என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒத்து ஊதுகிறார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
- இபிஎஸ் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!
#VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!
100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.
தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.
திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!
கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






