என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் சந்திப்பு"

    • இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம்.
    • செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.

    கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் நன்கு அறியப்பட்ட நபர். கொங்கு மண்டலத்தின் நாடி துடிப்பு என்ன, பிரச்சனைகள் என்ன என்றெல்லாம் அவருக்கு தெரியும். எனவே செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால்பதிக்க த.வெ.க முயற்சிகளை மேற்கொள்ளும்.

    மேலும் எம்.ஜி.ஆரின் அரசியலை கூடவே இருந்து பார்த்தவர் செங்கோட்டையன். எனவே எம்.ஜி.ஆரை அடிக்கடி முன்னிலைப்படுத்தி பேசும் விஜய்க்கு செங்கோட்டையின் அனுபவம் கைகொடுக்க வாய்ப்புள்ளது.

    அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் கூட்டங்களை மேலாண்மை செய்த அனுபவமும் செங்கோட்டையனுக்கு உள்ளது. அதிலும் ஜெயலிதாவின் சுற்றுப்பயணங்களை வகுத்து அதற்கு தலைமை தாங்கி பிரசார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாகவும் அவர் இருந்துள்ளார். இதனால் புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.கவில் அவர் இணைந்துள்ளதால் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை இவரே மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் உள்ள விஜய்க்கு, செங்கோட்டையின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும்.

    இதனையெல்லாம் தாண்டி, செங்கோட்டையன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அக்கட்சியில் ஒருங்கிணைப்பை விரும்பும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    எனவே, இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம். இதற்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறார் செங்கோட்டையன்.

    இன்று செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

    அதனை விஜய் ஏற்று, அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விரைவில் விஜய் ஈரோட்டில் மக்களை உள் அரங்கில் சந்தித்து பேச உள்ளார்.

    அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைவது விஜய்க்கு ஒரு வலிமை தான் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. மேலும் அவர் பல கட்சி தலைவர்களுடனும் உறவை கொண்டிருப்பதால், த.வெ.க சிறப்பான கூட்டணியை அமைக்கவும் அவர் ஒரு பாலமாக செயல்படலாம்.

    செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர். 'கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டி அவருக்கு ஈரோடில் கூட பெரிய செல்வாக்கு கிடையாது. எங்கள் கட்சியிலேயே எம்ஜிஆர் காலத்து தலைவர் என்பதால் அவருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கினர். மற்றபடி அவரால் கொங்கு மண்டல அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரால் இப்போதுள்ள சூழலில் கோபியில்கூட வெல்ல முடியாது' என்கின்றனர்.

    எப்படி பார்த்தாலும் செங்கோட்டையனின் வருகை என்பது தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஏதோ ஒரு வகையில் லாபம்தான். ஆனால் அதனை விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார்.
    • த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

    கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், அடுத்த மாதம் 5-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார். கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்லும் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதால் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம் வழியாக சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று கூறப்படுள்ளது. இதற்காக த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    இதனிடையே, த.வெ.க.வினர் அளித்த கடிதத்திற்கு காவல்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.
    • காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் வேதனைக்குள்ளான விஜய் தனது பிரசார பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.

    ஒரு மாதம் கழித்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதன் பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இருப்பினும் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே இருந்து வந்தன. பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள். இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதற்காக சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கூட்ட அரங்கில் உள் அரங்கு நிகழ்ச்சியாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய்யை சந்தித்து பேசுவதற்காக 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

    இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். விஜய்யை சந்திக்க வருபவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

    இதன்படி தங்களது செல்போன் மூலமாக கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே விஜய்யை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். இதற்காக இன்று காலையிலேயே கூட்டம் நடைபெறும் கல்லூரிக்கு அவர் வருகை தந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டார்.

    கரூரில் செப்டம்பர் 27-ந்தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் பொதுமக்களை சந்திக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு விஜய் மீண்டும் இன்று மக்களை சந்தித்தார். இதற்காக காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதனை தொடர்ந்து இதுபோன்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலமாக தேர்தல் வியூகங்களையும் வகுத்து உள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கி உள்ளனர்.

    • கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது.
    • QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க.வினர் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதில், நுழைவுச் சீட்டு வைத்துள்ள 2000 பேருக்கு மட்டுமே உள்ளே அனுமதி என கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதற்காக ஜேப்பியார் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை தொண்டரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    பாதுகாப்பு கருதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் த.வெ.க.வினர் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. 

    • இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 



    • மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
    • கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.

    அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.

    இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

    குறிப்பாக இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.

    இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை த.வெ.க.வினர் தயாரித்து விட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்தந்த மாவட்டங்களில் நலிவடைந்த பிரிவினரை மாவட்ட வாரியாக உள்ள அரங்குகளில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • ராஜபாளையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்க முகாமில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்துவரும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்" என்ற தலைப்பில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது எம்.எல்.ஏ. நிதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்படும் என்றார்.

    இந்த முகாமில் இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல், புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், நகர கவுன்சிலர் அருள் உதயா, ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், ராமசுப்பு, ராம்நாத், மாரி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×