என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்தது.
அதன்படி, நேற்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலுவுடன், அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.
ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்புகளையும் தனித்தனியாக அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள் கூறுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஓய்வூதியம் குறித்த நல்ல புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அது என்னவிதமான ஓய்வூதியம்? என்பதை முதலமைச்சர்தான் தெரிவிப்பார். அதன் பிறகு அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டு, பின்னர் எங்களின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
* கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.
* 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
* பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.
* Tamil Nadu Assured Pension Scheme - TAPS செயல்படுத்தப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.
* பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.
* ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?
சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
* தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
* உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது.
* கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.
* தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.
* த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி.
* தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?
* தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது.
* முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
* கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
* கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
- சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரையில் புலியருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மழை குறைந்ததால் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் பங்கேற்றனர்.
அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான தேதி அட்டவணையை அறிவித்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
- எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
ஆசிரியர் போராட்டம் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நான் அவர்களிடம் பேசி வருகிறேன். திருச்சியில் முதலமைச்சர் இதுபற்றி என்னிடம் கேட்டார். தேர்தல் வாக்குறுதியை கேட்கிறார்கள் என்றேன்.
ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.
ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.
அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.
ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
- கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டில் திசம்பர் 31-ஆம் தேதி மது விருந்துடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும், அந்த நேரத்தில் நோயர்களுக்கு மருத்துவம் அளிக்க மருத்துவர்களோ, பிற பணியாளர்களோ இல்லை என்றும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதையை ஒழிப்பதற்கான அரசு மருத்துவமனைகளை போதையை வளர்க்கும் குடிப்பகங்களாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தமிழ்நாட்டில் கஞ்சா போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று மருத்துவத்துறை அமைச்சர் கூறுகிறார்; ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கஞ்சாச் செடி வளர்ந்திருப்பது கண்டறிந்து அகற்றப்படுகிறது. கட்டமைப்பு வசதிகள் வேகமாக ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்; ஆனால், நாமக்கல் மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் அதில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்திருக்கிறான். திமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுகளில் இவை சிலவாகும்.
மருத்துவமனையின் பிரசவ வார்டில் வைத்து மது அருந்தியவர்கள் யார்? அரசு மருத்துவமனையில் ஓராண்டுக்கும் மேலாக கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாமல் பழுதடைந்து கிடந்தது ஏன்? அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு இல்லாதது ஏன்? என்பதற்கான விடை அரசிடம் இல்லை. ஆனால், அங்கு பணியிலிருந்த 4 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதன் மூலம் அனைத்துத் தவறுகளையும் அவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்க திமுக அரசு முயல்கிறது. இத்தகைய சீர்கேடுகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து தெருக்களிலும் மதுக்கடைகள் நிறைந்திருப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதும் தான் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் ஆகும். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு திமுகவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். அது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும். மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.
- நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது.
- வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் பகுதி மலைப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் வாழை , முந்திரி மரங்கள், வேர்க்கடலை உள்ளிட்ட ஊடுபயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது.
இங்கு அதே பகுதியை சேர்ந்த நயினார் வேர்க்கடலை பயிரிட்டு இருந்தார். தற்போது வேர்க்கடலை முளைத்து வருவதால் அதிகளவில் பறவைகள் பயிர்களை நாசம் செய்து செல்வதால் காலை நேரங்களில் நயினார் தனது நிலத்திற்கு சென்று பட்டாசு வெடித்து விரட்டி விடுவது வழக்கம்.
அதே போன்று இன்று காலை வழக்கம் போல் நயினார் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்க சென்றபோது பெரிய அளவிலான உருவம் ஒன்று திடீரென்று வேகமாக சென்றது. நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நயினார் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஊர் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் இந்த தகவலை கூறினார்.
இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வன சரக அலுவலர் கேசவன் தலைமையில் வனவர் திலகராஜ், வன ஆர்வலர் செல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பகுதியில் பதிந்துள்ள கால் தடம் சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மிருகமா? என சோதனை மேற்கொண்டனர்.
இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
- காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.
- குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று இந்திய அளவில் கூறுகின்றனர்.
* போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.
* அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.
* ஒரு காவலர் செய்யும் நல்ல செயல் அந்த துறைக்கே பெருமையை ஏற்படுத்தி தரும்.
* வீரத்தின் விளை நிலம் என்பது அன்புதான்.
* காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
* புதிதாக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
* காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.
* காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை வெறும் வார்த்தைகளில் இல்லாமல் அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
* குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும் புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள்.
* பெண்கள், குழந்தைகள் குறித்த புகார்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
* குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.
* பணியில் இருக்கும் பகுதியில் சிறு குற்றம் கூட நடந்துவிடக்கூடாது என ஒவ்வொரு போலீசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* ஒரு காவலர் தவறு செய்தாலும் அது காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விடும்.
* போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு.
- எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், விமர்சனங்கள் சர்ச்சைகளாக மாறி வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் உட்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சியின் மக்களவை உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ராகுல் காந்தியின் தன்னலமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்கிறது என்பன உள்ளிட்ட மேலும் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடியில் ஜோதிமணி குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு. எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமியிடம் கேட்டபோது, தமிழக காங்கிரஸ் தலைமை மீது ஜோதி மணி எம்.பி., கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் அவர் டெல்லி தலைமையின் விருப்பத்தை தனது வார்த்தைகளால் வெடித்துள்ளார் என்று கருதுகிறேன்.
டெல்லி தலைமைக்கு தெரியாமல் இதை செய்ததாக நான் நினைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைமை மீது முன் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை அவர் வைத்ததில்லை என்றார். தமிழக காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஜோதிமணியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி அறிவித்தார்.
- அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்கடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழக மக்களில் ஒரு பிரிவினர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் மற்றும் இலவச அறிவிப்புகளை பார்த்தும் ஓட்டு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பல தேர்தல்களில் கதாநாயகன்களாகவே திகழ்ந்துள்ளன.
அந்த வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை சிறந்த முறையில் தயாரிப்பதற்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இப்படி தேர்தல் அறிக்கையை சிறப்பாக தயாரிப்பதற்காக அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி அறிவித்தார்.
இவர்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிவார்கள் என்றும் அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னணி நிர்வாகிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகை செல்வன் ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி. மு.க. தலைமைக் கழகத்தில் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களை கவரும் முறையில் தயாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன தகவல்களை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்கடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுப்பயண விவரங்களை திட்டமிடுவதற்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திட்டமிட்டு உள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைக்க உள்ளது.
இதன் பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில் இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.
- இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
- தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!
வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்!
இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது #DravidianModel அரசு.
அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்.
தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- இந்த சிறப்பு முகாம்கள் அடுத்த வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த நவ. 4-ந்தேதி முதல் டிச.14-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 27, 28-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் 27-ந்தேதி 2.56 லட்சம் பேர், 28-ந்தேதி 2.86 லட்சம் பேர் என மொத்தம் 5.43 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.37 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இதையடுத்து இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அத்துடன் உறுதிமொழி படிவத்தையும் வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005 காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுவதால் அவர்களுக்கு உதவி செய்வதற்காக தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களை வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும் நியமித்துள்ளனர். கம்ப்யூட்டர் அனுபவம் மிக்கவர்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களை செல்போனில் அழைத்து தாங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வருமாறு தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது தங்களுக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது 2002, 2005-ம் ஆண்டு பற்றிய தகவல்களை விண்ணப்ப படிவத்தில் நாங்கள் நிரப்பி கொடுப்பதற்கு தயாராக இருந்த நிலையிலும் அரசியல் கட்சியினர் சிலர் தலையிட்டு அதையெல்லாம் குறிப்பிட வேண்டியதில்லை என கூறியதன் காரணமாகவே எங்களது விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாமல் அளித்தோம். ஆனால் தற்போது உங்களது விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை என எங்களை செல்போனில் அழைத்து பேசுவதன் மூலம் இந்த தேர்தலில் ஓட்டு போடாமலேயே விட்டு விடலாமோ என்கிற மனநிலையும் ஏற்படுகிறது என்று வாக்காளர் ஒருவர் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
இது பற்றி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே பொதுமக்களை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கேட்கிறோம் என்றும், எந்த வகையிலும் நாங்கள் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த சிறப்பு முகாம்கள் அடுத்த வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதேபோன்று 17,18 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படுகிறது. 18-ந்தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.






