓ.பி.எஸ். அணிக்கு தாவாமலிருக்க கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தனியார் டி.வி.யில் தகவல் வெளியான விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






