என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் - பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
    X

    நெல்லையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் - பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

    • டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    நெல்லை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

    தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையை கடந்து அங்குள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மனும், தி.மு.க. பாளை தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.எஸ். தங்கபாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நான்குவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து விழா முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    அதன்பின்னர் மறுநாள்(21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. அங்கு மேடையில் தற்காலிக கழிப்பறைகள், பயனாளிகள், பொதுமக்கள், நிர்வாகிகள் அமருவதற்கு சேர்கள், அவர்களுக்கு மின்விசிறி, தற்காலிக கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அவரது வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சாலைகளில் முழுவதுமாக வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிமாக நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடந்த பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை சாலை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, செல்லப்பாண்டியன் சிலை பகுதி சாலைகளை சீரமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் இருந்த மணல் குவியல்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் புறவழிச்சாலை, டக்கரம்மாள்புரம் செல்லும் சாலைகள் பளிச்சென காட்சி அளிக்கிறது.

    Next Story
    ×