என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சித்தோடு அருகே குடோனில் பதுக்கிய 1000 கிலோ போதை பொருட்கள் சிக்கியது வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் போதை பொருட்கள். 

    சித்தோடு அருகே குடோனில் பதுக்கிய 1000 கிலோ போதை பொருட்கள் சிக்கியது வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×