search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் போராட்டம்"

    • பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
    • மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அர்லா ஊராட்சியில் மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள நீலபெண்டா, பெட கருவு, கொத்தலோ சிங்கி, பத்தலோ சிங்கி ஆர்ல பிட்ரிக் கெட்டா, குர்ரலா பைலு கட்டாபலேம் உள்ளிட்ட கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். கர்ப்பிணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மலை கிராம மக்களுக்கு வாக்குச்சாவடி வசதி ஏற்படுத்தவில்லை.

    அவர்கள் 15 கிலோமீட்டர் நடந்து சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மலை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    15 கிலோமீட்டர் நடந்து சென்று ஓட்டு போட முடியாது. எங்கள் மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 

    • தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.
    • குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கெரடா மட்டம். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்காக அரசின் சார்பில் 90 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வீடுகளில் 36 வீடுகளில் மாற்றுத்திறனாளிகளும், மீதமுள்ள 54 வீடுகளில் கெரடாமட்டம் சுற்று வட்டார பகுதிகளில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக குடியிருக்க அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்கள் இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.

    எனவே தங்களுக்கு வேறு பகுதியில் அரசின் சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    மக்களின் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, கிராம மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் கிராம மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட நிர்வாகத்துக்கு இதுகுறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த ஏராளமான பெண்கள் 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினர். இவர்கள் மாவட்ட மகளிர்திட்ட அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் கீழ் தங்கள் குழுக்களுக்கு கடன்கேட்டு விண்ணப்பித்தனர்.

    இந்நிலையில் தங்கள் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து பெண்கள் கூறுகையில், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் அந்த கடன் தொகையை எங்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.

    எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்கவேண்டும் என்றனர். போராட்டம் குறித்து அறிந்ததும் பெரியகுளம் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். ரூ.50 லட்சம் கடன்தொகையை பெற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி தெற்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் தற்காலிகமாக இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கி வந்துள்ளார்.

    ஆனால் இந்த இணைப்பின் மூலம் வரும் தண்ணீர் 200 குடியிருப்பிற்கு போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என கூறி, அப்பகுதி பொதுமக்கள் அரியலூர்-தா.பழூர் சாலையில் கீழ மைக்கேல்பட்டி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார், காரைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து போதிய அளவில் தண்ணீர் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த சாலை மறியலால் அரியலூர்-தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.

    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.

    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில் குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை.
    • கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்தும் பலனில்லை என்றும், அலைகழிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் உரிமைத்தொகை குறித்து அதிகாரிகளிடம் இருந்து நடந்து எந்த முறையான பதிலும் வராததாலும், உரிமைத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறுத்து நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாவிட்டாலும் விட்டு விட்டு பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஹரே ராம் நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பெண்கள் அதில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பலத்த மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது சிறிய மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தேங்கிய தண்ணீரில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிகள், மருத்துவ மனை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள பொது இடங்களில் மது குடிப்பதும், சில நேரங்களில் போதையில் தகராறில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி 31-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஜெயகவிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்
    • போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

    திருவண்ணாமலை ஒன்றியம் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய், ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவாக செயல்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த குப்பை கிடக்கில் குப்பை கொட்ட சென்ற லாரி டிரைவர் சிலர் தாக்கியதாகவும், பேச்சுவார்த்தைக்கு சென்ற திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்தை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை சுற்றி அளவீடு நடப்பட்ட கற்களை சிலர் உடைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அதன் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 14 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று மாலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குப்பதிவு செய்து உள்ள 20 பேரின் குடும்பத்தினரும் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போர்ட்டிகோவில் அமர்ந்து பெண்கள் ஒன்றிணைந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தரையில் படுத்து கொண்டு கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், புனல்காடு மலை அடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

    பின்னர் அவர்களில் சிலரை போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் முருகேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட அவர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பெரும்பாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் பறை இசை மேளங்கள் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாலை ஊராட்சி மன்ற தலைவராக கஸ்தூரி சரவணன், துணைத் தலைவராக ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர். பெரும்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்க வேண்டும் என பெரும்பாலை ஊராட்சி மன்ற தலைவர், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்கள் என தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பெரும்பாலை அல்லாத வேறொரு ஊராட்சியில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது முறையாக பதிலளிக்காமல் உதாசீனப்படுத்துவதாக தெரிவித்த இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் பெரும்பாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெரும்பாலை ஊராட்சியில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்தும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தகுதியான எங்கள் அனைவரையும் புறக்கணித்துவிட்டு, வேறொரு ஊராட்சியை சேர்ந்த நபரை முறைகேடாக பணித்தள பொறுப்பாளர் பணியில் அமர்த்தி உள்ளனர் என குற்றம் சாட்டினர். மேலும் பறை இசை மேளங்கள் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    • மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தணி தாசில்தார் வெண்ணிலா தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வந்தவுடன் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை மதுக்கடையை மூடவும் உத்தவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×