என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க?
- சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அப்போது, பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது.
- கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
சேலம்:
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 48-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விழா மலர் கண்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது. அதேபோன்று, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட வுள்ளன.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஏற்காடு கோடை விழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
- சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர்.
கோவை:
கோவை வெள்ளலூரில் புதிதாக பஸ்நிலையம் கட்டப்பட்டு அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.
இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி அந்த பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போத்தனூர் போலீசார் வாலிபர் உடலை மீட்டு அவர் யார், அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் மார்பில் அபர்ணா எனவும், லவ் சிம்பளும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த விவரங்களை கொண்டு போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 21) என்பது தெரியவந்தது. இவரும், அவனியாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபரான கார்த்திக் (21) என்பவரும் ஒரே பெண்ணுடன் பழகி வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் சூர்யாவை கோவைக்கு வரவழைத்து கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட சூர்யாவும், கார்த்திக்கும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் முதலில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். சூர்யாவுக்கு சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்ததால் அவர் அங்கு படிக்கச் சென்று விட்டார். கார்த்திக் கோவை பேரூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.
கார்த்திக் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சூர்யா பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி வீடியோகாலில் பேசி இருக்கிறார். அந்த பெண்ணுக்கு தெரியாமல் சில புகைப்படங்களையும் சூர்யா எடுத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இது கார்த்திக்கிற்கு தெரிந்து ஆத்திரம் அடைந்தார். தனது காதலியை சூர்யா அபகரிக்க முயல்வதாக கருதினார்.
இதனால் சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கு தனது நண்பர்களான கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நவீன்கார்த்திக், கிணத்துக்கடவைச் சேர்ந்த மாதேஷ் (21), போத்தனூரைச் சேர்ந்த முகமது ரபி (21) ஆகியோரின் உதவியை நாடினார்.
சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரிடம் நைசாக பேசி கோவைக்கு வரவழைத்தனர். பின்னர் கார்த்திக் பேரூரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சூர்யாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கார்த்திக்கின் நண்பர்கள் 3 பேரும் வந்தனர். முதலில் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். மது குடித்ததில் போதையான சூர்யாவின் கை, கால்களை கட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து சூர்யாவின் உடலில் போதை ஊசி செலுத்தி உள்ளனர். இதில் சூர்யா மயக்கம் அடைந்துள்ளார். உடனே தலையணையால் அமுக்கி அவரை துடி, துடிக்க கொன்றுள்ளனர்.
சூர்யா உடலை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வீச முடிவு செய்து உடலை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். குப்பைக்கிடங்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை அங்கு வீச முடியவில்லை. அதன்பின்னர் அருகே உள்ள பஸ் நிலைய கட்டிடத்துக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் நவீன்கார்த்திக், மாதேஷ், முகமது ரபி ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர்களில் நவீன்கார்த்திக், மாதேஷ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர்கள். முகமது ரபி, வாடகை மோட்டார்சைக்கிள் ஓட்டி வருகிறார்.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் போதை ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
- மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? என்று ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!
கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு!
கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?
தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.
திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.
நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.
மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்!
இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இது தானே OG பித்தலாட்டம்?
மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.
- பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றோடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. இதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது.
அதைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் அதில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
- ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம்.
- இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும்!
ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம். இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 'வக்ஃப் என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் (waqt by user) மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது' என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.
குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு. அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.
மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் * சிலுக்குப் பதிலுரையைத் (Rejoinder) நமது தமிழக வெற்றிக் கழகம் நாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை, நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்தப் பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம். அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.
வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாகிவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா?
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?
சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கேரள இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதுபோல், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலானத் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதங்களை முன்னிறுத்தி. தனியானதொரு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை?
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதைப்போன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை!
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மங்காவிளை அருள்மிகு சிவசுடலை மாடசுவாமி திருக்கோவிலில் வைகாசி கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஊர் நிர்வாக தலைவர், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம், பூவங்காபறம்பு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடைவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்யும் போது 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தல் காற்று வீசக்கூடும்.
*சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சென்னையில் மதிய வேளையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும்.
- தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது.
- கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.
கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
- எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளை சந்திப்பதற்காக தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளேன். இங்கு நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வித பிரச்சனையும் இல்லை. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுவதை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
தி.மு.க. அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
- விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் சேலத்தில் தங்கி இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் வள்ளுவர் சிலை அருகே உள்ள அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் பின்னால் வந்த ஒரு நபர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தொடர்ந்து டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் அவரை பிடித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (வயது 44) என்பதும் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், மேலும் தள்ளு வண்டியில் வைத்து துணி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார்.
- நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ள நிலையில் இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவருக்கு மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளனர்.
பா.ஜ.க.வுடன் நெருக்கம் வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்பது இன்னமும் தெரியவில்லை.
காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவரை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. எனவே பா.ஜ.க.விடம் பேசி அவர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட முடியும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அப்படியே போட்டியிட்டாலும் சுயேட்சை சின்னம் அல்லது தாமரை சின்னத்தில்தான் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை அறிய சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார். கட்சியின் எதிர்காலம், தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து அவர் விரிவாக பேசியதாக தெரிகிறது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய படிவத்தில் "த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்" என நிர்வாகிகள் எழுதித் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலையில் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநில நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கிறார்.
நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதன் பிறகு பா.ஜ.க.விடம் உள்ஒதுக்கீடு பெற்று தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






