என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கழகத் தலைவர் கோபால் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
    • அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.

    அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 



    • மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • 2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.

    இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2-வது மாநாட்டை நடத்த தி.மு.க. இளைஞரணி முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான தி.மு.க. இளைஞரணி மாநாடு ஜனவரி 24-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    2-வது மண்டல மாநாடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

    • தங்கம் விலை மீண்டும் ரூ.99 ஆயிரத்தை தாண்டியது.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இதுவரை இல்லாத உச்சமாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    நேற்றைய நிலவரப்படி மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.99 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 224 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

    16-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,800

    15-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,120

    14-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    13-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-12-2025- ஒரு கிராம் ரூ.222

    16-12-2025- ஒரு கிராம் ரூ.211

    15-12-2025- ஒரு கிராம் ரூ.215

    14-12-2025- ஒரு கிராம் ரூ.210

    13-12-2025- ஒரு கிராம் ரூ.210

    • 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
    • இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை:

    சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    • முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
    • சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது.

    இந்நிலையில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.

    மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் கலந்து கொள்ளும் ஒரு எழுச்சிமிகு மாநாடாக கழகத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்கள்.

    இந்த மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்க மகளிரணி மாநாடாக அமைய உள்ளது.

    வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவதற்கான ஒரு முன்னேற்பாடாக, முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

    நிச்சயம் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை. முதலமைச்சரின் எஃகு கோட்டையாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பை தருவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள்.

    முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். மாநாட்டில் மகளிர் மட்டும் இடம் பெறுவார்கள்.

    அரசு நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும், முடிந்த திட்டங்களுக்கான திறப்பு விழா, தொடக்க விழா இருக்கும்.

    இது இயக்கத்தின் மாநாடு, மகளிரணி மாநாடு. ஏற்கனவே திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் இளைஞரணி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் தி.மு.க.வின் பக்கம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    எந்த பகுதி யாருடைய கோட்டை என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
    • வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

    இதை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.

    இதையடுத்து, நோட்டீசை திரும்ப பெற்ற வருமான வரித்துறை, ரூ.13 கோடியே 69 லட்சம் வரி பாக்கியை செலுத்தும் படி புதிய நோட்டீசை அனுப்பியது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.பிரதாப், 'வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார். எனவே, வரி பாக்கித் தொகையை செலுத்த முடியாது என தீபா கூற முடியாது' என்றார்.

    ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்தியகுமார், 'ஜெயலலிதா வருமான வரிப்பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி என தெரிவித்த வருமான வரித்துறை, பின்னர் ரூ.36 கோடியாக குறைத்தது.

    தற்போது, ரூ.13 கோடியே 69 லட்சம் என கூறுகிறது. உண்மையிலே எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வருமான வரித்துறை தெளிவாக கூறவில்லை' என்றார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
    • ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.

    தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.

    2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார். 

    • இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிப்பு.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது. இன்னும் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு நேரம் இருப்பதால் மேலும் த.வெ.க. தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடையும்.
    • தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் நெல்லை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் கடந்த 9-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.

    மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.

    அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். சாலைகளில் நெரிசலை குறைக்கவும், தொண்டர்கள் பொதுமக்கள் சரியாக வாகன நிறுத்தம் பகுதிக்கு வந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு வரும் வகையில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் உள்ள ஏற்றுமதியாளருக்கு தினமும் ரூ.60 கோடி அளவிற்கு இழப்பு.
    • அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.

    சென்னை :

    இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    * இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பு பாதிப்புகளை இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைந்து களைய வேண்டும்.

    * அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைகளின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    * இந்தியாவின் ஜவுளி, ஆடைத்துறை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

    * வரி விதிப்பின் காரணமாக தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறையில் நெருக்கடி அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

    * அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்ட இடர்பாடு வெறும் பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல ஈடு செய்ய முடியாத இழப்பு.

    * நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில் ஏற்றுமதியாளருக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * பின்னலாடைத்துறையில் 30 விழுக்காடு வரை கட்டாய உற்பத்தி குறைப்பு ஏற்பட்டுள்ளது.

    * திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் உள்ள ஏற்றுமதியாளருக்கு தினமும் ரூ.60 கோடி அளவிற்கு இழப்பு.

    * வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுகிறது.

    * அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.

    * அமெரிக்காவின் வரி விதிப்பு இளைஞர், மகளிர் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலான நீண்டகால தாக்கம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

    • புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
    • தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்திவிட்டு இரவு 8.30 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது  அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    தீ பரவத் தொடங்கியதை அடுத்து ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கினர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக போராடி தீயை அனைத்து உள்ளே சிக்கியர்வைகளையும் மீட்டனர்.

    ஆனால் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி உயிரிழந்தார். மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏசி மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

    ×