என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்
- 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் கடந்த 9-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.
அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். சாலைகளில் நெரிசலை குறைக்கவும், தொண்டர்கள் பொதுமக்கள் சரியாக வாகன நிறுத்தம் பகுதிக்கு வந்து பொதுக்கூட்ட மைதானத்துக்கு வரும் வகையில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






