என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்யும் இ.பி.எஸ்.: டி.ஆர்.பி. ராஜா பதிலடி
- மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன.
- அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.
தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகனின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளி விவரங்களுடன் பலமுறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.
அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.
முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி இவை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர் நமக்கு எதிர்கட்சித் தலைவராக வாய்த்திருக்கும் அவல நிலையில், அவருடைய அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி- இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.
தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் நம் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.






