என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆட்டோ சின்னத்தை குறி வைக்கும் விஜய்
- மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார்.
- வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.
சென்னை:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. த.வெ.க. சந்திக்கும் முதல் தேர்தல். இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளார், விஜய். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறார்.
அடுத்தக்கட்டமாக, தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் த.வெ.க.வுக்கு பொருத்தமான சின்னம் எது? எந்த சின்னம் மக்களை எளிதாக கவரும் என்ற வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக, ஆட்டோ சின்னம் தேர்வாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்திலேயே, தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் முடிவு எடுத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.
தேர்தல் கமிஷனில் சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தவகையில் ஆட்டோ, நட்சத்திரம், அகல் விளக்கு ஆகிய 3 சின்னங்களை தேர்வு செய்து, விருப்ப சின்னமாக ஆட்டோவை ஒதுக்க த.வெ.க. கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார். ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்ட அந்த கட்சிக்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கால சூழல், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போனது.
இந்த சூழலில்தான், ஆட்டோ சின்னத்தை விரும்பி த.வெ.க. பெற முயற்சி மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோவை கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று விஜய் தரப்பு கருதுகிறது.
கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






