search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரம்பூர் நகைக்கடையில் துணிகரம்- ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை
    X

    பெரம்பூர் நகைக்கடையில் துணிகரம்- ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை

    • ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பெரம்பூர், அகரம் சந்திப்பில் 2 மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஜெ.எல் என்ற நகைக்கடை உள்ளது. 2-வது தளத்தில் நகைக் கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளது.

    நகைக்கடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிச்சென்றனர். கடையின் உரிமையாளர் 2-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக உரிமையாளர் ஜெயச்சந்திரன் கீழ் தளத்துக்கு வந்தார். அப்போது கடையின் இரும்பு வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் முழுவதும் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயச்சந்திரன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு, தமிழ்வாணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பு உள்ள 5 கேரட் வைரங்களை கொள்ளை கும்பல் அள்ளி சென்று உள்ளனர்.

    கடையில் விற்பனைக்கு வைத்திருந்த பெரிய நகைகளை மட்டும் கொள்ளையர்கள் எடுத்து சென்று இருக்கிறார்கள். சிறிய நகைகள் கடையில் சிதறி கிடந்தன.

    கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளனர். ஷட்டரை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து உள்ளனர். சுமார் 3 அடி உயரம் 2 அடி நீளத்தில் துளை போல் வெட்டி எடுத்து புகுந்துள்ளனர்.

    இந்த நகைக்கடையில் காவலாளி இல்லை. கடை யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் ஷட்டரை வெட்டி எடுத்தபோது சத்தம் கேட்காமல் இருந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பல நாட்கள் நகைக் கடையை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    நகைக்கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×