என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிப்பு - பொள்ளாச்சி ஜெயராமன்
- திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
- தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் தொழில்கள் நலிவடைந்து பிற மாநிலங்களுக்கு பனியன் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளன. இருக்கும் தொழிலை காப்பாற்றாமல் முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டி கொடுக்கும் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும். ரூ.160 கோடி கடன் பெற்று சாலை அமைப்பதாக கூறினார்கள். ஆனால் சாலைகள் முறையாக அமைக்காமல் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தண்ணீர் வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்காக அவசர கூட்டம் மாநகராட்சியில் நடத்துவதாக தகவல் வருகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. கடுமையாக போராடும். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க.வின் அதிகாரபூர்வமான வலைதளத்தில் கேவலமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை முதலமைச்சர் அதை கண்டிக்கவில்லை. அந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் நாகரீக அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருநாள் பொறுத்திருப்போம். மாற்றம் இல்லை என்றால் நாங்களும் இதே முறையை கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர் அரிகரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.






