என் மலர்
அரியலூர்
அரியலூர் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் கடந்த 26-5-2017 அன்று மர்ம நபர்கள் ஷட்டர் கதவை உடைத்து 84 கிலோ வெள்ளி, 84 கிராம் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் சுந்தர்ராமன் அரியலூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்ட போது, கடையில் திருடிய நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை வைத்து விசாரித்த போது கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சஞ்சீவ் பல்வார் (வயது 32), அம் போசிங் (40) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்று 2 பேரையும் கைது செய்து அரியலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை அரியலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மகாலட்சுமி, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 64 கிலோ வெள்ளி, 64 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது எச்சரிக்கை பலகை வைக்காத 7 கடைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுகரசு தலைமையில் ராஜ், வேல்முருகன், செல்வகாந்தி, பிரவீன்குமார், தமிழரசன், விஜயலட்சுமி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவரா மகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் சிமெண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு மின்இணைப்பை விரைந்து வழங்க வேண்டும். ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும்.
பயிர்காப்பீடு தொகை, வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சிமெண்ட் ஆலைகளின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் உள்ள தண்ணீரை கால்வாய் மூலம் ஏரிகளில் நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உரங்களின் மீது செலுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள சங்க உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தமிழக அரசின் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளுவதற்கு உரிய விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றாமல் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதி தருகிறார்கள் என்றும், பிற ஊர்களில் இருந்து வரும் லாரிகளுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் கூறி லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து லாரி டிரைவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் அவர்களது கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால், நேற்று காலை அதிருப்தியடைந்த லாரி டிரைவர்கள் மதனத்தூர் சாலையில் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு லாரி டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் இளவரசன் ( வயது 53). நேற்று இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள தேசிய வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.31,500 எடுத்துக்கொண்டு சந்தை வழியாக நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளை காட்டி மிரட்டி, இளவரசன் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து இளவரசன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப் பதிவு செய்து வாலிபரை தேடி வந்தார்.
இதனிடையே கோடங்குடி மெயின்ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மனைவி சரோஜா (58) என்பவர் கடந்த 21-ந்தேதி ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.2 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அப்போது மீதி தொகையை காட்டாததால் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் தான் பார்த்து சொல்கிறேன், உங்கள் கார்டை கொடுங்கள் என்று கூறி மீதி தொகையை பார்த்துள்ளார். அப்போது கணக்கில் ரூ.44,520 இருந்துள்ளது. அதனை சரோஜாவிடம் கூறிய அந்த நபர், நைசாக தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம்.கார்டை சரோஜாவிடம் கொடுத்து விட்டு, ஒரிஜினல் கார்டை அவர் வைத்துக்கொண்டார்.
கடந்த 28-ந்தேதி சரோஜா பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். சென்றார். அப்போது பணம் எடுத்த போது கார்டு வேலை செய்யாததால், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று சரி பார்த்தார். அப்போது 21-ந் தேதி அவரது கணக்கிலிருந்து அனைத்து பணமும் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சரோஜா ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஐ. சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கம் 3-வது குறுக்குத் தெருவை சேர்ந்த செல்வராஜ் (61) என்பவர் கடந்த 28-ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங் காவல் கிராமத்திற்கு வந்திருந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்கு பணம் எடுப்பதற்காக ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ரூ.500 பணம் எடுத்துக்கொடுக்க கூறியுள்ளார். அந்த நபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட செல்வராஜ் சென்னை பேருந்தில் ஏறி சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு 2 மெசேஜ் வந்துள்ளது.
அதனை பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.9,500 பணம் எடுத்துள்ளதாக வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர், தனது பையில் உள்ள ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது போலியான கார்டு என தெரியவந்தது.
இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். ஏ.டி.எம். மூலம் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மோசடி நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று ஜெயங்கொண்டம் - செந்துறை பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபரை மறித்து விசாரித்ததில், அந்த நபர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் (27) என்பதும், ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுத்துக்கொடுப்பதாக கூறி போலி கார்டு கொடுத்து பணம் பறித்ததும், மேலும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தர் ராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இன்னும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 956 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இக்கூட்டத்தில், முதலைமச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளை உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும், வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலும், காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், சேகர் என்பருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலும் ஆகமொத்தம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பாக மாநில அளவிலான நெல் பயிர் மகசூல் போட்டியில் வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.பழனிசாமி என்பருக்கு 10.02 மெட்ரிக் டன் ஹெக்டேர் அளவில் கோ.ஆர் 50 நெல் ரகத்தினை சிறப்பாக மகசூல் செய்தமைக்காக ரூ.15 ஆயிரத்திற்கான பரிசுத்தொகை காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தனசேகரன் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கான வழிகாட்டி கையேடுகளை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தனசேகரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முனியாண்டி, துணை இயக்குநர் வேளா ண்மை மனோகரன், உதவி இயக்குநர் (பொ) சாந்தி மற்றும் அனை த்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தை அடுத்துள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயல் வெளியில் அவசர அவசரமாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த பாப்பாங்குளம் கிராம மக்கள், நில உரிமையாளரிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் வீடு கட்டுவதாக கூறி உள்ளார். ஆனால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, விவசாய நிலங்களில் பெண்கள் மாடு, ஆடுகள் மேய்த்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் எங்கள் கணவன்மார்கள் டாஸ்மாக் கடை தூரமாக இருப்பதால் 1 கோட்டருடன் முடித்து கொள்கிறார்கள். ஆனால் கடை அருகில் இருந்தால் கடை முன்பே படுத்து கொண்டு குடிப்பதுடன் எங்கள் நகை மற்றும் பொருட்களை வைத்து குடித்து விடுவார்கள். பெண்களாகிய எங்களுக்கு பாதுகாப்பில்லை. ஆகவே எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம். மீறி கடையை திறந்தால் பட்டினி போர் நடத்தி உயிரை விடவும் தயங்கமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு)தனேசகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக நலத்துறையின் சார்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் வருமாறு:-
வருமானச் சான்று ரூ.72000-க்குள் (வட்டாட்சியரிடம் பெறவேண்டும்), இருப்பிடச்சான்று (வட்டாட்சியரிடம் பெறவேண்டும் அல்லது ரேசன் கார்டு), தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி), வயது சான்று (20 வயது முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதிச்சான்று, கடவுச்சீட்டு, மனுதாரரின் கலர் புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப் பட்டோர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை. ஆகிய ஆவண ங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தரைத்தளம், அறைஎண் 20, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 15.7.2017-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான சமூக பாதுகாப்பு திட்டத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் தட்டச்சர் அல்லது கணினி இயக்குபவர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு விழா என்ற பெயரில் வருவாய்ததுறை அலுவலர்களை வேலைக்கு வரச்சொல்லி பணிச்சுமை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தற்போது பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் நிலச்சீர்த்த சட்ட தொடர்பான அதிக எண்ணிக்கையிலான கோப்புகள் நிலுவையில் உள்ளதால் கோட்டாட்டாசியர் அளவில் துணை வட்டாட்சியர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும்.
தேர்தல் நடைபெறும் காலம் தவிர்த்து மற்றக் காலங்களில் தேர்தல் அலுவலர்களை பணி மாறுதல் செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு திட்டத்திலுள்ள குளறுபடிகளை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டு. என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். செந்துறை வட்டத் தலைவர் வேலுமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
ஜெயங்கொண்டம்:
தஞ்சை அருகே உள்ளது பூண்டி கிராமம். இப்பகுதியை சேர்ந்த 6 பேர் அரியலூரில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை ஒரு வேனில் புறப்பட்டனர்.
வேன் அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி, நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ‘நீட்’ தேர்வு முறை என்பது முற்றிலும் தவறானது. நாடு முழுவதும் ஒரே முறையான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தென்னிந்தியாவில் தான் 80 சதவீத மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 20 சதவீத மருத்துவ கல்லூரிகள் தான் வட இந்தியாவில் உள்ளது.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் கல்வி முறை மாறுபட்டுள்ளது. ஆனால் மத்திய பாடத்திட்டத்தின் படி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் கிராமபுறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும். மீதமுள்ள 15 சதவிகித இடம் தான் மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பிளவு பட்டிருக்கும் அ.தி.மு.க. அணிகள் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் கனவு நினைவாகும். ஜிஎஸ்டி. வரிவிதிப்பால் 40 சதவிகிதம் பாதிப்பு ஏற்படும். இதனால் விலைவாசி அதிகரிக்கும். தற்போது தமிழகத்தில் சரியான அரசியல் தலைவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அந்த இடத்திற்கு ரஜினி வந்தால் புதிய நீதி கட்சி ஆதரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் தொலை தொடர்புத்துறை துணைக் கோட்ட பொறியாளர் பதவியேற்று 3 ஆண்டுகளில் அனைத்து வழிகளிலும் கையூட்டு பெற்றுக் கொண்டு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார்.
தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை. ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்குவதில்லை. சம்பளத்தை முறையாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கான சம்பளத்தை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் துணைக் கோட்ட பொறியாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை எனில் எங்களின் போராட்டம் தீவிரமடையும் என பிஎஸ்என்எல். ஊழியர்கள் எச்சரித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸ்லன்பாஷா, பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், பெரியசாமி, இளங்கோவன், தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






