என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்... அ.தி.மு.க. கூட்டணி வலிமை பெற்றால்... கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
- வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்?
- நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்ட போடுவாம் என்று 17.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிப்போம் என்று 12.20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 3.10 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 4.9 சதவீதம் பேரும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு 1.4 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 2.5 சதவீதம் பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவோம் என 10.16 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
யாருக்கும் ஓட்டு போடப்போவது இல்லை என 6 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக 3.3 சதவீதம் பேரும் கூறியுள்ள நிலையில் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என 8.3 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற யூகத்தின்படி நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் தி.மு.க. அணியை விட சிறிதளவு முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 33.60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க. கூட்டணிக்கு 28.70 சதவீதம் பேரும் இருவேறு கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு 25.3 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 12.40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.






