search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகைக்கடையில் 200 பவுன் தங்கம் கொள்ளை: சிக்கிய கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் விசாரணை
    X

     நகைக்கடையில் கொள்ளையடித்து விட்டு ரோட்டில் சர்வசாதாரணமாக நடந்து சென்ற கொள்ளையன்.

    நகைக்கடையில் 200 பவுன் தங்கம் கொள்ளை: சிக்கிய கொள்ளையனிடம் ரகசிய இடத்தில் விசாரணை

    • எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.
    • நகைக்கடையில் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்துக்கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.

    மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நகைக்கடையில் 200 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்து சென்று கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் இந்த சம்பவத்தில் இவர் மட்டும் தனியாக ஈடுபட்டரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொள்ளை அடித்த நகைகள் எங்கே? யாரிடமாவது நகைகளை கொடுத்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை மீட்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்பிறகே கொள்ளையன் யார் என்ற விவரத்தை போலீசார் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×