என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
- பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 2 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
- கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
- சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் பேசினார்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி.
தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்.
ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.
கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே. அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது.
அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைத்து உள்ளோம்.
ஜெயலலிதா. தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார்.
தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் என தெரிவித்தார்.
- இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம் என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.
- பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் #WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.
இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் "இயக்குநர் சுதா கொங்கரா தான் எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி' படம் அனைவரையும் கவரும் படமாக உருவாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
- ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
- செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார்.
- மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
- பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
கோவை:
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் அந்த மின்வழித்தொகுப்பில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்தி மாநகரின் ஒரு பகுதி.
மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
- அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது.
- எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் பிரச்சார கூட்டம் குறித்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது, தீவிர தவெக தொண்டரான அந்த பெண்," விஜய்க்கு ஓட்டு போடலனா சாப்பாட்டுல விஷம் வெச்சிடுவேன்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,"ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுருக்கேன். முதல் முறை அதிமுகவிற்கும், 2வது முறை சீமானுக்கும் போட்டேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜயக்கு தான்.
ஆட்சிக்கு வருபவர்களால் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அரிசு, பருப்புல கூட ஊழல் நடக்கிறது. இலவசம் இலவசம்-னு சொல்றாங்க ஆனா பஸ்-ல கூட ஏத்துறது இல்ல. தண்ணீர் வசதி, சாலை வசதி இல்ல.
விஜய் வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
என் வீட்டில் 9 பேர் இருக்காங்க. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க. அப்படி போடலனா சோத்துல விஷம் தான்.
விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோட்டு வரர்தா வேண்டியிருக்கேன" என்றார்.
- தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
- புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு நடந்து முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அத்துடன் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மனுக்கள் பெற்று, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடர பாடுபடவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்
அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர் அ.தி.மு.க. ஆட்சி சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்.
தே.மு.தி.க. சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய கோணத்தில் மாடுகள் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு போன்றவற்றை நடத்தி இயற்கை ஆர்வலர்களை ஈர்த்து வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் மாவட்டந்தோறும் பிரசார கூட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சட்டமன்ற தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரும் கடந்த அக்டோபர் 12-ந்தேதி தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணத்தை மதுரையில் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் அவர், தனது பயணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவு செய்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவும், அதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், அதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சாந்தமாக பதிலடி கொடுத்து வரும் அவர், தனது செயல்பாடுகள் மூலம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை சத்தமின்றி மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக தென் தமிழகத்தை குறிவைத்து சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை அழைத்து வருவதன் மூலம் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தை பயன்படுத்த தயாராகி வரும் நயினார் நாகேந்திரன் ஏற்பாடுகளை தற்போதே தொடங்கிவிட்டார்.
நேற்று டெல்லி சென்று திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறுகையில், எனது பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், இருவரில் ஒருவர் வருவார் என்றும் தெரிவித்தார். ராமேசுவரத்தில் காசி தமிழ்ச்சங்கமம் விழா, ராமேசுவரம்-தாம்பரம் புதிய வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா, புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் பிரசார பொதுக்கூட்ட நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டையில் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் தெரிகிறது. தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தை பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்தி வயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.
மேலும் தற்போது இந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அங்கு 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார், உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவும் ஆய்வு செய்தார். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் உள்ளிட்ட கருவிகளை வைத்தும், டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள், பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேடு தளம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ஜ.க. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் தமிழக பா.ஜ.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது.
- வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு முந்தைய விபரங்கள் பெறப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் திருப்பி வழங்கிய படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை(19-ந்தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-
தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
மேலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 57 ஆயிரத்து 658 வாக்காளர்கள் இறந்தவர்கள், 10 ஆயிரத்து 719 வாக்காளர்கள் இரட்டைபதிவு, 1 லட்சத்து 46 ஆயிரத்து 621 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்கள், 58 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கண்டறிய முடியாதவர்கள் மற்றும் மற்றவை 601 வாக்காளர்கள் என மொத்த 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள்.
வாக்காளர்களின் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
- தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.
சட்டசபை தேர்தல் வர உள்ளதால் மடிக்கணினி தர உள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
* மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.
* சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்.
* திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்கத்தான் போகிறது.
* மாணவர்கள் பயன்பெறும் திட்டத்துக்கு எதிராக அவதூறை பரப்ப வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.
* லேப்டாப் கொடுப்பதற்கு முன்பாகவே அதில் உரிய வசதிகள் இல்லை என்று குறை கூறுகிறார்.
* எடப்பாடி பழனிசாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது.
* Windows 11 OS உடன் உயர்தரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.
* அதிவேக Processor மற்றும் அதிகநேரம் தாங்கும் பேட்டரியுடன் லேப்டாப் உள்ளது.
* தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பா.ஜ.க.வின் எண்ணத்தை இ.பி.எஸ். பிரதிபலிக்கிறார்.
* பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
* மடிக்கணினி திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
- திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






