search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடை கொள்ளை"

    • விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • ஐயப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4½ கிலோ நகை கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர் புதைத்து வைத்து இருந்த 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் விஜய் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னை வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர்.

    அப்போது அய்யப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய்யை கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.
    • நகைக்கடையில் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்துக்கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.

    மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நகைக்கடையில் 200 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்து சென்று கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் இந்த சம்பவத்தில் இவர் மட்டும் தனியாக ஈடுபட்டரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொள்ளை அடித்த நகைகள் எங்கே? யாரிடமாவது நகைகளை கொடுத்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை மீட்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்பிறகே கொள்ளையன் யார் என்ற விவரத்தை போலீசார் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    • கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதி.

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையும் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பல கிலோ நகைகள் மாயமாகி இருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஊழியர்கள் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். நகைகள் எப்படி கொள்ளை போனது என்பது குறித்து கடை முழுவதும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லக்கூடிய கதவு திறந்து கிடந்தது. இந்த கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இன்று கதவு திறந்திருந்ததால் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் முன்பக்கம் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால், பின்பக்கம் உள்ள கார்பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து நகைக்கடைக்கு செல்லக்கூடிய படியில் மேலே ஏறி சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மீண்டும் அதே பகுதி வழியாக கீழே இறங்கி வந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த நகைக்கடையில் 20 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் மேலாளர் வந்து பார்த்த பின்பே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நகைக்கடையில் கட்டிட பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு செல்வது போல் 3 பேர் சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏசி வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக கொள்ளையர்கள் சென்ற விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

    • இக்கடைக்கு திங்கட்கிழமை வாராந்திர விடுமுறை நாளாகும்
    • முன்னதாக கண்காணிப்பு கேமிராவை செயலிழக்க செய்தனர்

    இந்திய தலைநகர் புது டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது ஜங்க்புரா. ஜங்க்புராவில் உயர் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி போகல்.

    இங்குள்ள பிரபல நகைக்கடை உம்ராவ் ஜுவல்லர்ஸ். இக்கடை 4 தளங்களை கொண்டது.

    இக்கடைக்கு வாராந்திர விடுமுறை நாள் திங்கட்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விற்பனை நடைபெற்றது. அதற்கு பிறகு விற்பனை நேரம் முடிந்ததும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இக்கடையை கொள்ளையடிக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கொள்ளையர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்திற்கு மேல், கடை மூடியிருந்த நேரத்தில் கடையின் மேற்கூரைக்கு எப்படியோ வந்தனர். அங்கிருந்து தரைப்பகுதிக்கு வந்திறங்கினர்.

    முன்னதாக அக்கடையின் கண்காணிப்பு கேமிராக்களை திருடர்கள் செயலிழக்க செய்தனர். அதற்கு பிறகு அக்கடையின் தரைதளத்தில் உள்ள "ஸ்ட்ராங் ரூம்" எனப்படும் பாதுகாப்பு பெட்டக அறையில் துளையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளையும், வெளியில் ஷோ ரூமில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை கடையை திறந்து பார்த்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த அனைத்து நகைகளும் பறி போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர்.

    கொள்ளையர்கள் செயலிழக்க செய்யும் முன்பு வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். எவரையும் காவலில் எடுக்கவில்லை என்றும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று அரியானாவில் உள்ள அம்பாலாவில் ஒரு கூட்டுறவு வங்கியில் இதே போன்று துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கொள்ளை தொடர்பாக இதுவரையில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளியான கங்காதரன், அருண், ஸ்டீபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்.

    கடந்த மாதம் 10-ந் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். வெளி மாநில கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் முகாமிட்டு அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கொள்ளை தொடர்பாக இதுவரையில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வெல்டிங் கடைக்காரர்கள், கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூருவில் தங்கி இருந்த தனிப்படை போலீசாரிடம் திவாகரன் (28), கஜேந்திரன் (31) ஆகியோர் சிக்கினர். இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட கஜேந்திரன், திவாகரன், கர்நாடக மாநிலம் தோட்டோ பட்டப்புரம் காரனோடை கிராமத்தை சேர்ந்தவர்கள். கஜேந்திரன் வெல்டராகவும், திவாகர் டிரைவராகவும் உள்ளனர்.

    பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்கள் 20 நாட்களுக்கு மேலாக பிடிபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கங்காதரன், அருண், ஸ்டீபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கடந்த மாதம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னை:

    பெரம்பூர், அகரம் சந்திப்பில் 2 மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஜெ.எல் என்ற நகைக்கடை உள்ளது. 2-வது தளத்தில் நகைக்கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளது. நகைக்கடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

    கடந்த மாதம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில், பெங்களூருவில் வைத்து 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.
    • நகைக்கடை இருக்கும் பகுதிக்கு நேற்று முன்தினம் இன்னோவா காரில் வந்த கொள்ளையர்கள் நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் அகரம் சந்திப்பில் செயல்பட்டு வந்த ஜெ.எல்.கோல்டு பேலஸ் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான வைரநகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    12 ஆண்டுகளாக இந்த நகை கடையை நடத்தி வரும் ஜெயச்சந்திரன் என்பவர் 2-வது தளத்தில் வசித்து வருகிறார். முதல் மாடியில் இருந்த கடையில் தான் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    நேற்று இரவில் வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்ற ஜெயச்சந்திரன் நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்து பின்பக்கம் உள்ள வாசல் வழியாக கடையை திறந்துஉள்ளே சென்ற போது தான் கடையில் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கடை உரிமையாளரான ஜெயச்சந்திரன் மாடியில் வசித்து வந்த நிலையிலும் முக்கிய சாலையையொட்டியே கடை இருந்த போதிலும் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு ஷட்டரை உடைத்து உள்ளே சென்று நகைகளை மூட்டை கட்டி அள்ளிச் சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கடை உரிமையாளரான ஜெயச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இரவில் சத்தம் ஏதும் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இரும்பு ஷட்டரை உடைத்து எடுக்கும் போது சத்தம் கேட்காத வகையில் செயல்படும் நவீன வெல்டிங் மிஷினை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

    நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.

    நகைக்கடை இருக்கும் பகுதிக்கு நேற்று முன்தினம் இன்னோவா காரில் வந்த கொள்ளையர்கள் நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் ஊரடங்கிய பிறகு தைரியமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நகைக்கடை இருக்கும் முதல் மாடிக்கு சென்று ரோட்டின் பார்வை தெரியாமல் இருப்பதற்காக துணியை கட்டிஅவர்கள் மறைத்துள்ளனர். பின்னர் கியாஸ் வெல்டிங்கை பயன்படுத்தி ஷட்டரை உடைப்பதில் கில்லாடியான கொள்ளையன் ஒருவன் ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு ஷட்டரை உடைத்து எடுத்துள்ளான். பின்னர் கொள்ளையர்கள் 4 பேர் நகைக்கடைக்குள் புகுந்து 9 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அள்ளி பைகளில் போட்டு மூட்டை கட்டினர்.

    பின்னர் தாங்கள் வந்த காரிலேயே கொள்ளையர்கள் நகைகளுடன் தப்பி சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக துப்புதுலக்க உத்தரவிட்டர். இதையடுத்து கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் அண்ணா நகர் துணை கமிஷனர் ரோஹிந்தநாதன், கோயம்பேடு துணை கமிஷனர் குமார், உதவி கமிஷினர்கள் செம்பேடு பாபு, தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக துப்பு துலக்க களம் இறங்கினர். கொள்ளையர்கள் நகைக் கடையில் இருந்து வீடியோ பதிவையும் தூக்கி சென்று விட்டனர்.

    இதனால் கொள்ளையர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து எதிர் திசையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். ஆனால் அதில் கேமரா காட்சிகள் தெளிவாக இல்லை.

    இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக எதுவும் தெரியாமல் போலீசார் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்கள்.

    கொள்ளையர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது போன்றகொள்ளை சம்பவங்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டவர்கள் யார், யார்? என்பது பற்றிய பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தற்போது வரை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

    கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளும், மேற்பார்வையிட்டு வரும் அதிகாரிகளும் கலங்கி போய் உள்ளனர்.

    நகைக்கடையில் கைவரிசை காட்டியவர்கள் ஆந்திர மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பெரம்பூர், அகரம் சந்திப்பில் 2 மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஜெ.எல் என்ற நகைக்கடை உள்ளது. 2-வது தளத்தில் நகைக் கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளது.

    நகைக்கடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிச்சென்றனர். கடையின் உரிமையாளர் 2-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக உரிமையாளர் ஜெயச்சந்திரன் கீழ் தளத்துக்கு வந்தார். அப்போது கடையின் இரும்பு வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் முழுவதும் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயச்சந்திரன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு, தமிழ்வாணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பு உள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் அள்ளி சென்று உள்ளனர்.

    கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பெரிய நகைகளை மட்டும் கொள்ளையர்கள் எடுத்து சென்று இருக்கிறார்கள். சிறிய நகைகள் கடையில் சிதறி கிடந்தன.

    கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர். ஷட்டரை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து உள்ளனர். சுமார் 3 அடி உயரம் 2 அடி நீளத்தில் துளை போல் வெட்டி எடுத்து புகுந்துள்ளனர்.

    இந்த நகைக்கடையில் காவலாளி இல்லை. கடை யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் ஷட்டரை வெட்டி எடுத்தபோது சத்தம் கேட்காமல் இருந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பல நாட்கள் நகைக் கடையை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    நகைக்கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×