என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRB Raja"

    • மற்ற மாநிலங்களைப் போல மக்கள் வரிப்பணத்தை நாம் அள்ளி வீசமாட்டோம்.
    • பல்வேறு விஷயங்களின் அடிப்படையிலேயே முதலீட்டு ஊக்குவிப்பு குறித்து அரசு முடிவெடுக்கும்.

    முதலீடுகள் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றியோ வேலை வாய்ப்புகள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலுமின்றி வழக்கம்போல திருமண வீட்டில் ஊர் வம்பை பேசும் பெருசுகள் போல குற்றம் சாட்டி இருக்கிறார்.

    முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல. தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கு முதலீடு செல்கிறதோ அதைப் பொறுத்து ஊக்கத்தொகை வழங்குவது, அப்பகுதியில் முன்னரே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளின் வகை போன்ற பல விடயங்களை பொறுத்தே அரசு ஒரு முடிவை எடுக்கிறது. அதற்கு பிறகே முதலீடு உறுதி செய்யப்பட்டு ஒரு ஒப்பந்தம் முதலீடாக மாறுகிறது. அந்த முதலீட்டின் மூலம் உருவாகும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்குவதே நமது முதலமைச்சரின் நோக்கம். அதுவே நமது இலக்கு.

    அரசாங்கம் என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அமைப்பாகும். சில மாநிலங்களில் வறண்ட பெரிய நிலப்பரப்புகள் உள்ளன. நாட்டின் #1 நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்பதால் நம்மிடம் இருப்பவை அதிக மதிப்புள்ள நிலங்களாகும். புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மதிப்பை ஒப்பிடாமல் அந்த நிலங்களை சாதாரணமாக கொடுத்துவிட முடியாது.

    தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி நோக்கத்திற்கு உதவாத முகலீடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. ஏனென்றால், அதே இடத்தில் பல நிறுவனங்கள் பல திட்டங்களோடு ஒவ்வொரு நாளும் நமது முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்தை நாடுகிறார்கள். உலக முதலீட்டாளர்களுக்கு நமது திராவிட நாயகன் அவர்களின் ஆட்சி மீது இன்று இருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது.

    2021 முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை போடப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77% க்கும் மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    முதலீட்டாளர்கள் இடையே தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகத்தன்மை நிறைந்த மாநிலம் என்ற பெயரை திராவிட மாடல் அரசு மூலம் பெற்றுள்ளது. இந்த நற்பெயரை நாம் மிகுந்த முதிர்ச்சியோடு காப்பாற்ற வேண்டும். மக்கள் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களைப் போல நாம் அள்ளி வீசமாட்டோம். ஒன்று இல்லையென்றால், நமக்கு நூறு லைனில் இருக்கிறது.

    நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட சிறந்த உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். நமக்கு நமது மதிப்பு தெரியும், நமது பலம் தெரியும், அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.

    எதிர்க்கட்சித் தன் அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமர்சிப்பதாக நினைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளிகளான அரசுத் துறை சார்ந்தவர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளர்களான மக்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலை மேற்கொள்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, அரைகுறை தகவல்களை தன்னுடைய எஜமானக் கட்சியின் அதிகாரம் இழந்த பிரதிநிதி பேசிவிட்டார் என்பதற்காக, போட்டிக்காக அவர் சொன்ன பொய்யையே வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில்துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம் என ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது.
    • அதிமுக மட்டும் தான் SIR-க்கு ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

    இந்தியாவிலேயே SIRக்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஒரே கட்சி என குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்து கொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய திருநாட்டில், நமது மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை யை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது !

    அது வேறு யாரும் அல்ல, ஒன்றியத்தை ஆளும் பாசிச கூட்டத்தின் பிரதான அடிமை கட்சி அதிமுக தான் !

    இதன் மூலம் "இந்தியாவிலேயே SIR-க்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரே கட்சி" என்று குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்துகொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது.

    இதில் சிறப்பு என்னவென்றால் பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது !

    ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், SIR குறித்து தங்களது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது !

    தெலுங்கு தேசம் கட்சியும் (TDP) இந்த சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை சந்தேகிக்கப் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெளிவாக கருத்து தெரிவித்து ஒரு "க்" வைத்துள்ளது.

    ஆனால் இத்தகைய சூழ்நிலையில் கூட பாஜக வின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான் நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.

    எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் அவர்கள் குறைந்தது மௌனமாகக்கூட இருந்திடாமல், முன்பு 2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்ததுபோல முழுமையான அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளனர் !

    தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக செய்திருக்கும் மிக நீண்ட துரோகப் பட்டியலில் இது இனி முதல் 3 இடங்களை பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது அதிமுக.

    ஆனால் நமக்கு கவலை வேண்டாம் ! எது வந்தாலும் தமிழ்நாட்டின் நலனையும் இங்கு வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்கும் மகத்தான தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தின் கொடூர உள்நோக்கத்தை முறியடித்து, தமிழ் மக்களின், குறிப்பாக நமது சிறுபான்மை மக்களின், ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாப்பார் !

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணையோடு, அனைத்து மக்களின் வாக்குரிமைகளை பாதுகாப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFOல் பதிவு செய்துள்ளனர்.
    • இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னோடி கொள்கைகள் மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக மத்திய அரசின் EPFO தரவுகள் வெளியாகியுள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரியாக 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    2021–22 முதல் 2024–25 வரை, மாநிலம் 52 லட்சத்திற்கும் அதிகமான நிகர ஊதிய உறுப்பினர்கள் EPFOல் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    இதற்கு முந்தைய ஆட்சியில் 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தை விட பின்தங்கியிருந்தது -

    2022-23 ஆம் ஆண்டில் 14 லட்சத்திற்கும் அதிகமான EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

    2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பது உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கூறியதை விட 20% அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

    • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன.
    • அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகனின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளி விவரங்களுடன் பலமுறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.

    அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி இவை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர் நமக்கு எதிர்கட்சித் தலைவராக வாய்த்திருக்கும் அவல நிலையில், அவருடைய அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி- இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.

    தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.

    தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.

    அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் நம் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது
    • அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், டி.ஆர்.பி. ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்தார்.

    இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, "யார் கயல் பதக்கம் வாங்க வேண்டும் என்றும் வாங்க வேண்டாம் என்றும் நினைப்பது அவரவர் விருப்பம். என் கையில் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை. டி.ஆர்.பி. ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனை செய்யவேண்டும். பெரிய மனிதராக வளர வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

    • மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கினார்.
    • டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து அறிவுரை கூற வேண்டும் என்று தமிழிசை தெரிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், TRB ராஜா மகனின் இந்த செயலுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "ஆளுநர், அண்ணாமலை என்று சிறப்பு விருத்தினராக தகுதிக்கு ஏற்ப தான் கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன. அங்கு விருத்தினராக வருபவர்களுக்கு மரியாதை தர வேண்டும். விருது வாங்க வருபவர் மரியாதை செய்ய வேண்டிய கடமை. அப்போது தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரியானது கிடையாது. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகனை அழைத்து பராபட்சமாக நடந்து கொள்ள கூடாது என அறிவுரை கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
    • அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டிக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.

    அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அதை கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இபிஎஸ் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.
    • அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.

    அ.தி.மு.க ஐ.டி.விங் சரியாக செயல்படாததால் அந்த வேலையையும் செய்ய முயற்சிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தவொரு மனிதராக இருந்தாலும், மாநிலத்திற்கு நல்லது நடந்தால் அதைப் பார்த்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள்தான், மாநிலத்தின் சாதனைகளை பாராட்ட மனமின்றியும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

    துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் கடந்த சில வருடங்களாக அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பா.ஜ.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு, பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும், முருகன் பெயரில் பா.ஜ.க. நடத்திய அரசியல் கூட்டத்தில் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை.

    இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? தமிழ்நாடு பெரியார் மண்-அண்ணா மண் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறாரா அல்லது இங்கேயும் காவிக் கூட்டத்தின் அராஜக செயல் தாண்டவமாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?

    பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்துபவர்களை வேடிக்கை பார்க்கும் இவர்களை அவர்களின் கட்சித் தொண்டர்களே மன்னிக்க மாட்டார்கள்.

    சமீபத்தில், தி.மு.க.வின் ஐ.டி.விங், பா.ஜ.க.வின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தது.

    தி.மு.க. ஐ.டி. விங்கின் பாய்ச்சலையும், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதலமைச்சரின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்.

    ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஆகஸ்ட் 2024-ல், அவர் அந்நிய நேரடி முதலீடு (FDI) எண்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அப்போதே நானும் அவருக்கும், அவரது கற்பனைத் திறனற்ற அடிமைப் படைக்கும் அந்நிய நேரடி முதலீட்டுத் தரவு தமிழ்நாட்டின் செயல்திறனை அளவிடுவதற்கான சரியான தரவு அல்ல என்று விளக்கமளித்திருந்தேன்.

    இப்போதாவது இந்த எளிய உண்மையை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் மீண்டும் கூறுகிறேன். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் பிற மாநிலங்களில் உள்ளன.

    மேலும், அந்த நிதி, அவற்றின் தலைமையகங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டை பல நிறுவனங்கள் முதலீடு செய்யவோ அல்லது மறுமுதலீடு செய்யவோ தேர்வு செய்திருந்தாலும், அவற்றின் பதிவு செய்யப்பட்ட தலைமையகங்கள் வேறு மாநிலங்களில் உள்ளன.

    அந்நிய நேரடி முதலீடுகளைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. எனவேதான் பொருளாதார நிபுணர்கள் அதை மாநிலத்தின் வளர்ச்சிக்கான சரியான குறியீடாக ஏற்றுக்கொள்வதில்லை.

    இத்தகைய நிலையிலும், தமிழ்நாடு இந்தியாவின் முதலீட்டில் தொடர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளதுடன், தொடர்ச்சியான வளர்ச்சியையும் கண்டு வருகிறது.

    முதலமைச்சர் கூறியது போல, நமது நியாயமான முதலீடுகளைப் பிற மாநிலங்களுக்குத் திசை திருப்புவதில், குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் ஒன்றிய அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. அதற்காக தன் அதிகார பலத்தைப் பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன் கண்டன அறிக்கையை ஒன்றிய அரசை நோக்கி வெளியிடுவதே சரியானதாக இருக்கும். அ.தி.மு..கவின் 2016-2021 காலகட்டத்தில் 32 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றதாக அவர் கூறுகிறார்.

    திராவிட மாடல் அரசு தனது ஆட்சிக்காலமான இந்த 4 ஆண்டுகளில், 310 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும், 31 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அவரது கூற்றுப்படியே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை ஒப்புக்கொண்டாலும், எத்தனை

    சதவீதம் முதலீடாக மாறியது என்பதை அவர் குறிப்பிடவில்லை. அவர் முதலீடாக மாற்றாமல் விட்டுச் சென்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், காழ்ப்புணர்வு காட்டாமல், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கான முதலீடுகளாக மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சித்து செயல்படுத்தி வருகிறது மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் தலைமையிலான அரசு.

    கடந்த நிதியாண்டில் 9.69% GSDP வளர்ச்சியுடன் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 6%க்கும் குறைவாக இருந்தும், இந்தியாவின் உற்பத்தி GDP-யில் 11.9% பங்களிக்கிறோம். இந்த மக்கள்தொகையைத்தான் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் நியாயமற்ற மறுவரையறை மூலம் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறது.

    ஆனாலும், தனது அரசியல் எஜமானர்கள் தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து எதுவும் பேசாமல் எதிர்க்கட்சித் தலைவர் அமைதியாக இருக்கிறார்.

    முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், EV, ஜவுளி, தோல் மற்றும் காலணி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 2021-22-ல், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நாம் வெறும் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருந்தோம். ஆனால், கடந்த ஆண்டு 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டினோம் - வெறும் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி!

    இந்திய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் 21.8 விழுக்காடுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தோல் மற்றும் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 38 விழுக்காடு ஆகும். இந்தப் பொருட்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை.

    மேலும், தென் தமிழ்நாடு ஒரு முக்கிய பசுமை ஆற்றல் மற்றும் ஆட்டோ மையமாக உருவெடுத்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஜாம்பவான்களான, விரைவில் திறக்கப்படவிருக்கும் Vinfast உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பெரும் முதலீடுகள் குவிந்து, பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை நாம் அடைந்து வருகிறோம்.

    தமிழ்நாடு முழுவதும் TIDEL Neo பூங்காக்களைக் கட்டி வருகிறோம். இதில் பல ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகாலத்தில் அவர்கள் வெறும் 6-7 SIPCOT பூங்காக்களை மட்டுமே நிறுவினர். இந்த அரசாங்கத்தின் கீழ், நாம் 30- க்கும் மேற்பட்ட பூங்காக்களை நிறுவியுள்ளோம், மேலும் பலவற்றை நிறுவும் பணியில் இருக்கிறோம்.

    ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே.. கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்க நீங்கள் 10 ஆண்டுகளாகத் தூங்கினீர்கள் கோயம்புத்தூருக்குத் தகுதியான விமான நிலையத்தை அளிக்க நமது முதலமைச்சர்தான் 2000 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கினார். உங்கள் எஜமானரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் கூட நமது முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்குப் பெருந்தன்மை காட்டினார்.

    ஆனால், மேற்கு தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் நன்றியுணர்வுடன் அதைப் பாராட்டக்கூட வேண்டாம். காழ்ப்புணர்ச்சியால் அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துங்கள்.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அக்டோபர் 2024-ல் மட்டுமே அமைச்சரவையால் இறுதி ஒப்புதல் கிடைத்தது, மேலும் அதன் நிறைவுக்கான இலக்கு 2028 ஆகும். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறீர்களா?

    முதலமைச்சர் அவர்கள் ஓசூர் மற்றும் ராமேஸ்வரத்தில் பெரிய விமான நிலையங்களை அறிவித்துள்ளார். இது அந்த பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை மிகப்பெரிய முதலீட்டு மையங்களாக மாற்றும். தஞ்சாவூரில் முதல் SIPCOT, தென்காசியில் முதல் SIPCOT, கன்னியாகுமரியில் முதல் TIDEL Neo ஆகியவை நமது முதலமைச்சர் உறுதி செய்த சில முதல் முயற்சிகளாகும்.

    எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு அரசியலில் கவனம் பெற நினைக்கலாம். ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்று, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும். மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் அளித்த நேர்காணலின் தரவுகளைக் கூட சரியாகப் புரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள்.

    பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகள் உள்ளிட்ட உள்ளிட்ட கோமாளிக் கூத்துகளால், உலகத்தில் எந்த நாடும் தமிழ்நாட்டுக்கு வரத் தயங்கியதையும், கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மேற்கொண்ட தொழில் வளர்ச்சியாலும், அதற்காக உருவாக்கிய கட்டமைப்புகளாலும் உலகின் பல நாடுகளும் தமிழ்நாட்டில் நாங்கள் முதலீடு செய்கிறோம் என ஆர்வம் காட்டி வருவதையும் அறியாததுபோல அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். அமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாகவே அது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு விளக்கமளித்து பதிலடி கொடுத்திருப்பதால், தங்களின் அடுத்த அறிக்கையை தயாரிக்கும் நேரத்தில் அதனைக் காண வேண்டுகிறேன்.

    விமர்சனங்களை வரவேற்று எதிர்கொள்கின்ற ஆற்றல் மிக்க முதலமைச்சராக நம் திராவிட நாயகன் அவர்கள் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சரியான தரவுகளுடன் முன்வைக்கட்டும். மண்டபத்தில் யாரோ சொல்வதை நம்பி, அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார்.
    • என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?

    கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?

    பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் 'உறங்குவது ஏன்' என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?

    நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?

    தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?

    இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?

    ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?

    எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர்.

    ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே? எது தடுக்கிறது?

    என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?

    இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.
    • கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டது.

    கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக வாய் திறக்காதது குறித்து திமுக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூனுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். கீழடி குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார்.  

    • தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025.
    • தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம்.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணனின் ஆலோசகராக இருக்கும் நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல்.

    தமிழ்நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இக்கொள்கையை விமர்சிப்பதாக நினைத்து IIT வல்லுநர்கள், இளந்தமிழர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.

    அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
    • கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.

    அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

    2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

    இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

    டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

    இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×