என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை - கனிமொழி தலைமையில் மகளிர் மாநாடு: செந்தில் பாலாஜி
    X

    மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை - கனிமொழி தலைமையில் மகளிர் மாநாடு: செந்தில் பாலாஜி

    • முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
    • சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது.

    இந்நிலையில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.

    மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் கலந்து கொள்ளும் ஒரு எழுச்சிமிகு மாநாடாக கழகத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்கள்.

    இந்த மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்க மகளிரணி மாநாடாக அமைய உள்ளது.

    வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவதற்கான ஒரு முன்னேற்பாடாக, முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

    நிச்சயம் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை. முதலமைச்சரின் எஃகு கோட்டையாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பை தருவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள்.

    முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். மாநாட்டில் மகளிர் மட்டும் இடம் பெறுவார்கள்.

    அரசு நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும், முடிந்த திட்டங்களுக்கான திறப்பு விழா, தொடக்க விழா இருக்கும்.

    இது இயக்கத்தின் மாநாடு, மகளிரணி மாநாடு. ஏற்கனவே திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் இளைஞரணி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் தி.மு.க.வின் பக்கம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    எந்த பகுதி யாருடைய கோட்டை என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×