search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state youth"

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடியாத்தம் அருகே சுற்றித்திரிந்ததால் சந்தேகம்
    • மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது

    வேலூர்:

    குடியாத்தம் டவுன், ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம்பட்டியில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    இதனால் வட மாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். பொதுமக்கள் வட மாநில வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    மனநலம் பாதிக்கப்பட்டு ரெயிலில் வரும் வட மாநில வாலிபர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம் பட்டியில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது.

    அதேபோல் தான் இந்த வாலிபரும் வந்து உள்ளார். மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிந்ததால் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலியானார்.
    • அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா?

    மதுரை

    சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை ெரயிலில் சென்னையை சேர்ந்த அருண்சுந்தர் என்பவரின் மனைவி மாலதி (48), தனது மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் கடையநல்லூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்

    அப்போது மதுரை கூடல் நகர் ெரயில்வே ஜங்ஷன் முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஓடும் ரெயிலில் மாலதியிடமிருந்து செயினை பறித்துக் கொண்டு ெரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த நாலு பவுன் செயினில் ஒரு பாதியை தன் கையில் பிடித்ததினால் இரண்டு பவுன் மட்டும் பறிக்கப்பட்டது.

    இது குறித்து மாலதி மதுரை ெரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே ெரயிலில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, 

    சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியின் காம்பவுண்ட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது உத்திரபிரதேச மாநிலம் மெரகாபாத் மாவட்டம் முஜாப்பூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா காதூன் (36) என தெரியவந்தது.

    மேலும் ரேஷ்மா காதூனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று ரேஷ்மா காதூன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது அதே மாவட்டத்தை சேர்ந்த அன்கீத்குமார் (24), ரேஷ்மா காதூனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரேஷ்மா காதூனுக்கும், அன்கீத்குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் அன்கீத்குமார் ரேஷ்மாகாதூனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைக்க ரேஷ்மா காதூனை நிர்வாணமாக்கி உடலை அருகே உள்ள தனியார் பள்ளி காம்பவுண்டிற்குள் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் தலைமறைவான அன்கீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரேஷ்மா காதூனை கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அன்கீத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
    • புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் வடமாநில வாலிபர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது குறைந்தது. இந்தநிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் தன்மைய் ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு இவர்கள் 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்தனர்.

    அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா ஆகியோரை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

    தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் தாக்கி விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
    • மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    கோவை,

    மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர் 65 வயது தொழிலாளி. இவர் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைப்புதூரில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    மேலும் ராஜேஷ் போஜா செட்டி அடிக்கடி அந்த தொழிலாளியை தொடர்பு கொண்டு அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி வந்தார்.ஆனால் தொழிலாளி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    இந்நிலையில் அவரது மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.

    இது ராஜேஷ் போஜா செட்டிக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் நேற்று காலை திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு இருந்த தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் போஜா செட்டி தொழிலாளி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை அடித்து உதைத்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர்களையும் ராஜேஷ் போஜா செட்டி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார்.

    இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் திருமண மண்டபத்திற்குள் புகுந்து திருமணத்தை நிறுத்த முயன்ற ராஜேஷ் போஜா செட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திண்டுக்கல் அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கினர்
    • வடமாநில வாலிபர், திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கினர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றி வந்தார். அவர் மயக்க நிலையில் சாப்பிடுவதற்கு ஓட்டல் ஏதேனும் உள்ளதா? என அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவரது மொழி தெரியாததால் அங்கு கஞ்சா போதையில் இருந்த 2 வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்களும் விசாரித்தபோது பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு திருடவந்ததாக கஞ்சா ஆசாமிகள் தெரிவி த்தனர். இதனையடுத்து ஹிந்தி தெரிந்த ஒருவர் விசாரித்தார். அப்போது தான் போர்வெல் லாரியில் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்து அனைவரும் சென்று விட்டுதன்னை பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதாகவும் கூறினார்.

    இதனால் ஓட்டல் எங்கு உள்ளது என தெரியாமல் பசியில் இருந்ததாகவும், தான்கேட்டதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் மற்றொரு வாகனத்தின் மூலம் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47) இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

    இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ்வாஸ் துடிதுடித்து இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபின்சர்க்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சி கொல்லத்தெரு பகுதியில் நேற்று மதியம் 5 பேர் கொண்ட கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அங்கு வசித்து வரும் சிலர் கவனித்து, அவர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் 5 பேரும் அங்கிருந்து நைசாக தப்பித்து வேறு இடத்திற்கு சென்றனர். பின்னர், இரவு 8 மணியளவில் கருப்பூர் மேல் வீதியில் நின்று கொண்டிந்த 6 வயது குழந்தையை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நைசாக பேசி கடத்த முயன்றதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் வருவதை அறிந்த 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.

    இதனால் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கூறி பொதுமக்கள் அவரை தர்மஅடி கொடுத்து சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த நபரின் கைகளை கட்டி வைத்தனர். அவருக்கு வயது 30 இருக்கும் என தெரிகிறது.

    இதுபற்றி கருப்பூர் புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தமிழ் மொழியில் பேசாமல் இந்தியில் பேசியதால் போலீசாருக்கும், அங்கிருந்த மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதையடுத்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஆனால் அவரது பெயர் தெரியவில்லை. அவருடன் வந்த 4 பேர் யார்? இவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கூலிவேலை செய்ய வந்தார்களா? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×