என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
    X

    டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

    பாப்பாங்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாரியங்காவல்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தை அடுத்துள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயல் வெளியில் அவசர அவசரமாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த பாப்பாங்குளம் கிராம மக்கள், நில உரிமையாளரிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் வீடு கட்டுவதாக கூறி உள்ளார். ஆனால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி, விவசாய நிலங்களில் பெண்கள் மாடு, ஆடுகள் மேய்த்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் எங்கள் கணவன்மார்கள் டாஸ்மாக் கடை தூரமாக இருப்பதால் 1 கோட்டருடன் முடித்து கொள்கிறார்கள். ஆனால் கடை அருகில் இருந்தால் கடை முன்பே படுத்து கொண்டு குடிப்பதுடன் எங்கள் நகை மற்றும் பொருட்களை வைத்து குடித்து விடுவார்கள். பெண்களாகிய எங்களுக்கு பாதுகாப்பில்லை. ஆகவே எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம். மீறி கடையை திறந்தால் பட்டினி போர் நடத்தி உயிரை விடவும் தயங்கமாட்டோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×