search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு
    X

    பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு

    • ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையும் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பல கிலோ நகைகள் மாயமாகி இருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஊழியர்கள் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். நகைகள் எப்படி கொள்ளை போனது என்பது குறித்து கடை முழுவதும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லக்கூடிய கதவு திறந்து கிடந்தது. இந்த கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இன்று கதவு திறந்திருந்ததால் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் முன்பக்கம் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால், பின்பக்கம் உள்ள கார்பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து நகைக்கடைக்கு செல்லக்கூடிய படியில் மேலே ஏறி சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மீண்டும் அதே பகுதி வழியாக கீழே இறங்கி வந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த நகைக்கடையில் 20 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் மேலாளர் வந்து பார்த்த பின்பே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நகைக்கடையில் கட்டிட பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு செல்வது போல் 3 பேர் சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏசி வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக கொள்ளையர்கள் சென்ற விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×