என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்தக் கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவக் கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
- பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.
சென்னை:
மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.
மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.
இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.
இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.
ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.
பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.
கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?
தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுனரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுனரையோ, நடத்துனரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.
பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு! என்று கூறியுள்ளார்.
- சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
- கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று எல்.முருகன் யோகா செய்தார்.
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இருக்கும்.
* தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
* கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
* அடிமைப்படுத்திய ஆங்கில மொழியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றுதான் அமித்ஷா கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார்.
- 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
வால்பாறை:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் தங்கியிருந்து தேயிலை தோட்டத்திற்கு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று மாலை மோனிகா தேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அதன் அருகே அவரது மகள் ரோஷினிகுமாரி நின்றிருந்தார்.
குடம் நிறைந்ததும் மோனிகா தேவி, தனது மகளை குழாயின் அருகே நிற்க கூறி விட்டு வீட்டிற்குள் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி மட்டும் வெளியில் நின்றிருந்தார்.
அப்போது தேயிலை தோட்டத்திற்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, அங்கு நின்றிருந்த சிறுமி ரோஷினி குமாரியின் மீது பாய்ந்து கழுத்தை கவ்வி தரதரவென இழுத்து சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே மோனிகா தேவி வெளியில் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, மோனிஷாகுமாரியை கவ்வி இழுத்து சென்றதை பார்த்தும் அதிர்ச்சியில் உறைந்து போய் கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு சிறுமி அணிந்திருந்த ஆடை மட்டும் ரத்தகறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. ஆனால் சிறுமியின் உடலை காணவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் குடியிருப்பையொட்டி உள்ள தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாலையில் தொடங்கிய தேடுதல் பணியானது நள்ளிரவை தாண்டியும் விடிய, விடிய நீடித்தது. அதிகாலை 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று 2-வது நாளாக வனத்துறையினர் சிறுமியின் உடலை தேடும் பணியை தொடங்கினர். அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
மேலும் சிறுமியின் உடலை கண்டறிவதற்காக கோவையில் இருந்து 2 மோப்பநாய்கள் பச்சைமலை எஸ்டேட் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.
வனத்துறையினர் மற்றும் போலீசார் மோப்பநாய்களை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்கு வெளியே தாயுடன் தண்ணீர் பிடிப்பதற்காக நின்றிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது, புலி வருது என சொல்வதை போல் உள்ளது.
- தேர்தலுக்கு இன்னும் 10 மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.
நெல்லை:
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள திருமால் நகர் அழகர் பூங்காவில் கட்சி நிர்வாகிகளுடன் யோகாசனம் செய்தார். பின்னர் நிருபர்களை சந்திந்த அவர் கூறியதாவது:-
முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினரும் கலந்து கொள்கிறோம். கட்சி பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கடுமையான நெருக்கடி தமிழக அரசால் கொடுக்கப்பட்டது. தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது வரவேற்க கூடிய விஷயம். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை தான் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு திட்டமாக அதனை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை மாநில அரசு கொடுப்பதை போல் கொடுக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கரை ஒட்டி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் உலகத்தில் சிறந்த மொழி. மூத்த மொழி தமிழ் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை வைத்து தமிழக அரசு வியாபாரம் செய்து வருகிறது.
தமிழக அரசுக்கு 5 ஆண்டு ஆட்சி முடிய போகிறது. 2500 முகாம்கள் நடத்தி 12 லட்சம் மனுக்களை பெற்று தீர்வு கண்டதாக சொல்கிறார்கள். ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை. கீழடியை மட்டுமே வைத்து தமிழக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐ.நா சபை சென்றாலும் சரி. தமிழை பிரதமர் மோடி பெருமைப்படுத்தி வருகிறார். தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான்.
தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். புகைச்சல் இருக்கிறது. கூட்டணியில் சீட்டுகள் எத்தனை என்பது குறித்து பிரச்சனை இல்லை. கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் அது ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை காட்டுகிறது. தி.மு.க. 2 சீட்டுகள் கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?. நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் வரப்போகிறது. ஆளுங்கட்சி தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியின் கூட்டணி குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது, புலி வருது என சொல்வதை போல் உள்ளது. பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கான அவசியம் இல்லை. அவர் வந்து தமிழகத்தில் பார்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
- 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஈரோடு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன. அதன்படி ம.தி.மு.க.வும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் இருந்து 1,700 பேர் பங்கேற்கிறார்கள். காலை 11:30 மணிக்கு பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மதியம் வைகோவும், அதைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகின்றனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதே போல் சில முக்கிய தீர்மானங்கள், அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதுபற்றி, கொங்கு மண்டல ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.,வின் பொதுக்குழுவை பிரமாண்டமாக நடத்துவதுடன், கட்சி நிர்வாகம், கூட்டணி, தேசிய அரசியலில் முக்கிய முடிவுகளை அங்கு அறிவிப்பு செய்வார்கள். கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், பதவி அறிவிப்பு கூட அப்போது நடக்கும். கடந்த, 30-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில், 2024 ஆகஸ்ட் 4-ல் நடந்தது. அக்கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, 'நீட்' தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடன் நடத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் மத்திய அரசை முன்வைத்து நிறைவேற்றினர். அதை மையமாக கொண்டு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டது.
இச்சூழலில், ஈரோட்டில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறுவது, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., போன்ற கட்சிகள் 'கூடுதல் இடம் கேட்போம்' என குரல் கொடுக்கும் நிலையில், ம.தி.மு.க.,வின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பார்கள்.
ஈரோடு உட்பட கொங்கு மண்டலத்தில் மறைந்த எம்.பி., கணேசமூர்த்திக்கு பின், வலுவான ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ம.தி.மு.க.வுக்கு 'சில தொகுதிகளை வழங்கி' முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே கணேசமூர்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இப்பகுதியில் இருந்ததால், தங்களுக்கான அங்கீகாரத்தை பெற வலியுறுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் காரணமாக நாளை நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
- ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பா.ஜ.க. முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள்.
* கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. தான் காரணம். அகழாய்வுக்கு ஜெயலலிதா இருக்கும்போது எடுத்த நடவடிக்கை, அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து நேற்றே விளக்கம் அளித்துள்ளோம்.
* தி.மு.க. ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம் குறித்த கேள்விக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.
* ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
* ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 265-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.55-ம், கிலோவுக்கு ரூ.440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. இதனால் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,235-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120
18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-06-2025- ஒரு கிராம் ரூ.120
19-06-2025- ஒரு கிராம் ரூ.122
18-06-2025- ஒரு கிராம் ரூ.122
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
- நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அதே கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்தனர். கணவன், மனைவி சண்டை போட்டு வந்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும், அவர்களின் மனநிலையும் மாறிவிடும் என்று அவர்கள் அறிவுரை கூறினார்கள். இருந்தபோதிலும் கடன் பிரச்சினை உள்ளிட்டவைகளால் தம்பதிக்கிடையே தகராறு தீர்ந்தபாடில்லை.
அவ்வப்போது பூங்கொடி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். அப்போதெல்லாம் சுந்தரவேலு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது. அதேபோல் இருவீட்டாரின் பெற்றோரும் அவர்களுக்கு சண்டை போடாமல் குடும்பம் நடத்த அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் கடும் கோபத்திற்கு ஆளான சுந்தரவேலு, மனைவியை சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த மகள்கள் இருவரும் அழுதுகொண்டே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை எழுந்த சுந்தரவேலு மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முதலில் மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் நிலைகுலைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் எழுந்து பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து கல்நெஞ்சம் படைத்த சுந்தரவேலு, மகள்களையும் கொலை வெறியுடன் பார்த்தார். இதனால் அஞ்சி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த மகள்களை சற்றும் ஈவு, இரக்கமின்றி சுந்தரவேலு அரிவாளால் வெட்டினார். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தனர். அப்போது திறந்து கிடந்த வீட்டிற்குள் தாய், இரண்டு மகள்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக அவர்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தாலுகா போலீசார் கொலையுண்டு கிடந்த பூங்கொடி, அவரது மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி, 2 மகள்களை கொடூரமாக கொலை செய்த சுந்தரவேலு, நேராக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
- நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சென்னை:
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம் 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.
சுற்றுலா மையமாக திகழ்ந்து வரும் வள்ளுவர் கோட்டம், உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் பெருமைக்குரிய ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தின் முன்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றபோது, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
அப்போது, பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தை பார்த்து வேதனை அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க உத்தரவு பிறப்பித்த மு.க.ஸ்டாலின், இந்த பணிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி, வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்தது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆயிரத்து 548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான 'அய்யன் வள்ளுவர் கலையரங்கம்' தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது 'குறள் மணிமாடம்'.
100 பேர் அமரும் வசதியுடன் 'திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்' இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், தரைத் தளத்தின் கீழ் பகுதி ஆகியவற்றில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
உணவகத்தில் ஒரே நேரத்தில் 72 பேரும், காபி அருந்தும் பகுதியில் 24 பேரும் அமரும் வகையில் இந்தக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அருகே நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் சிலையை நோக்கி பார்வையாளர்கள் தடையின்றி செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய 'வேயா மாடம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருவாரூர் தேர் வடிவில் 106 அடி உயரமுள்ள திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இசை நீரூற்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த வள்ளுவர் கோட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, இங்கு முதல் நிகழ்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்து நடத்தும் பாராட்டு விழா நடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஆயிரத்து 988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியது உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா மாற்றுத்திறனாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.






