என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறது தி.மு.க. - குஷ்பு குற்றச்சாட்டு
    X

    மக்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறது தி.மு.க. - குஷ்பு குற்றச்சாட்டு

    • மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
    • பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.

    சென்னை:

    மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.

    இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.

    மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.

    இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.

    இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.

    ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.

    பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

    சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.

    கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×