search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை வழக்கு- வீடியோ பதிவுகள் தெளிவாக இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
    X

    நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை வழக்கு- வீடியோ பதிவுகள் தெளிவாக இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்

    • நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.
    • நகைக்கடை இருக்கும் பகுதிக்கு நேற்று முன்தினம் இன்னோவா காரில் வந்த கொள்ளையர்கள் நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் அகரம் சந்திப்பில் செயல்பட்டு வந்த ஜெ.எல்.கோல்டு பேலஸ் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான வைரநகைகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    12 ஆண்டுகளாக இந்த நகை கடையை நடத்தி வரும் ஜெயச்சந்திரன் என்பவர் 2-வது தளத்தில் வசித்து வருகிறார். முதல் மாடியில் இருந்த கடையில் தான் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    நேற்று இரவில் வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்ற ஜெயச்சந்திரன் நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்து பின்பக்கம் உள்ள வாசல் வழியாக கடையை திறந்துஉள்ளே சென்ற போது தான் கடையில் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கடை உரிமையாளரான ஜெயச்சந்திரன் மாடியில் வசித்து வந்த நிலையிலும் முக்கிய சாலையையொட்டியே கடை இருந்த போதிலும் கொள்ளையர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு ஷட்டரை உடைத்து உள்ளே சென்று நகைகளை மூட்டை கட்டி அள்ளிச் சென்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கடை உரிமையாளரான ஜெயச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இரவில் சத்தம் ஏதும் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இரும்பு ஷட்டரை உடைத்து எடுக்கும் போது சத்தம் கேட்காத வகையில் செயல்படும் நவீன வெல்டிங் மிஷினை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

    நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது.

    நகைக்கடை இருக்கும் பகுதிக்கு நேற்று முன்தினம் இன்னோவா காரில் வந்த கொள்ளையர்கள் நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் ஊரடங்கிய பிறகு தைரியமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நகைக்கடை இருக்கும் முதல் மாடிக்கு சென்று ரோட்டின் பார்வை தெரியாமல் இருப்பதற்காக துணியை கட்டிஅவர்கள் மறைத்துள்ளனர். பின்னர் கியாஸ் வெல்டிங்கை பயன்படுத்தி ஷட்டரை உடைப்பதில் கில்லாடியான கொள்ளையன் ஒருவன் ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு ஷட்டரை உடைத்து எடுத்துள்ளான். பின்னர் கொள்ளையர்கள் 4 பேர் நகைக்கடைக்குள் புகுந்து 9 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அள்ளி பைகளில் போட்டு மூட்டை கட்டினர்.

    பின்னர் தாங்கள் வந்த காரிலேயே கொள்ளையர்கள் நகைகளுடன் தப்பி சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக துப்புதுலக்க உத்தரவிட்டர். இதையடுத்து கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் அண்ணா நகர் துணை கமிஷனர் ரோஹிந்தநாதன், கோயம்பேடு துணை கமிஷனர் குமார், உதவி கமிஷினர்கள் செம்பேடு பாபு, தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக துப்பு துலக்க களம் இறங்கினர். கொள்ளையர்கள் நகைக் கடையில் இருந்து வீடியோ பதிவையும் தூக்கி சென்று விட்டனர்.

    இதனால் கொள்ளையர்கள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து எதிர் திசையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தனர். ஆனால் அதில் கேமரா காட்சிகள் தெளிவாக இல்லை.

    இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக எதுவும் தெரியாமல் போலீசார் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்கள்.

    கொள்ளையர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது போன்றகொள்ளை சம்பவங்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டவர்கள் யார், யார்? என்பது பற்றிய பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தற்போது வரை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

    கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளும், மேற்பார்வையிட்டு வரும் அதிகாரிகளும் கலங்கி போய் உள்ளனர்.

    நகைக்கடையில் கைவரிசை காட்டியவர்கள் ஆந்திர மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×