என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
- போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.
நிலக்கோட்டை:
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் த.வெ.க. சார்பில் சர்ச்சையான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியதாக த.வெ.க. கிழக்கு மாவட்ட நிர்வாகி நல்லு மகன் ஜெயச்சந்திரன் (வயது 45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதனிடையே போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.
- யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது.
- அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டந்தோறும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகியான நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகை நமீதா பேசியதாவது:-
யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது. புதியது கிடையாது. 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன். ஆனால் தமிழ், தெலுங்கு, குஜராத்தி உள்ளிட்ட தாய்மொழியில் தான் பேசுவேன். ஏனெனில் அவையே அவர்களின் தாய்மொழி. அதுதான் எனக்கு பெருமை. ஆங்கிலத்தை டி.வி.யிலோ, அல்லது வேறு எங்கேயாவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.
அவர்களுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது. சூப்பர் மேன் தெரியாது, ஆனால் ஜெய் அனுமான் தெரியும் என்றார்.
- திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
- தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் தொழில்கள் நலிவடைந்து பிற மாநிலங்களுக்கு பனியன் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளன. இருக்கும் தொழிலை காப்பாற்றாமல் முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டி கொடுக்கும் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும். ரூ.160 கோடி கடன் பெற்று சாலை அமைப்பதாக கூறினார்கள். ஆனால் சாலைகள் முறையாக அமைக்காமல் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தண்ணீர் வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்காக அவசர கூட்டம் மாநகராட்சியில் நடத்துவதாக தகவல் வருகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. கடுமையாக போராடும். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க.வின் அதிகாரபூர்வமான வலைதளத்தில் கேவலமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை முதலமைச்சர் அதை கண்டிக்கவில்லை. அந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் நாகரீக அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருநாள் பொறுத்திருப்போம். மாற்றம் இல்லை என்றால் நாங்களும் இதே முறையை கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர் அரிகரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
- பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.
சென்னையில் சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தவறு.
* 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* ஆனால் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீடு இடஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது.
* வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தருவோமென நம்பவைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.
* இடஒதுக்கீடு தொடர்பாக திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாமென முதலமைச்சர் கூறினார்.
* பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.
* தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
* பின்தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலைவாய்ப்பும் வேண்டும், அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் அமுல்கந்தசாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமுல்கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார்.
அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.
- ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.
- தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.
மதுரை:
மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் கண்காட்சி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த அறுபடை வீடு மாதிரி அமைப்பை இன்று பார்வையிட்டார். பின்னர் ஆறுபடை முருகனை சுவாமி தரிசனம் செய்து மனமுருகி வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முருகப்பெருமான் ஆறுபடைகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையிலே அமைந்துள்ளது. அத்தகைய புண்ணியம் பெற்ற மதுரையிலே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். இதிலே அரசியல் கிடையாது. இருப்பினும் ஆன்மிகம் என்பது மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைபடுத்துவதற்கும், ஒழுக்கப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இந்த முருகன் மாநாட்டில் பெருமையுடன் கூறுகிறேன்.
தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பேத்கருக்கு எதிராக பேசுபவர்கள், அம்பேத்கரை ஆதரித்து பேசுபவர்கள் என இரண்டு அணிகள் மட்டுமே செயல்படுகிறது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ராகுல்காந்தி தூக்கி பிடிப்பது டாக்டர் அம்பேத்கரையை தூக்கி பிடிப்பது போன்றது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை வி.சி.க.வில் இணைத்து கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:-
இந்தியாவில் அம்பேத்காரை வைத்து தான் அரசியல் நடைபெறுகிறது. அம்பேத்காருக்கு எதிராக பேசுபவர்கள், அம்பேத்காரை ஆதரித்து பேசுபவர்கள் என இரண்டு அணிகள் மட்டுமே செயல்படுகிறது.
இதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தினை ராகுல் காந்தி எங்கு சென்றாலும் உயர்த்தி பிடிக்கிறார். ஆனால் பா.ஜ.க. அம்பேத்காருக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் கோவிலுக்குள் நுழைய கூடாது என்றும், அந்த தெருவுக்கு தேர்வராது என்று சொல்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ராகுல்காந்தி தூக்கி பிடிப்பது டாக்டர் அம்பேத்காரை தூக்கி பிடிப்பது போன்றது.
இனி விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நகர்வு கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக நாம் பெரிய உழைப்பை கொடுத்து இருக்கின்றோம்.
மதம் மனிதனுக்கானது அரசுக்கானது இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக திருச்சியில் மதச்சார்பின்மை பேரணியை நடத்தி இருக்கிறோம். ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்காரை தூக்கி பிடிக்கிறார்.
பா.ஜ.க. இந்து மதம்தான் பெரியது என்கிறது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும், மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்து வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு இதுபோன்ற ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதனால் தான் எல்லோருக்கும் தூய தமிழ் பெயரை சூட்டினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை மற்றும் மற்றும் நாளை மறுநாள் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்?
- நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்ட போடுவாம் என்று 17.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிப்போம் என்று 12.20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 3.10 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 4.9 சதவீதம் பேரும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு 1.4 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 2.5 சதவீதம் பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவோம் என 10.16 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
யாருக்கும் ஓட்டு போடப்போவது இல்லை என 6 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக 3.3 சதவீதம் பேரும் கூறியுள்ள நிலையில் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என 8.3 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற யூகத்தின்படி நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் தி.மு.க. அணியை விட சிறிதளவு முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 33.60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க. கூட்டணிக்கு 28.70 சதவீதம் பேரும் இருவேறு கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு 25.3 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 12.40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது.
- எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்த மருத்துவ பல் கலைக்கழகம் அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது சட்டபூர்வமான ஆய்வுகள் நிறைவடைந்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து தயாராக உள்ளது.
சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். போதைப்பொருள் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது. எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெருகி இருந்த போதை நடமாட்டம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை.
- தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடக்க விழாவில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். இதனால் என்மீது, தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக, சம்பந்தமே இல்லாமல், என்னை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஐகோர்ட்டு சில கருத்துக்களை சொல்லி உள்ளது. கோர்ட்டுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.
ஊழல் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது காவல் துறை. நான் என்ன தீவிரவாதியா? பயங்கரவாதியா? எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனான என்னிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இது போன்ற நெருக்கடி கொடுத்தால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, அவர்கள் கூட்டணிக்கு வந்து விடுவேன் என்ற எண்ணமா? எப்போது இருந்தாலும், நியாயம், உண்மை வெளிப்படும்.
நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். தி.மு.க.வில் இருந்து சில கட்சிகள் விலகும். விஜய்யோடும் சில கட்சிகள் கூட்டணி சேரும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்!
- மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!
சென்னை:
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!
அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! என்று கூறியுள்ளார்.






