என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2026 தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிற நாளாக அமையும்.
- பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள்.
கோபி:
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் 296 பிறந்த நாள் விழா, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், வேலு நாச்சியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கண்டவர் வேலு நாச்சியார். அப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரை தான் தமிழக வெற்றிக்கழக கொள்கை தலைவராக ஏற்று உள்ளோம்.
தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், 10க்கு 8 பேர், விஜயை ஆதரிக்கிறார்கள் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில், தலைசிறந்தவராக இருப்பவர் விஜய். தமிழக வெற்றிக்கழகம் வருகிற தேர்தலை சந்திக்கும் போது, மக்களால் மக்களாட்சி மலர்கின்ற நல்லாட்சியை கொடுக்கக் கூடிய தலைவர் விஜய். மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில் அனைவரும் பணிகளை ஆற்றி வருகிறோம்.
வெற்றி என்ற இலக்கை தமிழக மக்களால் உருவாக்குகிற காலம், நேற்றைக்கு முன்தினம் தொடங்கி உள்ளோம்.
2026 தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிற நாளாக அமையும்.
பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கின்ற தலைவராக, புதிய வரலாற்றைப் படைக்கின்ற தலைவராக விஜய் எதிர்காலத்தில் திகழப் போகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனு பெறுவது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்தான் முடிவு செய்வார்.
தி.மு.க. வெற்றி பெறுவதற்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை தந்தார்கள். இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் போராட்டம் வலிமை பெற்றுக் கொண்டுள்ளது.
பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள்.
ஒவ்வொரு இயக்கமும் ஒன்றிணைவது என்பது அவரவர்கள் முடிவு செய்யும் ஒன்று, பொறுத்திருந்துதான் அதை பார்க்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும். அவ்வாறு இணைப்பவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
மேலும், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி பேசுவது தமிழக வெற்றிக்கழகம் தான், அவ்வாறு இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
காய்கிற மரத்தில் கல்லடி படுவதைப் போல, வெற்றி என்ற முடிவை மக்களால் மிக விரைவில் தெரிவிக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்துதான், எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை, ஆளும் கட்சி எதிர்கட்சியின் குறைபாடுகளை சொல்வதில்லை, எல்லோரும் ஒருமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தை தாக்கி கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துக்களை பரிமாறலாம், பேச்சுவார்த்தை என்பது தலைவர் விஜய் உடன் கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும், பொறுத்திருந்து பாருங்கள், என்றார்.
- நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது.
தங்கம் விலை உச்சம் சென்று, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் தங்கம் விலை சரிந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.256-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640
1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
2-1-2026- ஒரு கிராம் ரூ.260
1-1-2026- ஒரு கிராம் ரூ.256
31-12-2025- ஒரு கிராம் ரூ.257
30-12-2025- ஒரு கிராம் ரூ.258
29-12-2025- ஒரு கிராம் ரூ.281
- மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
- தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்;
- தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.
சென்னை:
தமிழக அரசின் 'சி' 'டி' பிரிவு பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஓய்வூதியர்களில் யார் யாருக்கு போனஸ் தொகை வழங்கப்படும்? என்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலாமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித்தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள்; தற்காலிக மிகை ஊதியம், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்;
'ஏ', 'பி' பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்தியப் பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த போனஸ் உத்தரவு பொருந்தாது.
இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, கடந்த 1-ந்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு. அனுமதிக்கத்தக்கதல்ல.
'சி', 'டி' பிரிவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் அதாவது 1-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம்பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,
சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் (அதாவது ஓய்வூதியதாரர்கள், எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடையே மரணம் அடைந்திருந்தாலும்) அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
- தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை என்றார்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் 50-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அதன்பின் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கஞ்சா புழக்கத்திற்கு, மத்திய அரசுதான் காரணம் என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு பதில், காவல் துறையை என்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிடலாம்.
தன் தோல்வியை முதல்வர் ஒப்புக் கொண்டால், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்கிறேன்.
தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
இரு கோஷ்டியினரும் மாறி மாறி ஜால்ரா போடுகின்றனர். தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை.
காங்கிரஸ் விஜயோடு கூட்டணியாகச் சென்றால், சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என சொல்கின்றனர்.
இந்தியாவில் எப்படி காங்கிரஸ் என்ற கட்சி இல்லையோ, அதுபோல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பு அளவில் உள்ளது.
காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி; அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே சான்று.
வரும் சட்ட சபைத் தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசார் நடுத்தெருவில் நிற்பர். சீட் கேட்பது மட்டுமல்ல, பண பேரமும் நடக்கிறது என தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
- தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு.
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்தநிலையில் முதல் முறையாக இன்று அவர் சென்னை வந்தார்.
அவருக்கு தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்நிலையில், சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
- சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
- வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கே.மேட்டுப்பட்டியில் சரவணகுமாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஷகில் உசேன், ஷபிகுல் அலி ஆகியோர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.
- எம்ஜிஆர் 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார்.
- பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தீய சக்தி தி.மு.க-வினருக்கு புரட்சித் தலைவர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் திமுக-வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.
புரட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது, 1981-ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன.
1981-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த புரட்சித் தலைவரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் பெயரை வெட்கம் இல்லாமல் 2
கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், புரட்சித் தலைவர் பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, ஸ்டாலினுடைய மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்' என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து புரட்சித் தலைவரது படத்தை நீக்கிவிட்டால், புரட்சித் தலைவரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற புரட்சித் தலைவருக்கு, மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.
அரசியலைப் பயன்படுத்தி, ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் வஞ்சக நெஞ்சமும், நரித்தனமும் ஏற்கத்தக்கதல்ல. புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம்.
இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் புரட்சித் தலைவர் படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திரு. கருணாநிதியின் மொத்த குடும்பத்தையே வாழவைத்த இதய தெய்வம் புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைக்கும் திரு. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபடவும், மலையின் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று புத்தாண்டையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சபரிமலை சீசனையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் இன்று திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
- மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
- வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.
திருச்சி:
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-
பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.
108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.
அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.
அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.
இவ்வாறு அவர் பேசினார்.






