என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறதா?- தமிழக அரசு விளக்கம்
    X

    மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறதா?- தமிழக அரசு விளக்கம்

    • 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
    • இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை:

    சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×