என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
    • பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-

    எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

    தொடர்ந்து விஜய் பேசியதாவது:-

    * அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.

    * வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும்.

    * ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.

    * பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.

    * பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்.

    * பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி.

    * எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி.

    * தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.

    * த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?

    * எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?

    * அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும்.

    * 24 மணி நேரமும் தி.மு.க.வினரின் நோக்கம் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.

    * ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான்.

    * நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல்.

    * ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.

    * மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    * ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக வேலை நடக்கிறது.

    * தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    * மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.

    * மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது.

    * ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது.

    * பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

    * நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள் என்றார். 

    • இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் இல்லை என்கிறார் ஆதவ் ஆர்ஜூனா.
    • நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    ஈரோடு பரப்புரையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் மேலும் பேசியதாவது:-

    அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது.

    கொள்கை தலைவர் சமூக சீர்த்திருத்தவாதி எங்களுடைய வழிகாட்டி தந்தை பெரியாரின் வழியில் அவர் பாதத்தை தொட்டு நமக்கான மிகப்பெரிய பயணத்தை ஈரோட்டில் இருந்து தலைவர் தொடங்குகிறார்.

    நம் குறிக்கோள் என்ன? நம் லட்சியம் என்ன? வெறும் அதிகாரத்தை மட்டும் அடைவதா?

    இங்கு இருக்கக்கூடிய ஈரோடு மக்கள் எந்த அளவிற்கு, ஒவ்வொரு விவசாயிகள், ஒவ்வொரு நெசவாளர்கள், ஒவ்வொரு தொழிலாளர்கள் நம்முடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துயரத்தில் கடக்கின்றனர்.

    இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிர்வாகத்தை கொடுத்துள்ளார்கள்.

    இதை மாற்ற வேண்டும் என்றால் யாரால் மாற்ற முடியும்? தமிழக வெற்றிக் கழகத்தால், தலைவர் விஜயால் மட்டுமே மாற்ற முடியும்.

    இன்று இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை த.வெ.க. தான்.

    திமுக நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் இளைஞர்களே இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும்.
    • மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-

    * மஞ்சள்... மஞ்சள்... பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.

    * நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க.

    * நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.

    * இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது.

    * அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண்.

    * இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.

    * காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.

    * பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.

    * இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று பேசினார். 

    • ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.
    • பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்.

    * ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.

    * மிசாவில் இருந்தபோது என்மனைவி கோபித்துக்கொண்டு அப்செட்டாகி ஏதாவது முடிவு எடுத்து இருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்து பாருங்க... எவ்வளோ கொடுமைகள் எனக்கு வந்தபோதும், என்னை அவர் ஊக்கப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்.

    * ஓராண்டு காலம் மிசாவில் சிறையில் இருந்தபோது பொறுமையாக இருந்தவர் எனது மனைவி.

    * பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.

    * பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம்.

    * பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் 16 குழந்தைகள் இல்லை 16 செல்வங்கள்.

    * பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என புதுமணத் தம்பதிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர்.
    • உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் விஜயமங்கலத்திற்கு வந்தடைந்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள்.

    தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர்.

    உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள்.

    உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்று பேசினார். 

    • கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.
    • கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புது எனர்ஜி, உற்சாகம் எனக்கு வந்துவிடுகிறது.

    * ஒரு மாவட்டத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை செல்லும் நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறேன்.

    * கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.

    * பல மாவட்டங்களில் உற்சாகமான வரவேற்பு அளித்தாலும் கொளத்தூர் தொகுதியில் தரும் வரவேற்பு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

    * எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன்.

    * மணமக்களோடு இந்த விழாவில் பங்கேற்று இருப்பது உற்சாகத்தை தருகிறது.

    * அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.

    * மினி ஸ்டேடியம், வண்ண மீன் விற்பனை மையம், பாலங்கள், அரசு மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.

    * கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை தரம் உயர்த்தி இருக்கிறோம்.

    * கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

    அவர்கள் இங்கு 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.

    குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் கொடைக்கானல் அருகில் உள்ள வட்டகானல் பகுதியில் சுமார் 1 மாதம் வரை தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் மலை உச்சியில் அமர்ந்து தியானம் செய்தும் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு முன்பாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளிநபர்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனையிட்டு வருகிறார்கள்.

    24 மணி நேரமும் செயல்படும் இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கோயம்புத்தூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். 
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.

    இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று கணக்கிட்டு படிவங்களை கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வழங்கி வந்தனர். இந்த கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 

    இந்நிலையில், நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97  லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதன்படி, 26.90 லட்சம் பேர் இறந்தவர்கள், 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள், 52.60 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், 3.98 லட்சம் இரட்டை பதிவுகள் என்று மொத்தம் 97.40 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 40.05 லட்சம் வாக்காளர்களில் 14.26 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 27.87 லட்சம் வாக்காளர்களில் 7.02 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 24.45 லட்சம் வாக்காளர்களில் 5.64 லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாயப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். 

    திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் விண்ணப்ப படிவம் 6-யை பெற்று அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ந்தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

    வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். அதன் பிறகு தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இடம் பெற செய்வார்கள்.

    இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியாகும்.

    • நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
    • இபிஎஸ் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

    #VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

    100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

    தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

    திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

    கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




     


    • காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,

    ஈரோடு:

    ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 20- ந் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி, ஈரோடு நகர், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி. பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு-பேருந்துநிலையம், காந்திஜிரோடு, ஈ.விஎன்ரோடு, ஆர்.கே.விரோடு, பிரப்ரோடு, பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு, சம்பத்நகர்,

    வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர்,சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையை கடந்து அங்குள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மனும், தி.மு.க. பாளை தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.எஸ். தங்கபாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நான்குவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து விழா முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    அதன்பின்னர் மறுநாள்(21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. அங்கு மேடையில் தற்காலிக கழிப்பறைகள், பயனாளிகள், பொதுமக்கள், நிர்வாகிகள் அமருவதற்கு சேர்கள், அவர்களுக்கு மின்விசிறி, தற்காலிக கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அவரது வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சாலைகளில் முழுவதுமாக வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிமாக நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடந்த பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை சாலை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, செல்லப்பாண்டியன் சிலை பகுதி சாலைகளை சீரமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் இருந்த மணல் குவியல்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் புறவழிச்சாலை, டக்கரம்மாள்புரம் செல்லும் சாலைகள் பளிச்சென காட்சி அளிக்கிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.
    • பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    சென்னை:

    சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

     

    அதனை தொடர்ந்து, பெரியார் நகரில் அமைய உள்ள அமுதம் அங்காடி கட்டும் பணிக்கும், ரூ.17.47 கோடி செலவில் கட்டப்பட உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். 

    ×