என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
- நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
சென்னை:
பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது மக்கள் அதிகம் கூடும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம், பெண்கள் விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக கட்டிடங்களில் சுகாதாரச் சான்றிதழ் பெறுவது அவசியம். சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், வளாகங்களில் தூய்மை மற்றும் சுகாதார தரத்தை உறுதிபடுத்தவும் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கும் முறை மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
இதில் சில சிக்கல் எழுந்தது. இதையடுத்து, சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டது. அதன்படி, எளிமை ஆளுமை திட்டத்தின் வாயிலாக இ-சேவை தளம் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
https://tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு இ-சேவை தளத்தின் மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். சுகாதார சான்றிதழுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுய உறுதிமொழி சான்றிதழை பதிவேற்றம் செய்தவுடன், சுகாதாரச் சான்றிதழ் தானாக அதற்குரிய தளத்தில் உருவாக்கம் செய்யப்படுகிறது.
சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இ-சேவை தளத்தை அணுக வேண்டும். பின்னர், விண்ணப்பதாரர்களின் விவரங்களை உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சுகாதார ஆவணங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபரால் சுய உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சுகாதார சான்றிதழ் ஒரு வருடம் செல்லுபடியாகும் வகையில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு பெறப்படும் சான்றிதழை வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும், சுகாதாரச் சான்றிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதிகாரிகள் கள ஆய்வு செய்வார்கள். ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் நேரிடையாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற இயலும். நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார்.
- வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.
சென்னை:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. த.வெ.க. சந்திக்கும் முதல் தேர்தல். இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளார், விஜய். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறார்.
அடுத்தக்கட்டமாக, தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் த.வெ.க.வுக்கு பொருத்தமான சின்னம் எது? எந்த சின்னம் மக்களை எளிதாக கவரும் என்ற வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக, ஆட்டோ சின்னம் தேர்வாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்திலேயே, தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் முடிவு எடுத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.
தேர்தல் கமிஷனில் சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தவகையில் ஆட்டோ, நட்சத்திரம், அகல் விளக்கு ஆகிய 3 சின்னங்களை தேர்வு செய்து, விருப்ப சின்னமாக ஆட்டோவை ஒதுக்க த.வெ.க. கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார். ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்ட அந்த கட்சிக்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கால சூழல், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போனது.
இந்த சூழலில்தான், ஆட்டோ சின்னத்தை விரும்பி த.வெ.க. பெற முயற்சி மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோவை கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று விஜய் தரப்பு கருதுகிறது.
கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
- மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது.
மதுரை:
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை கோவில் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் முருகப்பெருமானை தரிசிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை, மாநாட்டில் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி கின்னஸ் சாதனையும் படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
- தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.
இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.
- காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.
கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.
ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.
ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார்.
- என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?
தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?
கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?
பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் 'உறங்குவது ஏன்' என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?
நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?
தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?
இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?
ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?
எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர்.
ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே? எது தடுக்கிறது?
என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?
இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.5 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவானது.
- சென்னையில் பல்வேறு இடங்களில் கருமேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்தது.
தமிழகத்தில் இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இதேபோல், சென்னை ராயபுரம். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, மாதவரம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.5 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவானது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்தது.
அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்கள் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது.
ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. அதை வேகப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது. வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அங்கு வெளியிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.
அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
- பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
சென்னை:
தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று பணியாற்றிய போது தமிழக பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது.
அண்ணாமலை பொறுப்பு ஏற்றபோது அதன் வளர்ச்சி இரட்டிப்பாக மாறியது. குறிப்பாக கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து கணிசமான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும் பூத் கமிட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பா.ஜ.க. அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தனது நேரடியாக கண்காணிப்பில் தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்க தொடங்கி உள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை மிக பிரமாண்டமாக வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்" என்று கூறியிருந்தார்.
அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பாஜகவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கிராமப் பகுதிகளில் பா.ஜ.க.வை வலுப்படுத்த செய்துள்ள பணிகளை அமித்ஷா ஆவணங்கள் அடிப்படையில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.
மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் ராமதாசுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று தெரிகிறது. குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் பணிகளை கூட்டணி கட்சிகள் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அடுத்த மாதம் சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.
அமித்ஷாவின் சென்னை பயண நிகழ்ச்சிகளை பொறுத்து அவர்கள் இருவரையும் அவர் சந்திப்பாரா? என்பது தெரிய வரும். அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் அமித்ஷா வரும்போது சில முக்கிய வியூகங்களை எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஜூலை மாத தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு வலியுறுத்தல்.
- கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியதாக உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.
இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், "பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை.
திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை
கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது" என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
சங்கராபுரம்:
வாணாபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்திலுள்ள அரியலுார், அத்தியூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், இளையனார் குப்பம்,
ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால் ஏந்தல் "பொற்பலாம் பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக் கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






