என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரபட்சமின்றி மணல் வழங்க கோரி 2-வது நாளாக லாரி டிரைவர்கள் சாலை மறியல்
    X

    பாரபட்சமின்றி மணல் வழங்க கோரி 2-வது நாளாக லாரி டிரைவர்கள் சாலை மறியல்

    தா.பழூர் அருகே பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் மணல் வழங்க கோரி 2-வது நாளாக லாரி டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தமிழக அரசின் மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளுவதற்கு உரிய விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றாமல் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதி தருகிறார்கள் என்றும், பிற ஊர்களில் இருந்து வரும் லாரிகளுக்கு அனுமதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் கூறி லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து லாரி டிரைவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் அவர்களது கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால், நேற்று காலை அதிருப்தியடைந்த லாரி டிரைவர்கள் மதனத்தூர் சாலையில் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு லாரி டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×